பாக்லீகர்கள் (Bahlikas) (இந்தி: बाह्लिक) இந்து தொன்மவியலின் படி பரத கண்டத்திற்கு மேற்கில், கிழக்கு பாரசீகத்தின் வடக்கில் இருந்த பாக்திரியா நாட்டு மக்கள் ஆவார். பாக்லீகர்கள் குறித்து அதர்வண வேதம், புராணங்கள் மற்றும் மகாபாரத இதிகாசத்தில் நிறைய குறிப்புகள் உள்ளது.[1] பாக்லீகர்களின் புகழ்பெற்ற மன்னர் பாக்லீகர் ஆவார்.
பாக்லீகர்கள் பாக்திரியா நாட்டின் ஆமூ தாரியா (river Oxus) பாயுமிடங்களில் வாழ்ந்தாகவும், பின்னர் பஞ்சாப் சமவெளியில் குடியேறினர். பாக்லீகர்களின் ஒரு பிரிவினர் சிந்து ஆறு கடலில் கலக்குமிடமான சௌவீர நாடு மற்றும் ஆபீர நாடு, சௌராட்டிர நாட்டிலும் குடியேறினர்.
கி பி நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தர் காலத்திய தில்லி இரும்புத் தூணில், பாக்லீகர்கள் சிந்து ஆற்றிற்கு மேற்கில் சிந்து சமவெளியில் குடியிருந்தவர்கள் என்றும், சிந்து ஆற்றின் ஏழு முகத்துவாரங்களைக் கடந்து, கிழக்கே வந்த பாக்லீகர்களை சந்திரகுப்தர் வென்றதாக குறிப்புகள் உள்ளது.[2]
காஷ்மீர நாட்டின் தெற்கில், பஞ்சாப் சமவெளியின் மத்திர நாட்டு மன்னர் சல்லியனை பாக்லீகர்களின் முன்னோடி என மகாபாரதம் வர்ணிக்கிறது.[3][4]
பாக்லீகர்களின் குலத்தில் பிறந்த மத்திர நாட்டு இளவரசி மாத்திரி ஆவாள். குரு நாட்டின் இளவரசன் பாண்டுவை மணந்தவள் மாத்திரி. மாத்திரி பாண்டவர்களில் இரட்டையரான நகுல - சகாதேவர்களின் தாயாவாள்.[5]
கோசல நாட்டிலிருந்து பஞ்சாப் சமவெளியின் பாக்லீக நாட்டைக் கடந்து கேகய நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற குறிப்பு இராமாயணத்தில் உள்ளது. இதன் மூலம் பாக்திரியா நாட்டு பாக்லீக மக்கள் பஞ்சாப் சமவெளியில் குடியேறினார்கள் எனத் தெரியவருகிறது.[6][7]
தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பஞ்சாப் மாநிலங்களில் வாழும் பாஹ்லீகர்களின் நேரடி வழித்தோன்றல்கள், தங்கள் பெயரின் பின்னால் பாஹ்லீ அல்லது பெஹில் என்ற குடும்பப் பெயரை இட்டுக் கொள்கின்றனர். மங்கோலியர்கள், ஹூணர்கள் மற்றும் ஹெப்தலைட்டுகளின் தொடர் தாக்குதல்களால் பாஹ்லீகர்கள் பாக்த்திரியா பகுதிகளிலிருந்து, தற்கால பாகிஸ்தானின் ஐந்து ஆறுகள் பாயுமிடங்களில் குடியேறினர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாஹ்லீகர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் குடியேறினர்.
பாக்திரியா நாட்டின் பாக்லீகர்கள் மூன்றாவது புகழிடமாக மேற்கு இந்தியாவின், சௌராட்டிர நாட்டிற்கு அருகில் குடியேறினர். பாக்லீகர்கள், சௌராட்டிர மக்கள் மற்றும் ஆபீர நாட்டவர்களுடன் நெருங்கி வாழ்ந்ததான குறிப்புகள் இராமயணத்திலும், பத்ம புராணத்திலும் உள்ளது. புராணங்களின் படி பாக்லீகர்களின் ஒரு கிளையினர் விந்திய மலைத்தொடர்களில் ஆட்சி செய்தனர்.[8][9]
குரு நாட்டின் மன்னர் பிரதிபனின் நடு மகனும், சந்தனுவின் தம்பி ஒருவன், அத்தினாபுரத்தை விட்டு வெளியேறி, தன் தாய்மாமன் வாழ்ந்த பாஹ்லீக நாட்டை அடைந்து இளவரசு பட்டம் சூட்டிக் கொண்டார். எனவே இவனுக்கு பாஹ்லீகன் எனப் பெயராயிற்று. சந்தனுவின் மகனான பீஷ்மருக்கு, பாஹ்லீகன் சித்தப்பா ஆவார்.
தருமன் இந்திரப்பிரஸ்தம் நகரில் இராசசூய வேள்வியின் பாஹ்லீக நாட்டு மன்னர் பத்தாயிரம் கோவேறு கழுதைகளும்; கணக்கற்ற கம்பளிப் போர்வைகளும்; ஆடுகளையும் பரிசாக வழங்கினார். (சபா பருவம் 2.50) மேலும் ஒரு தங்க இரதமும்; நான்கு காம்போஜக் குதிரைகளும் பரிசாக வழங்கினார். (2.53.5).
குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட பாக்லீக மன்னரை மிக வலு மிக்கவன் எனப் போற்றப்படுகின்றான்.[10] . பாக்லீகரின் மகன் சோமதத்தன், பேரன் பூரிசிரவஸ் ஆகியவர்களும் ஒரு அக்குரோணி படைகளுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். பாஹ்லீகர்களின் அரசனான பூரிசிரவஸ் கௌரவப் படைகளின் 11 படைத்தலைவர்களில் ஒருவனாக நியமிக்கப்பட்டான்.[11] போரில் சாத்தியகி தன் வாளால் பூரிசிரவசைக் கொன்றான்.
சமஸ்கிருத அகராதியான அமரகோசத்தில் பாக்லீக மற்றும் காஷ்மீர நாடுகளின் அரிய குங்குமப்பூ குறித்த குறிப்புகள் உள்ளது.[12]
வேதத்தின் பகுதியான பிரகத் சம்ஹிதையில் பாக்லீகர்களை, காந்தாரர்கள், சீனர்கள், வைசியர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.
கி பி பத்தாம் நூற்றாண்டில் இராஜசேகரன் எழுதிய காவ்யமீமாம்சா எனும் நூலில் பாக்லீகர்களை, சகர்கள், தூஷ்ரர்கள், ஹூணர்கள், காம்போஜர்கள், பகலவர்கள், துருக்கர்களுடன் பட்டியலிட்டு, இம்மக்கள் பரத கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.[13]
முத்ரா ராக்ஷஸம் எனும் சமஸ்கிருத நூலில் மகத நாட்டுப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், பாக்லீகர்கள், சகர்கள், காம்போஜர்கள், கிராதர்கள், யவனர்கள் கொண்ட படைப்பிரிவை வைத்திருந்தான் எனக் கூறுகிறது.[14][15][16][17][18]
காம்போஜ நாடு போன்று பாக்லீகர்களின் நாடான பாக்திரியாவிலும் உயர்சாதிக் குதிரைகளுக்கு பெயர் பெற்றது. பாக்லீகர்கள் குதிரைகளைப் போரில் ஈடுபடுத்தவும், தேர்களை இழுக்கவும் நன்கு பயிற்றுவித்தனர்.