பாடாங் பெசார் | |
---|---|
Padang Besar | |
பெர்லிஸ் | |
அடைபெயர்(கள்): கடைவலச் சொர்க்கம் | |
ஆள்கூறுகள்: 6°39′38″N 100°19′18″E / 6.66056°N 100.32167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
உருவாக்கம் | 1820 |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | காவ் ஆக் கோங் (Khaw Hock Kong) |
ஏற்றம் | 27 m (89 ft) |
உயர் புள்ளி | 810.2 m (2,658.1 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | ஏறக்குறைய 10,000 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 02100 |
மலேசியத் தொலைபேசி எண் | +604 |
பாடாங் பெசார் (மலாய்: Padang Besar P.B.; ஆங்கிலம்: Padang Besar); என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு.
கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[1]
இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[2]
பழைய பாடாங் பெசார் சாலைக்குப் பதிலாக புதிய வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) பாடாங் பெசார் நகரத்துடன் இணைக்கப்பட்டது. இது தாய்லாந்து எல்லையை எளிதாகக் கடக்க வழிவகுத்தது. மலேசியாவின் இந்த வடக்கு-தெற்கு விரைவுசாலை சாலை; தாய்லாந்தின் சதாவோ நெடுஞ்சாலையுடன் நேரடியாக இணைந்தது.
1970-ஆம் ஆண்டுகளில், மலேசியா; தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும், தங்களின் பொதுவான எல்லையில் தடுப்புச் சுவர்களைக் கட்டின.
பெர்லிஸ் / சாத்தூன் வளாகம்; பெர்லிஸ் / சோங்லா வளாகம்; மற்றும் கெடா / சோங்லா வளாகம்; ஆகிய எல்லை வளாகங்களில் தீவிரமாக இயங்கி வந்த கடத்தல்களைக் கட்டுப்படுத்த சிமெண்ட், எஃகு கலவை; முள்வேலி; இரும்பு வேலிகள் கொண்ட சுவர்கள் எழுப்பப்பட்டன.
இரு நாடுகளும் தங்களின் சொந்த எல்லைக்குள்; தங்களின் சொந்தச் சுவர்களை சிறிது இடைவெளி விட்டு கட்டின. அந்த வகையில் சுமார் 10மீ அகலம் உள்ள ஒரு துண்டு இடைவெளி உருவானது. எந்த மனிதனுக்கும் சொந்தம் இல்லாத நிலம் no-man's-land என்று அழைக்கப் பட்டது.
அதனால் இந்த நிலப் பகுதி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வசதியான அடைக்கலமாகவும் மாறியது. அங்கு நடைபெற்று வந்த அனைத்துக் கடத்தல்களையும் எல்லைச் சுவர்களினால் தடுக்க இயலவில்லை.
2001-ஆம் ஆண்டில், இரு நாடுகளின் எல்லையில் ஒரே ஒரு சுவரை மட்டும் கட்டுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. அந்தச் சுவர் தாய்லாந்து எல்லைக்குள் அமைந்தது. புதிய எல்லைச் சுவர் 2.5 மீ உயரம் கொண்டது. சுவரின் கீழ் பாதி வரையில் திண்கரை; மேல் பாதியில் எஃகு முள்வேலி. அடிவாரத்தில் முள்வேலி சுவர்கள்.
சுவர் நிர்மாணிப்பதற்கு கடத்தல் மற்றும் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கான காரணங்கள் சொல்லப்பட்டன. இருந்தாலும், பாதுகாப்பு காரணங்கள் தான் முக்கியமான காரணங்கள்.
1970-ஆம் ஆண்டுகள்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மலேசிய கம்யூனிஸ்டு குழுக்கள் மலேசியா தாய்லாந்து எல்லைப் புறங்களில் செயல்பட்டு வந்தன. மற்றும் 1990-ஆம் ஆண்டுளில் தெற்கு தாய்லாந்தில் சில கிளர்ச்சிக் குழுக்களின் செயல்பாடுகளும் தீவிராமாக இருந்தன.
அந்தக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கமே மலேசியா - தாய்லாந்து எல்லைச் சுவர் நிர்மாணிப்பதற்கான தலையாயக் காரணமாக அமைந்தது.
முன்பு காலத்தில் விவசாயத் துறைதான் பாடாங் பெசார் உள்ளூர் குடிமக்களுக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய துறையாக இருந்தது. ஆனால் அந்தப் பழைய விவசாயத் துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போது சுற்றுலா, அனைத்துலக வர்த்தகம் மற்றும் தளவாடத் துறைகள் தான் மிக முக்கியமான இலாபம் தரும் துறைகளாக விளங்குகின்றன.
பாடாங் பெசார் தொழில் பகுதி, பெர்லிஸ் மாநிலத்திலேயே மிக முக்கியமான தொழில் பகுதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது.
1960-ஆம் ஆண்டு தொடங்கி பாடாங் பெசார் பிரபலமான கடைவலச் சொர்க்கமாக விளங்கி வருகிறது. இந்த நகரத்திற்கு மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் இருந்தும் சுற்றுலா வணிக நோக்கங்களுக்காகப் பொதுமக்கள் அடிக்கடி வந்து போகிறார்கள்.[3]
இப்போது எல்லாம், இந்த நகரத்திற்கு ஒவ்வொரு வார இறுதியிலும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் தீபகற்ப மலேசியா மற்றும் தென் தாய்லாந்து பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள்.[4]
2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பாடாங் பெசார் நகரத்தின் மக்கள் தொகை 13,748. ஆகும். இனங்களின் அடிப்படையில் மக்கள் தொகை அமைப்பு:
மலாய்க்காரர்கள்: 73.52%
சீனர்கள்: 23.23%
இந்தியர்கள்: 2.82%
மற்றவர்கள்: 0.59% - பெரும்பான்மையானவர் தென் தாய்லாந்தைச் சேர்ந்த தாய்லாந்து முஸ்லிம்கள்.