பாதுரியகட்டா | |
---|---|
கொல்கத்தாவின் அண்மைப்பகுதி | |
![]() பாதுரியகட்டாவின் வீதி | |
![]() | |
ஆள்கூறுகள்: 22°35′22″N 88°21′17″E / 22.5895°N 88.3548°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நகரம் | கொல்கத்தா |
மாவட்டம் | கொல்கத்தா |
பெருநகர நிலையம் | கிரிசுப் பூங்கா மற்றும் சோபாபசார் சுதானூட்டி |
மாநகராட்சி | கொகத்தா மாநகராட்சி |
பகுதி | பகுதி எண். 24 |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | For population see linked KMC ward page |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 700006 |
இடக் குறியீடு | +91 33 |
மக்களவைத் தொகுதி | வட கொல்கத்தா |
சட்டமன்றத் தொகுதி | சியாம்புகூர் சட்டமன்றத் தொகுதி |
பாதுரியகட்டா (Pathuriaghata) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா மாவட்டத்தில் வடக்கு கொல்கத்தாவின் அண்மைப்பகுதியாகும். இது சுதானூட்டியில் இருந்த மிகப் பழமையான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் வங்காளப் பணக்காரர்களின் தங்குமிடமான இந்தப்பகுதி, மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்போது மார்வாடிகளின் ஆதிக்கத்தில் உள்ளன.
இந்தப்பகுதியில் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற குடியிருப்பாளர்களில் தாகூர் குடும்பமும் அடங்குவர். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கிலேயர்கள் புதிய வில்லியம் கோட்டை கட்டியபோது, ஒரு வணிகராகவும், சந்தன்நகரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு திவானாகவும் ஒரு பெரிய செல்வத்தை குவித்த ஜெயராம் தாகூர், கோவிந்தபூரிலிருந்து பாதுரியகட்டாவுக்கு மாறினார். தாகூர் குடும்பத்தின் நிறுவனர் என பலரால் கருதப்படும் இவரது மகன் தர்பநாராயண தாகூர் (1731-1793) பெயரில் ஒரு சாலை இங்கு அமைந்துள்ளது. இது கொல்கத்தா மாநகராட்சியின் 21 வது வார்டில் உள்ள மகரிசி தேபேந்திர சாலைக்கும் ஜாதுலால் முல்லிக் சாலைக்கும் இடையில் உள்ளது. அது பாதுரியகட்டாவிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. ஜோராபகன் காவல் நிலைய எல்லையில் உள்ளது. [1] [2] தாகூர் குடும்பம் பாதுரியகட்டா, ஜோராசங்கா, கைலாகட்டா மற்றும் சோர்பகன், வடக்கு கொல்கத்தாவில் உள்ள அனைத்து சுற்றுப்புறங்களிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது. [3]
பாதுரியகட்டாவில் தங்கியிருந்தவர்களில் ஹரகுமார் தாகூர் (1798-1858), பிரசன்ன குமார் தாகூர் (1801-1886), ஜதிந்திரமோகன் தாகூர் (1831 - 1908) மற்றும் பிரத்யோத் குமார் தாகூர் (1873 - 1942) ஆகியோர் முக்கியமானவர்கள். பிரசன்னா குமார் தாகூர் நாப்தேகட்டாவில் ஒரு பெரிய மாளிகையை கட்டி அதற்கு 'அரண்மனை' என்று பெயரிட்டார். மக்கள் இதை 'தாகூர் அரண்மனை' என்று அழைத்தனர். ஜதிந்திரமோகன் தாகூர் இந்தியாவில் குடியிருப்பினை கட்டும் பணியை மேற்கொண்டார். இவர் ஒரு ஆங்கில அரண்மனையின் கோட்டையின் மாதிரியைக் கொண்டு ஒரு மாளிகையை வடிவமைத்தார். இது இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையின் பாணியில் 100 அடி (30 மீ) உயரமான மைய கோபுரத்தைக் கொண்டிருந்தது. பிக் பென்னை நினைவுபடுத்தும் வகையில் ஒரு கடிகாரம் இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்தின் கொடியை பறக்கவிட இவருக்கு அனுமதி இருந்தது. 1954 இல், ஹரிதாஸ் முந்த்ரா என்பவரின் நிறுவனம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தியது. மேலும் இதன் பெரும்பகுதியை மாற்றியுள்ளது. [4] தற்போது குஞ்ச் பிகாரி அகர்வால் என்பவர் ஐங்கு வசிக்கிறார்.
