நகரம் | |
![]() பாலிக் புலாவ் நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°21′N 100°14′E / 5.350°N 100.233°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி |
தோற்றம் | 1794 |
அரசு | |
• மேயர் | இராஜேந்திரன் அந்தோனி |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,09,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 11000 |
தொலைபேசி எண் | +6048 |
வாகனப் பதிவெண்கள் | P |
இணையதளம் | www |
பாலிக் புலாவ் (ஆங்கிலம்: Balik Pulau Town; (மலாய் Bandar Balik Pulau; சீனம்: 浮羅山背; ஜாவி: باليق ڤولاو) என்பது மலேசியா, பினாங்கு, தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள நகரம். இது தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது.
1794 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் (British East India Company); பாலிக் புலாவ் எனும் விவசாய நகரம் நிறுவப்பட்டது. இன்றுவரை, பாலிக் புலாவின் பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் நம்பி உள்ளது.[1]
இன்றைய காலத்தில், பினாங்குத் தீவு நன்கு வளர்ச்சிப் பெற்று நவீனத்துவம் அடைந்து இருந்தாலும், விவசாயத் துறைக்கு மாநில அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
பினாங்கின் மிகவும் பிரபலமான விளைபொருட்களான ஜாதிக்காய், கிராம்பு மற்றும் டுரியான் பழங்கள் போன்றவை இந்த நகரத்தில்தான், இன்றைய வரையில் அதிகமாய் அறுவடை செய்யப் படுகின்றன.[2]
ஜாதிக்காய், கிராம்பு மற்றும் டுரியான் பழங்கள் போன்ற விவசாயப் பொருட்கள், வளர்ந்து வரும் பாலிக் புலாவ் நகரத்தின் சுற்றுலாத் துறைக்கு, மேலும் ஊக்குவிப்பை வழங்குகின்றன.
பாலிக் புலாவ் அதன் பல்வேறு வகையான டுரியான்களுக்குப் பெயர் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலான காலக் கட்டத்தில், பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கின்றது.[3][4][5]
பாலிக் புலாவ் நகர்ப் பகுதி பினாங்கு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்து இருந்தாலும், பரபரப்பான நகர மையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பொதுவாக அமைதியான நகர்ப்பகுதி என்று சொல்லலாம். இருப்பினும் அண்மைய கால நகரமயமாக்கல் பாலிக் புலாவ் நகரத்தையும் விட்டு வைக்கவில்லை. குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் துரிதமாகி வருகின்றன.[6]
மலாய் மொழியில் Balik Pulau (பாலிக் புலாவ்) என்றால் தீவின் பின்புறம் என்று பொருள். புலாவ் என்றால் தீவு; பாலிக் என்றால் திரும்புதல் அல்லது பின்புறம் என்று பொருள்.[1]
பாலிக் புலாவ் என்பது பினாங்குத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள நகரத்தின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. புவியியல் ரீதியாகப் பார்த்தால், பினாங்குத் தீவு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து வடகிழக்கு வரையில், மத்திய மலைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டு உள்ளது.
பாலிக் புலாவில் முதல் கிராம்பு; ஜாதிக்காய் தோட்டங்கள் 1794-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் அமைக்கப்பட்டன.
பினாங்குத் தீவு முன்பு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு (Prince of Wales Island) என்று அழைக்கப்பட்டது. அந்தப் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவில், அப்போதைய நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்கான வழிமுறையாக, வாசனைத் திரவியச் சாகுபடிக்கு ஆதரவு வழங்கப் பட்டது.[7][8]
அந்தக் காலக் கட்டத்தில், தென்கிழக்கு ஆசிய வாசனைத் திரவிய வர்த்தகத்தில், டச்சுக்காரர்கள் ஏகபோகமாக உச்சத்தில் இருந்தனர். அந்த ஏகபோகத்தை உடைப்பதற்காகவும்; பினாங்குத் தீவை வாசனைத் திரவிய உற்பத்திக்கான மையமாக மாற்றவும்; ஆங்கிலேயர்கள் திட்டம் வகுத்தனர்.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெடா சுல்தானகம் மீது சயாமியர் படையெடுப்புகளை நடத்தினர். அவற்றில் இருந்து தப்பி வந்த மலாய் அகதிகளை, பாலிக் புலாவ் பகுதிகளில் இருந்த கிராம்பு ஜாதிக்காய் பண்ணைகள் வெகுவாக ஈர்த்தன. தவிர சீனக் குடியேற்றவாசிகளும் அந்தப் பண்ணைகளின் பணிகளில் அமர்த்தப் பட்டனர்.[9]
முன்பு பாலிக் புலாவ் நகர மையம் கோங்சி (மலாய் மொழியில்: Kongsi) என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலக் கட்டத்தில் பாலிக் புலாவின் மையப் பகுதியில் மரத்தால் கட்டப்பட்ட நீண்ட வீடுகள் இருந்தன. பாலிக் புலாவைச் சுற்றி இருந்த தோட்டங்களில் பணிபுரிந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் அந்த நீண்ட வீடுகளில் வசித்து வந்தனர். அதனால் அதற்கு கோங்சி என பெயரிடப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
2012-ஆம் ஆண்டில் பாலிக் புலாவ் மாவட்டத்தில் சமூக் கலைக்கழகம் ஒன்று திறப்பு விழா கண்டது. அப்போதைய முதல்வர் லிம் குவான் எங் திறப்பு விழா செய்தார். இந்தக் கழகம் பாலிக் புலாவ் மக்களுக்கு ஒரு கல்வி மையமாகத் திகழ்வதுடன் வசதி குறைந்த மக்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளமாகவும் விளங்குகிறது.
இலவச இணையச் சேவை, மேற்கோள் நூல்கள், படிக்க ஏற்ற இடங்கள் ஆகிய கல்வி வசதிகளை உள்ளடக்கி உள்ளது. கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஏற்று நடத்துவதற்கு மண்டபமும் அமைக்கப்பட்டு உள்ளது.[10]
பாலிக் புலாவ் வட்டாரம், பல முக்கிம்களை உள்ளடக்கியது. மலேசியாவின் புள்ளியியல் துறையின் 2010-ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், இந்த முக்கிம்களின் மக்கள் தொகை 23,559.
பாலிக் புலாவின் சுற்றுலா ஈர்ப்புகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தவையாக உள்ளன. பாலிக் புலாவ் நகரத்தின் பொருளாதாரத்திலும்; அதன் மக்களின் வாழ்வியலிலும் விவசாயம் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.
பினாங்கின் மிகவும் பிரபலமான ஜாதிக்காய், டுரியான் மற்றும் கிராம்பு போன்ற உற்பத்திகளுக்கு பாலிக் புலாவ் நகரம் மிகவும் பிரபலமானது. அதன் விளைவாக அண்மைய ஆண்டுகளில், பாலிக் புலாவ் நகரில் விவசாய சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருகிறது.[1][2][3][5]
மற்ற மாநிலங்களில் இருந்தும்; வெளிநாடுகளில் இருந்தும்; டுரியான் மற்றும் ஜாதிக்காய்களை வாங்குவதற்கு இந்த நகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பாலிக் புலாவ் டுரியான் பழத் தோட்டங்கள், பலவகையான டுரியான் பழ வகைகளை உற்பத்தி செய்கின்றன.