வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 19.11.2013 (செவ்வாய் கிழமை) |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
முதன்மை நபர்கள் | உஷாஅனந்தசுப்ரமணியன் |
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பாரதிய மகிளா வங்கி (Bhartiya Mahila Bank) , இந்தியாவில் உள்ள பெண்களுக்காக , பெண்களே , பெண்களைக் கொண்டு நடத்தும் பொதுத்துறை வங்கியாகும்.[1][2][3] மகளிர் வங்கி என்பது புதிய சிந்தனை அல்ல. தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு எஸ்.என்.கே. சுந்தரம் என்பவரால் நடத்தப்பட்டு வந்த பாண்டியன் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். பாண்டியன் வங்கி, கனரா வங்கியுடன் இணைந்தபோது அதன் மகளிர் வங்கிக் கிளைகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி விட்டன.[4] மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா,லக்னோ, அகமதாபாத், பெங்களூரு ஆகிய 9 நகரங்களில் 2013 இல் துவக்கப்பட்டது[5][6][7]
ஆயிரம் கோடி உரூபாய் முதலீட்டுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டுக்குள் நாடு முழுக்க மேலும் 771 கிளைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 2020- ஆம் ஆண்டுக்குள் இந்த வங்கியின் மூலம் ₹60,000 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகைக்குப் பிற வங்கிகளைவிட அரை சதவீதம் அதிக வட்டி தரப்படும். ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புக்கு 4.5% வட்டியும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு 5% தொகையும் தரப்படும்.[3] தமிழ்நாட்டில் சென்னை அண்ணா சாலையில் முதல் பெண்கள் வங்கியின் கிளை 19.11.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று தொடங்கப்பட்டது.[8][9]
மகளிர் வங்கிகளில் கணக்குகள் நடந்து பணப்பரிமாற்றம் செய்து கொள்வது என்பது, இப்போதுவரை படித்த பெண்கள் மத்தியில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியாவில் 26% மகளிர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த 26% மகளிரிலும்கூட, ஏறத்தாழ 80% பேர் படித்த, பட்டணத்துவாசிகளான வேலைபார்க்கும் உழைக்கும் மகளிர்தான். பயனடையப் போவது சிறு தொழில் முனைவோராக இருக்கும் மகளிரும், மகளிர் சுய உதவிக் குழுக்களும் என்று விளக்கம் தரும் நிதியமைச்சரின் நோக்கம் அதுவாக இருந்தால் இந்த மகளிர் வங்கிகளை கிராமப்புறங்களில் தொடங்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உள்ளனர்.[4]