பாபுசர் கணவாய் | |
---|---|
درہ بابوسر | |
ஏற்றம் | 4,173 மீ (13,691 அடி) |
Traversed by | ![]() |
அமைவிடம் | ககன் பள்ளத்தாக்கு, மன்சேரா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 35°8′46.46″N 74°2′53.41″E / 35.1462389°N 74.0481694°E |
பாபுசர் கணவாய் (Babusar Pass) அல்லது பாபுசார் டாப் ( Babusar Top) (உயரம் 4,173 மீட்டர்கள் or 13,691 அடிகள் ) [1] [2] என்பது பாக்கித்தானின் வடக்கே 150 கிமீ (93 மைல்கள்) நீளமுள்ள ககன் பள்ளத்தாக்கின் ஒரு மலைப்பாதையாகும் இது காரகோரம் நெடுஞ்சாலைலையில் சிலாசுடன் தக் நலா வழியாக இணைக்கிறது. ககன் பள்ளத்தாக்கின் மிக உயரமான இடமாகவும் இது உள்ளது. தானுந்துகளால் இதனை எளிதில் அணுக முடியும்.
பாபுசர் கணவாய் கைபர் பக்துன்வாவை கில்கிட்-பால்டிஸ்தானுடன் இணைக்கிறது. [3] பாக்கித்தானின் மிகவும் ஆபத்தான பாதைகளில் இதுவும் ஒன்றாகும். உலகிலேயே மிகவும் ஆபத்தான மலைச் சரிவுகளால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் பல மரணங்கள் நிகழ்கின்றன. [3] 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாயப் பேரரசர் பாபுர் இந்தப் பகுதி வழியாகச் சென்றதால் உருவான பாபுசர் டாப் முதலில் பாபர் டாப் என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், தற்போது இது பொதுவாக பாபுசர் டாப் என்று குறிப்பிடப்படுகிறது. [4]
கோடை காலத்தில் (மே முதல் செப்டம்பர் வரை) ககன் பள்ளத்தாக்கு சிறப்பானதாக இருக்கும். மே மாதத்தில், அதிகபட்ச வெப்பநிலை 11 °C (52 °F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 °C (37 °F) ஆகவும் இருக்கும். சூலை நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் இறுதி வரை நரனுக்கு அப்பால் உள்ள பாதை பாபுசார் கணவாய் வரை திறந்திருக்கும். இருப்பினும், மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. ககன் பகுதியை இஸ்லாமாபாத் அல்லது பெசாவர் நகரங்கள் வழியாக சாலை வழியாக அணுகலாம்.
காஷ்மீரில் இருந்து மன்சேரா மாவட்டத்திற்குள் நுழையும் மலைத்தொடர்கள் மாபெரும் இமயமலையின் கிளைகள் ஆகும். ககன் பள்ளத்தாக்கில், பாபுசர் டாப் உட்பட மலை அமைப்பு மிக உயரமானது. குன்கர் ஆற்றின் வலது கரையில் இந்த மலைத்தொடர் உள்ளது. மேலும் இது 17,000 அடிக்கு மேல் உயரமான மாலிகா பர்பத் என்று அழைக்கப்படும் ஒரு சிகரத்தைக் கொண்டுள்ளது. [5] இது பள்ளத்தாக்கிலேயே மிக உயரமானது கூட. [6]
மலைகளில் புல்வெளிகளும் காணப்படுகின்றன. இங்கு குஜ்ஜர்கள் மற்றும் பிற நாடோடிகள் கோடையில் தங்கள் செம்மறி ஆடுகள் மற்றும் பிற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவதன் மூலம் இடம்பெயர்கின்றனர். இங்கும், ககன் போன்று, அடர்ந்த காடுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இருப்பினும், விரிவான சுரண்டல் காரணமாக, அடர்ந்த காடுகள் பொதுவாக அணுக முடியாத பகுதிகளில் காணப்படுகின்றன.