பால் கிருட்டிணா சர்மா நவீன் | |
---|---|
![]() நவீன் 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் | |
பிறப்பு | பாய்னா, சாஜாபூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா | 8 திசம்பர் 1897
இறப்பு | 29 ஏப்ரல் 1960 | (அகவை 62)
பணி | சுதந்திர ஆர்வலர் கவிஞர் அரசியல்வாதி பத்திரிகையாளர் |
அறியப்படுவது | இந்தி கவிதைகள் |
பெற்றோர் | ஜம்னாதாஸ் சர்மா இராதாபாய் |
விருதுகள் | பத்ம பூசண் |
பால் கிருட்டிணா சர்மா (Bal Krishna Sharma Naveen) (பிறப்பு: 1897 திசம்பர் 8 - இறப்பு: ஆப்ரல் 29) நவீன் என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியும் மற்றும் இந்தி இலக்கியத்தின் கவிஞருமாவார். [1] கான்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது மக்களவையில் உறுப்பினராக இருந்த இவர் 1957 முதல் தான் இறக்கும் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். [2] கணேஷ் சங்கர் வித்யார்த்திக்குப் பிறகு பிரதாப் என்ற தினசரியின் ஆசிரியராகவும், அதிகாரப்பூர்வ மொழி ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். [3] இவரது கவிதைத் தொகுப்புகளில் கும்கும், இரச்மீரேகா, அபாலக், குவாசி, வினோபா இசுடவன், ஊர்மிளா மற்றும் அம் விசுபாய் சனம் கே ஆகியவை அடங்கும். 1960இல் இந்தியாக் குடிமகனின் மூன்றாவது உயர்ந்த கௌரவமான பத்மபூசண் விருதினை வழங்கியது. [4] இந்தியா அஞ்சல் துறை 1989 இல் சர்மா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [5]
பால் கிருட்டிணா சர்மா 1897 டிசம்பர் 8 ஆம் தேதி இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பியானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். ஜமநாதாஸ் சர்மா மற்றும் இராதாபாய் ஆகியோருக்கு மிதமான நிதி ஆதாரங்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். [3] வீட்டின் வறுமை காரணமாக, ஷாஜாபூரில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் தனது 11 வயதில்தான் ஆரம்பக் கல்வியைத் தொடங்க முடிந்தது. அங்கு இவர் நடுநிலைப் பள்ளியை முடித்தார். பின்னர், உஜ்ஜைனுக்குச் சென்ற இவர், 1917 இல் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றார். இந்த காலகட்டத்தில், புகழ்பெற்ற கவிஞரான மாகன்லால் சதுர்வேதியை சந்திக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் இவரை கணேஷ் சங்கர் வித்யார்த்திக்கு அழைத்துச் சென்றார். கவிஞர் இவருக்கு முன் பிரதாப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். [6] புதிய தனிப்பட்ட தொடர்புகள் கான்பூருக்கு தனது தளத்தை மாற்ற உதவியது, மேலும் இவர் தனது பட்டப்படிப்பைத் (இளங்கலை) தொடர கான்பூரின் கிறிஸ்ட் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். இவரது கான்பூர் கல்லூரி நாட்களில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றபோது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இது 1921 ஆம் ஆண்டில் இவரது கல்லூரி படிப்பை கைவிட்டு அரசியலை ஒரு முழுநேர வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளத் தூண்டியது.
சர்மா இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு 1921 மற்றும் 1944 க்கு இடையில் பிரித்தானிய அரசாங்கத்தால் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அரசாங்கம் இவரை ஒரு ஆபத்தான கைதியாக அறிவித்தது. [7] இந்தி நாளிதழான பிரதாப்புடனான இவரது தொடர்பு மூலம் ஒரே நேரத்தில் தனது பத்திரிகைத் தொழிலைத் தொடர்ந்தார். அன்றைய செய்தித்தாளின் அப்போதைய ஆசிரியரான கணேஷ் சங்கர் வித்யார்த்தி மார்ச் 1931 இல் இறந்தபோது, [8] இவர் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் கட்சி அரசியலில் ஈடுபட்டார். இந்திய தேசிய காங்கிரசுடன் தனது கூட்டணியைத் தொடர்ந்தார். இவர் 1951–52 முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, கான்பூர் மாவட்ட தெற்கு மற்றும் எட்டாவா மாவட்ட மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். வாக்களித்த வாக்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரசு சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகரை 26,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1957 ஆம் ஆண்டில், இவர் மாநிளங்களாவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் இவரது தீவிரமான பங்களிப்பு மற்றும் இவரது சொற்பொழிவு திறன்களுடன் கான்பூரின் சிங்கம் என்ற பெயரைப் பெற்றார். 1955 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ மொழி ஆணையம் நிறுவப்பட்டபோது, அதில் இவர் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] மேலும் இவர் நேபாளம், மொரிசியசு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்ற கலாச்சாரக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். [10]
சர்மா தனது கல்லூரி நாட்களிலிருந்து தேசபக்தி ஆர்வத்தை பிரதிபலிக்கும் பல கவிதைகளை நவீன் என்ற பெயரில் எழுதினார். [11] கும்கம், ரச்மீரேகா, அபாலக், குவாசி, வினோபா இசுடவன் மற்றும் ஊர்மிளா போன்ற பல புராணங்களை வெளியிட்டுள்ளார். இந்தி மொழி இலக்கிய இதழான பிரபாவின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். [12] 1960 ஏப்ரல் 29, அன்று இவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், மாநிலங்களவையின் உறுப்பினராக பணியாற்றிக்கொண்டிருக்கும் போது 1960 ல் இந்திய அரசு நாட்டின் மூன்றாவது கௌரவமான பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கியது. [4] இவரது சில கவிதைகள் இவரது மரணத்திற்குப் பிறகு ஞானபீட அமைப்பு தொகுத்து அஹம் விசுபாய் ஜனம் கே என்ற தலைப்பில் வெளியிட்டது. [3] இவரது உரைநடை எழுத்துக்கள், பால்கிருட்டிணா சர்மா காத்யா இரச்சனாவளி என்ற கவிதைகள் 5 தொகுதிகளிலும் கிடைக்கிறது. பால்கிருட்டிணா சர்மா காவ்யா இரச்சனாவளி 3 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. [10] இவரது கவிதைகள் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உட்பட பலரையும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. [13] இந்திய அஞ்சல் துறை 1989 ஆம் ஆண்டில் இவருக்கு நினைவு முத்திரை வழங்கி கௌரவித்தது. உத்தரப்பிரதேச இந்தி சன்ஸ்தான் இவரது பெயரால் பால் கிருட்டிணா சர்மா நவீன் என்ற விருதை வழங்கி வருகிறது. [14] மத்திய பிரதேச அரசால் நிர்வகிக்கப்படும் ஷாஜாப்பூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு, அரசு பால் கிருட்டிணா சர்மா நவீன் முதுகலை கல்லூரி, என்று இவரது பெயரிடப்பட்டுள்ளது. [15] [16] இவரது வாழ்க்கை விஷ்ணு திரிபாதி எழுதி 2013 இல் வெளியிடப்பட்ட பால் கிருட்டிணா சர்மா நவீன் என்ற வாழ்க்கை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [17]