தாகூர் கோட்டை ஒரு நாடக அரங்கமாக இருந்தது. மேலும் 1859 முதல் 1872 வரை தாகூர்கள் இங்கு வங்க நாட்டியாலயத்தை ஆதரித்தனர். இதை நாடக ஆர்வலர்களான ஜதிந்திர மோகன் தாகூர் மற்றும் அவரது சகோதரர் சௌரேந்திர மோகன் தாகூர் ஆகியோர் தொடங்கினர். 1859 சூலையில் சமசுகிருதத்தில் காளிதாசனின் மாளவிகாக்கினிமித்திரம் இங்கு அரங்கேற்றப்பட்டது. [5]
பாதுரியகட்டாவைச் சேர்ந்த ஜோகேந்திர மோகன் தாகூர், ஈசுவர் சந்திர குப்தாவுக்கு 'சம்பத் பிரபாகர்' என்ற இதழை வெளியிட உதவினார். முதலில் 1831 சனவரி 28 முதல் வாராந்திரமாக வெளிவந்தது. சிலகாலம் சென்ற பிறகு, இது தினசரி ஆனது. மேலும் நவீன வங்காள சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
பிரசன்னா குமார் தாகூர் தெருவில் உள்ள தாகூர் கோட்டையின் கோபுரங்களுக்கு அடுத்ததாக பாரம்பரியத்தில் முதலிடம் வகிக்கும் முல்லிக் குடும்பத்தின் வீடு உள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக மூன்று பெரிய கட்டமைப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன. அவற்றில் ஒன்று 1887 இல் நிறுவப்பட்ட பெருநகரப் பள்ளியின் புர்ராபசார் கிளை ஆகும். [6] ஜாதுலால் முல்லிக் (1844-1894) என்பவர் சமூக மற்றும் சட்டத் துறைகளில் ஏராளமான பங்களிப்புகளைக் கொண்டிருந்தார். ஓரியண்டல் பள்ளிக்கு பெருமளவில் நன்கொடை அளித்தார். [7] ஜாதுலால் முல்லிக் என்பவர் பெயரில் இப்பகுதியில் ஒரு சாலை உள்ளது. தொண்டு நோக்கங்களுக்காக முல்லிக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். [8] .
கோசு குடும்பத்தினர் வாரன் ஹேஸ்டிங்ஸின் காலத்தில் கேசவப்பூரிலிருந்து பாதுரியகட்டாவுக்கு வந்தனர். வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் அவரது மனைவி கோசு குடும்பத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. [9] ஹேஸ்டிங்கின் எழுத்தர் இராம்லோகன் கோசின் பேரனான கெலத் சந்திர கோசு (1829-1878) 46 பாதுரியகட்டா தெருவில் உள்ள பழைய குடும்ப வீட்டிலிருந்து வெளியேறி 47 பாதுரியகட்டா தெருவில் ஒரு புதிய வீட்டிற்கு சென்றார். குடும்பம் இசை மற்றும் தொண்டுப் பணிகள் ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பை வழங்கியது. [10] இந்த மாளிகையில் பளிங்கு சிற்பங்கள், ஓவியங்கள், படிக சரவிளக்குகள் மற்றும் பிற கலை பொருட்கள் ஆகியவை உள்ளன.
பாதுரியகட்டா தெருவில் உள்ள கோசு குடும்பத்தின் அரங்குகளில், அனைத்து வங்காள இசை மாநாடு 1937 இல் நடத்தப்பட்டது. இந்திய பாரம்பரிய இசை அப்போது ஒரு புதிய கலை வடிவமாக இருந்தது. மன்மநாதநாத் கோஸ் (1908 - 1983), புகழ்பெற்ற இசைக்கலைஞரான கிராபாய் பரோடேகரை தனது மனைவியின் எதிர்ப்பையும் மீறி தனது வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். மேலும் புகழ்பெற்ற சித்தார் மேதை ரவிசங்கர் தனது குரு அல்லாவுதீன் கானை இங்கு சந்தித்தார். துர்கா பூசை மற்றும் அதன் மரபுகள் தொடர்ந்து குடும்பத்தின் தற்போதைய உறுப்பினர்களால் பின்பற்றப்படுகின்றன. [11]
பிரபல சுதந்திர போராட்ட வீரர் ஜதிந்திரநாத் முகர்ஜி (பாகாஜதீன்) நிறுவிய 'அனுசீலன் சமிதியின்' கிளையான பாதுரியகட்டா பேயம் சமிதி இங்கு அமைந்துள்ளது. இச்சமிதி கொல்கத்தாவின் முதல் காளி பூசையை ஏற்பாடு செய்தது.