பாலச்சந்திர நீலகாந்து புரந்தரே Bhalchandra Nilkanth Purandare | |
---|---|
![]() | |
பிறப்பு | 27 அக்டோபர் 1911 இந்தியா |
இறப்பு | 10 நவம்பர் 1990 |
பணி | மகளிர் மருத்துவம் |
விருதுகள் | பத்மபூசண் |
பால்சந்திர நீலகாந்து புரந்தரே (Bhalchandra Nilkanth Purandare) இந்தியாவைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார்.[1] 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் நீலகாந்து அனந்து புரந்தரேவுக்கு இவர் மகனாகப் பிறந்தார். மும்பையில் உள்ள குடும்ப நலம் மற்றும் ஆராய்ச்சிக்கான மருத்துவர் என். ஏ. புரந்தரே மருத்துவ மையத்தின் இயக்குநராக இவர் இருந்தார்.[2] 1973 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை பன்னாட்டு மகளிர் மற்றும் மகப்பேறியல் கூட்டமைப்பின் தலைவராகவும் 1966 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை மும்பை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3][4] மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநர்களின் இராயல் கல்லூரியின் கௌரவ உறுப்பினராகவும், 1961 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இவர் இருந்தார்.[5][2] மருத்துவத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கியது.[6] இவரது சகோதரர் மருத்துவர் வித்தல் என். புரந்தரேவும் ஒரு மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். அறுவை சிகிச்சை திறமைக்கு பெயர் பெற்றவராக அவர் இருந்தார். மும்பை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகவும் அவர் பணியாற்றினார்.[7][8] இவர்களது மருமகன் மருத்துவர் சி. என். புரந்தரே, ஒரு மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவராக அறியப்படுகிறார். [5][9]
1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று தனது 80 வயதில் இறந்தார்.[10]
மராத்தியில் 'சல்யகௌசல்யா' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை இவர் எழுதினார்.