பாரம் ( ஆங்கில மொழி: The Burden ) என்பது பிரியா கிருஷ்ணசாமியால் எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்யப்பட்ட 2018 ஆண்டைய இந்திய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது இப்படம் ஒன்றே 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் வென்ற ஒரே ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.
கருப்பசாமி மனைவியை இழந்த இரவுக் காவலாளியாவார். இவர் தன் சகோதரி மற்றும் மூன்று மருமகன்களான வீரா, மணி, முருகன் ஆகியோருடன் தமிழ்நாட்டின் ஓர் ஊரில் வசிக்கிறார். ஒரு நாள் கருப்பசாமி தன்வேலை முடிந்து காலையில் வீடு திரும்பும் போது, அவர் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பை உடைத்துக்கொள்கிறார். அவரது மருமகன்கள் அவருக்கு நகரத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அவரது மகன் செந்தில் பாரம்பரிய மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க, அவரை தனது மூதாதையர் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். எட்டு நாட்களுக்குப் பிறகு, கருப்பசாமி இறந்து விடுகிறார். அவரது மர்மமான மரணம் வீரா என்ற செயற்பாட்டாளரை சந்தேகத்திற்குரியவராக ஆக்குகிறது.
தனது முதல் திரைப்படமான கங்கூபாய் படத்தை முடித்த பிறகு, பிரியா கிருஷ்ணசாமி செய்தி இணையதளங்களில் தலைக்கூத்தல் தொடர்பான செய்திகளை அறிந்தார். மேலதிக ஆராய்ச்சிகளில், தலைக்கூத்தல் குறித்து, அவர் இதற்கு முன்னர் கேள்விப்படாத நிகழ்ச்சிகளை அறிந்தார். இது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள கிராமங்களில் சமூக ஒப்புதலுடன் பாரம்பரியமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். இது இந்தியாவில் வயதானவர்களுக்கு வேண்டிய சமூக, மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையுடன் தொடர்புடையது. இதை ஆராய்ந்த இவர் 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இரண்டு வாரங்களில் பாராம் படத்துக்கான திரைக்கதையை எழுதினார், மேலும் படத்தைத் தனது பதாகையான, ரெக்லெஸ் ரோஸஸ் மூலமாக, ஆர்த்ரா ஸ்வரூப்புடன் இணைந்து தயாரிக்க முடிவுசெய்தார். அதன்படி, அவர்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நடிப்புக் கலைத் துறையை அணுகினர். அங்கு பிரியா நடிப்பு பட்டறைகளை நடத்தினார். அதில் அங்கு படத்துக்குத் தேவையான முக்கிய நடிகர்களை கண்டடைவதில் வெற்றி பெற்றார்.[1] 80 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான கூடுதல் பாத்திரங்களுக்கு நடிப்புத் துறை சாராத உள்ளூர் மக்களைப் பயன்படுத்தினார். இப்படமானது யதார்த்தமான பாணியில் படம் எடுக்கப்பட்டது. ஒலிப்பதிவுடனே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதனால் உரையாடலுக்கு டப்பிங் எதுவும் செய்யப்படவில்லை.[2] இது 2017 சனவரியில் 18 நாட்களில் பாண்டிச்சேரி மற்றும் திருநெல்வேலியில் படமாக்கப்பட்டது.[3][4]
கோவாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய பனோரமா பிரிவில் பாரம் 2018 நவம்பரில் திரையிடப்பட்டது.[5] மேலும் பாரம் படமானது கோவாவில், 2018 ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் ஐ.சி.எஃப்.டி யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு இந்திய படங்களில் ஒன்றாகும்.[6][7] ஐ.சி.எஃப்.டி யுனெஸ்கோ காந்தி பதக்கம் என்பது ஐ.எஃப்.எஃப்.ஐயின் சர்வதேச போட்டிப் பிரிவாகும், இது பாரிஸில் உள்ள நடுவரால் மதிப்பீடு செய்யப்படுகிறது.[8] பாரம் படமானது பின்னர் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது,[9] 66 வது தேசிய திரைப்பட விருதுகளில் வென்ற ஒரே தமிழ் படமாகவும் இது உள்ளது.[10]
49 வது ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் இப்படத்துக்கு 5 நட்சத்திரங்களில் 4 நட்சத்திரங்களை வழங்கிய சினெஸ்டான் "பாரம் அழகாக எடுக்கப்பட்ட ஒரு சமூக படம், இது உங்கள் செயல்களை கேள்விக்குள்ளாக்கும். மேலும் கருணைக் கொலை குறித்த கடுமையான உங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வைக்கும்" என்று கூறினார்.[11]