பாமிதா ரியாஸ் | |
---|---|
![]() பாமிதா ரியாஸ் | |
இயற்பெயர் | فہمیدہ ریاض |
பிறப்பு | மீரட், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) | 28 சூலை 1946
இறப்பு | 21 நவம்பர் 2018 இலாகூர், பஞ்சாப், பாக்கித்தான் | (அகவை 72)
தொழில் | உருது கவிஞர், எழுத்தாளர் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியர் (1946-47) பாகிஸ்தானியர் (1947-2018) |
இலக்கிய இயக்கம் | முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோதாவரி காட்-இ மர்முஸ் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | செயல்திறனின் பெருமை விருது (2010) அல்-முப்தான் விருது |
பாமிதா ரியாஸ் (Fahmida Riaz) (28 ஜூலை 1946-21 நவம்பர் 2018) ஓர் உருது எழுத்தாளரும், கவிஞரும் மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த ஆர்வலரும் ஆவார்.[1] கோதாவரி, காட்-இ மர்முஸ், கானா இ ஆப் ஓ கில் போன்ற பல புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். மேலும் ஜலாலுதீன் ரூமி எழுதிய மஸ்னவி என்ற இலக்கிய படைப்பை பாரசீகத்திலிருந்து உருது மொழிக்கு மொழிபெயர்த்தார். 15 க்கும் மேற்பட்ட புனைகதை மற்றும் கவிதை புத்தகங்களை எழுதிய இவர் சர்ச்சைகளின் மையமாக இருந்தார். இவரது இரண்டாவது வசனத் தொகுப்பான பதன் தரீதா வெளிவந்தபோது, இவர் தனது படைப்புகளில் பாலின வெளிப்பாடுகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதுவரை இவரது வசனத்தில் நிலவிய கருப்பொருள்கள் பெண் எழுத்தாளர்களுக்கு தடைசெய்யப்பட்டவையாக கருதப்பட்டன.[2] ஷா அப்துல் லத்தீப் பிடாய் மற்றும் ஷேக் அயாஸ் ஆகியோரின் படைப்புகளை சிந்தியிலிருந்து உருது மொழிக்கு மொழிபெயர்த்தார். பாக்கித்தான் நாட்டின் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக்கின் மத கொடுங்கோன்மையிலிருந்து தப்பியோடிய பாமிதா ரியாஸ், இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகள் இங்கேயே கழித்தார்.[3][4]
இவரது, அப்னா ஜுர்ம் சபித் ஹே என்ற கவிதைத் தொகுப்பில் சியா-உல்-ஹக்கின் சர்வாதிகாரத்தின் கீழ் தனது தாயகத்தின் அனுபவத்தை பிரதிபலித்திருந்தார். சிமோன் த பொவார், நசீம் இக்மெட், பாப்லோ நெருடா மற்றும் இழான் பவுல் சார்த்ர ஆகியோருடன் பாமியா ரியாஸும் ஒப்பிடப்படுகிறார்.
பாமிதா ரியாஸ், அவாஸ் என்ற தனது சொந்த உருது வெளியீட்டைத் தொடங்குவதற்கு முன்பு கராச்சி நகரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் தாராளவாத மற்றும் அரசியல் ரீதியான உள்ளடக்கம் சியா சகாப்தத்தில் கவனத்தை ஈர்த்தது. பாமிதா மற்றும் இவரது கணவர் உஜான் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதழ் மூடப்பட்டது. மேலும் உஜான் சிறையில் அடைக்கப்பட்டார்.[5]
பாமிதா ரியாஸ் தனது அரசியல் சித்தாந்தத்தின் காரணமாக சவால்களை எதிர்கொண்டார். பாக்கித்தானின் அரசுத் தலைவர் சியா-உல்-ஹக்கின் சர்வாதிகார ஆட்சியின் போது இவருக்கு எதிராக 10 க்கும் மேற்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.[2] பாக்கித்தான் தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவின் கீழ் இவர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது.[6] இவரும் இவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இவரது ஆதரவாளர் ஒருவரால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த நேரத்தில் இந்தியாவிலிருந்து கவிதைகளை படிப்பதற்கான முசைரா அழைப்பு வந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட இவர் தனது சகோதரி மற்றும் இரண்டு சிறிய குழந்தைகளுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இவரது நண்பரும், புகழ்பெற்ற கவிஞருமான அம்ரிதா பிரீதம், பாமிதா ரியாஸ் சார்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் பேசி இந்தியவில் தஞ்சம் அடைய வைத்தார்.[6]
பாமிதாவிற்கு இந்தியாவில் உறவினர்கள் இருந்தனர். இவரது குழந்தைகள் இங்கேயே பள்ளிக்குச் சென்றனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இவரது கணவர் இவருடன் இந்தியாவில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் இந்தியாவிலிருந்த குடும்பம் பெனாசீர் பூட்டோவின் திருமண வரவேற்புக்கு முன்னதாக பாக்கித்தானுக்கு திரும்பினர். இந்த நேரத்தில், பாமிதா தில்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கவிஞராக இருந்தார். அங்குதான் இவர் இந்தி படிக்கக் கற்றுக்கொண்டார்.[7] நாடு திரும்பிய இவர் பாக்கித்தானில் ஒரு அன்பான வரவேற்பைப் பெற்றார்.
மார்ச் 8,2014 அன்று, இந்தியாவில் சகிப்புத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் பின்னணியில், பாமிதா ரியாஸ் “தும் பில்குல் ஹம் ஜெய்ஸி நிக்லே தம் பால் கல் ஹம் ஜெய்ஸ் நக்லே” என்ற தனது கவிதை கருத்தரங்கை “ஹம் குணஹகார் ஔரதேன்-ஹம் கங்கார் அவுர்தேன்” என்ற பெயரில் படித்தார்.. இந்த கவிதை இந்தியாவில் வளர்ந்து வரும் இந்துத்துவாவையும், சியா-உல்-ஹக்கின் ஆட்சியின் போது பாக்கித்தானில் இசுலாமியஅடிப்படைவாதத்தின் எழுச்சியையும் ஒப்பிடுகிறது.[8]
பாமிதா ரியாஸ் 21 நவம்பர் 2018 அன்று தனது 72 வயதில் இறந்தார்.[9][10][11]