பால்கிகுண்டு (15°20′39″N 76°08′13″E / 15.344167°N 76.136944°E) மற்றும் கவிமடம் (15°20′14″N 76°09′44″E / 15.3372926°N 76.1621377°E) என்பவை கர்நாடகத்தின், கொப்பள் அருகே பேரரசர் அசோகரின் (கிமு 304-232) இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு இடங்களாகும். இந்தக் கல்வெட்டுகள் இந்தியாவின் பழமையான கல்வெட்டு எழுத்துப் பதிவுகளில் சிலவற்றில் ஒன்றாகும். மேலும் இவை அசோகரின் சிறிய பாறைக் கல்வெட்டு ஆணைகளின் ஒரு பகுதியாகும். சைனத் துறவிகள் அங்கு தியானம் செய்து வந்தனர். பால்லக்கிகுண்டு மற்றும் கவிமடத்தில் உள்ள ஆணைகள் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின் கன்னட மொழிபெயர்ப்பு கிடைக்கின்றன.
பால்கிகுண்டு ( பல்லக்குப் பாறை ) என்பது இரண்டு பெரிய பாறைகள் மேல் ஒரு தட்டையான பாறை ஒரு கூரைபோல அமைந்துள்ளது. இந்த பாறையின் உச்சிக்குச் செல்ல கரடுமுரடான படிகள் உள்ளன. அங்கு 2,300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தியாவில் 17 இடங்களில் இதே போன்ற அரசாணைகள் கிடைத்துள்ளன.
பல்லக்கிகுண்டுவுக்கு சுமார் 2.5 கி. மீ தென்கிழக்கில் உள்ள கவிமடத்தில் மற்றொரு பாறைக் கல்வெட்டில் அசோகரின் ஆணை உள்ளது. [1] கவிமடக் கல்வெட்டு என்பது ஒரு பாறாங்கல் மீது கூரைபோன்று உள்ள மற்றோரு பாறையுள்ள இடத்தில் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ளது. சைனத் துறவிகள் தியானம் செய்ய கவிடம் மற்றும் பால்லக்கிகுண்டு என இரண்டையும் பயன்படுத்தியுள்ளனர்.
பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட பாறைக் கல்வெட்டு ஆணைகள், அசோகர் சங்கத்துடன் நெருங்கி வருவதையும், மேலும் தீவிரமான பற்றுடையவராக மாறுவதையும் பற்றியும் பேசுகிறது. மேலும், சிறியவரோ அல்லது பெரியவரோ எவராயினும் முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிறது. [2]