பாண்டிய நாடு (Pandiya Nadu) என்பது இன்றைய தமிழ்நாட்டின் தென்பகுதியை உள்ளடக்கிய புவியியல் பகுதியாகும். இப்பகுதி அதன் மேற்கில் வேணாடு/ஆய் நாடு, வடகிழக்கில் சோழ நாடு, வடமேற்கில் கொங்கு நாடு ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. இது இன்றைய மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களையும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.[1][2]
இப்பகுதி பாண்டிய வம்சத்தின் முக்கிய வரலாற்று இடமாக இருந்தது. அவர்கள் இப்பகுதிகளை குறைந்தது கிமு நான்காம் நூற்றாண்டு முதல் கிபி 1759 வரை ஆட்சி செய்தார்.[3] பாண்டியர் ஆட்சியில் கலாச்சார மற்றும் அரசியல் மையமாக செயல்பட்டது மதுரை நகரமாகும். பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில், மதுரையே தலைநகராக இருந்தது. கொற்கை இரண்டாம் நிலை தலைநகராகவும், ஆரம்பகால வரலாற்று காலத்தில் முக்கிய துறைமுக நகரமாகவும் இருந்தது.[4] இது இந்தியப் பெருங்கடல் வழியாக மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கிடையேயான வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு கேரளா மற்றும் இலங்கையுடன் நெருங்கிய கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது.
கிபி மூன்றாம் நூற்றாண்டில் சங்க காலம் முடிந்த பிறகு, பாண்டிய நாடு களப்பிரரால் கைப்பற்றப்பட்டது. பாண்டிய நாட்டை கடுங்கோன் கைப்பற்றி முதல் பாண்டிய பேரரசை நிறுவும் வரை களப்பிரர்களின் ஆக்கிரமிப்பின் கீழே இப்பகுதி இருந்து வந்தது. இடைக்காலச் சோழர்கள்கள் 10 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களிடமிருந்து இப்பகுதியைக் கைப்பற்றி அதற்கு ராஜராஜ பாண்டிமண்டலம் என்று பெயர் மாற்றினர். இரண்டாம் பாண்டியப் பேரரசின் எழுச்சியிலிருந்து இப்பகுதி மீண்டும் சுதந்திரமடைந்தது. இதன் பிறகு தமிழகத்தில் ஆதிக்க சக்தியாக பாண்டிய நாடு சிலகாலம் இருந்தது. இது பின்னர் தில்லி சுல்தான்களின் படையெடுப்புக்கு ஆளாகியது. இதன் விளைவாக மதுரை சுல்தானகம் ஏற்பட்டது. பாண்டியர்கள் வைகைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கித் நகரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். மதுரை சுல்தானகம் பின்னர் விஜயநகரப்பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணால் வீழ்த்தபட்டது. அதன்பிறகு இப்பகுதி பாண்டிய ஆட்சியாளர்கள் விஜயநகரப் பேரரசிற்கு கீழ்ப்பட்ட இராச்சியங்களில் ஒன்றாக மாறியது. 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசு வீழ்சியடைந்த பிறகு, மதுரை நாயக்கர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவித்து மதுரையிலிருந்து ஆண்டுவந்தனர். பின்னர் ஆற்காடு நவாப்பால் இப்பகுதி கைப்பற்றபட்டு, அவர்களிடமிருந்து 17ஆம் பிரித்தானியர்கள் கைக்கு வந்தது. அதன் பிறகு இப்பகுதி மதராஸ் மாகாணத்துடன் பிரித்தானியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.[4] 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், மதராஸ் மாகாணம் 'மதராஸ் மாநிலம்' என மாறியது. பின்னர் அது "தமிழ்நாடு" என மறுபெயரிடப்பட்டது.
பண்டைய தமிழகத்தின் முடியரசர்களான மூவேந்தர்களில் ஒருவரான பாண்டிய மரபினரின் பெயரால் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்டது. பாண்டிய அல்லது பாண்டி என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் பற்றி, அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் இந்த சொற்களின் சரியான பொருள் உழவு, காளை அல்லது பழைய/பண்டைய என்பதற்கான பழைய தமிழ் சொற்களைக் குறிக்கலாம் எனப்படுகிறது.
தமிழக வரலாற்றின் பல்லவர், சோழர் காலத்தில் தமிழ்நாடு என்றும் சொல் முதலில் பாண்டிய நாட்டை மட்டுமே குறிப்பதாக இருந்தது என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். 1300 ஆண்டுகளுக்கு முன்பு திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தனித்தனியே பாண்டிய நாடு போனதைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடும்போது தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார் (நாவுக்கரசர் புராணம் – பாடல் எண்- 289) என்றும், `வாகீசர் மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார் (பாடல் எண்- 400) என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது என்கிறார்.[5]