பாலிபீனைல்சல்போன் (Polyphenylsulfone) என்பது அரோமாட்டிக்கு வளையங்கள் சல்போன் (SO2) குழுக்களுடன் இணைந்து உருவாகும் ஓரு பலபடிச் சேர்மமாகும். இப்பலபடிகள் உயர் செயல்திறன் மிக்க பலபடி கரிமச் சேர்மங்களாகக் கருதப்படுகின்றன.[1]
வணிகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பாலிபீனைல்சல்போன்கள் பல்வேறு பிசுபீனால்களுடன் 4,4'-பிசு(குளோரோபீனைல்)சல்போனைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த பயன்பாட்டிற்கான இரண்டு பிசுபீனால்கள் பிசுபீனால் ஏ மற்றும் 4,4'-பிசு(4-ஐதராக்சிபீனைல்)சல்போன் ஆகியனவாகும்.
பாலிபீனைல்சல்போன் என்பது வார்ப்படமாக்கக்கூடிய ஒரு நெகிழியாகும். இது பெரும்பாலும் விரைவான முன்மாதிரி மற்றும் விரைவான உற்பத்தி (நேரடி எண்ணிம உற்பத்தி) பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பாலிபீனைல்சல்போன் வெப்பம் மற்றும் வேதிப்பொருள்களை எதிர்க்கும் என்பதால் வாகனங்களில், விண்வெளியில், குழாய் பயன்பாடுகளில் பயன்படுத்த பொருந்துகிறது. .. பாலிபீனைல்சல்போன் சேர்மத்திற்கு உருகுநிலை இல்லை. இதன் படிக உருவமற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறது.[2] 55 மெகாபாசுக்கல் வரை இழுவிசை வலிமையையும் வழங்குகிறது.[3] இச்சேர்மத்தின் வணிகப் பெயர் இரேடெல் என்பதாகும். குழாய் இணைப்பு பயன்பாடுகளில், பாலிபீனைல்சல்போன் பொருத்துதல்கள் சில சமயங்களில் முன்கூட்டியே விரிசல்களை உருவாக்குவது அல்லது உற்பத்தியாளர் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட நிறுவல் முறைகள் அல்லது அமைப்புகளைப் பயன்படுத்தி முறையற்ற முறையில் நிறுவப்படும்போது தோல்வியை அனுபவிப்பது கண்டறியப்பட்டது.[4]