பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறை (Violence against sexworkers) என்பது பாலியல் தொழிலாளர்களுக்கு நேரும் வன்முறைகளைக் குறிக்கிறது. இவ்வன்முறைகளின் உச்சமாக சிலர் மரணத்தையும் சந்திக்க நேர்கிறது. பாலியல் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் என்பதால் இந்த வன்முறை பெண்களுக்கெதிரான வன்முறையாகப் பார்க்கப்படுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் எண்ணத்துடன் பெண்கள் கடத்தப்பட்டாலும் கடத்தப்படும் எல்லோரும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறமுடியாது. கடத்தப்படுபவர்களின் விருப்பத்தை மீறி இச்செயல் நடைபெறுவதாலும் இங்கு பாலியலை விட"வணிகமே" மேலோங்கியிருப்பதாலும் பாலியல் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையாக இதை கருதமுடியாது. அது ஒரு தனிப்பட்ட சிக்கல் ஆகும்.[1]
2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பாலியல் தொழிலாளர்களின் ஆட்கொலைகளின் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 204 ஆக இருந்தது. இந்தக் கணக்கீடு சட்ட அனுமதியோடு மற்றும் அனுமதியின்றி நடைபெற்ற பாலியியல் தொழில் என இருதரப்பினரையும் உள்ளடக்கியதாகும். [2] அதே காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பாலியல் தொழிலுக்கு அடுத்தபடியான ஆபத்துகொண்ட தொழிலாளிகளான மதுபானக் கடை பெண்ஊழியர்களில் ஆட்கொலையின் விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4 பேராகவும், ஆண் அழைப்பு வாடகையுந்து ஓட்டுநர்களில் ஒரு லட்சம் பேருக்கு 29 பேராகவும் இருந்தது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாலியல் தொழிலாளர்களுக்கான அபாயம் அதிகப்படியான விகிதமாகும்.[3] உடற்பிடிப்பு நிலையங்கள், விபச்சார விடுதிகள் போன்ற உள் அரங்கங்களில் பணிபுரியும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அழைப்பு மாதர்களைவிடத் தெருப் பாலியல் தொழிலாளர்களுக்கு நேரும் பாதிப்பின் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.[4][5]
பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக உள்ள நாடுகளில் உரிமம்பெற்ற விபச்சார விடுதித் தொழிலாளர்களுக்கு நேரும் பாதிப்பு குறைவானதாகவே உள்ளது.[6] எனினும் சிலசமயங்களில் அவர்களுக்கும்கூட மரணம் நிகழ்கிறது. 2003 இல் ஜெர்மனியின் ஒரு விபச்சார விடுதியில் இத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் அவரது வாடிக்கையாளரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அப்பெண் அறையிலிருந்த அபாயப் பொத்தானை அழுத்திவிட்டதால் பாதுகாவலாளியால் கொலையாளியைப் பிடிக்கமுடிந்தது. ஆண் பாலியல் தொழிலாளிக்கெதிரான வன்முறை குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது.[7]
பாலியல் தொழிலாளர்களுக்குக் கொடுமையிழைப்போர் வாடிக்கையாளர்களாகவோ தொழில்நடத்துவோராகவோ இருக்கலாம். சட்டங்களின் இறுக்கத்தன்மையினால் தொந்திரவுகளைத் தவிர்ப்பதற்காக பாலியல் தொழிலாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை ஒதுக்குப்புறமான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதுவே அவர்களது பாதுகாப்புக்குப் பாதகமாகிறது. பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக்கப்பட்டிருப்பினும் கூட்டாகத் தொழில் செய்வது தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாலியல் தொழிலாளர்கள் தனியாகத் தொழில்செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் இவர்களுக்கான அபாயம் கூடுகிறது. பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களையும் குற்றம்புரிந்தோராகக் கருதப்படும் பகுதிகளிலும் இதேநிலைதான் நிலவுகிறது.[8]
பாலியல் தொழிலைச் சட்டபூர்வமானதாக்காத நாடுகளில் இத்தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானவர்களாகக் கருதப்படாமல், குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். சில நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை விசாரிப்பதற்கு காவற்துறையினரும் முன்வந்து ஒத்துழைப்பதில்லை.[9] சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், தெருப் பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும்போது, 82% உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும், 83% ஆயுதப் பயமுறுத்தலுக்கும், 68% வன்கலவிக்கும் ஆளாகின்றனர்..[10]
பாலியல் தொழில் குற்றமற்றதாக்கப்பட்டுள்ள நியூசிலாந்தில் தனித்தோ அல்லது ஒதுக்குப்புறமான பகுதிகளிலோ தொழில்செய்யும் நிலைக்கு ஆளாகாதவர்களுக்கு நேரிடும் ஆபத்துகளும் வன்முறைகளும் குறைந்துள்ளது. எப்பொழுதும் நியூசிலாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக இருந்தபோதும், குற்றமற்றதாக ஆக்கப்பட்டதே அபாயங்களைக் குறைத்தது.[11]