தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 3 சனவரி 1996 கப்ரா, ராச்சமந்து மாவட்டம், இராசத்தான், இந்தியா |
விளையாட்டு | |
விளையாட்டு | தடகளம் |
நிகழ்வு(கள்) | 20 கிலோமீட்டர் நடைப்போட்டி |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 1:29:54 (2020 ராஞ்சி) |
26 பிப்ரவரி 2020 இற்றைப்படுத்தியது. |
பாவனா யாட்டு (Bhawna Jat) இந்தியாவைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனையாவார். 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் நாளன்று இவர் பிறந்தார். 20 கிலோமீட்டர் நடைப்போட்டியில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த ஒரு போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தொலைவை 1 மணிநேரம் 29 நிமிடங்கள் 54 வினாடிகளில் நடந்து பெண்கள் 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் இந்திய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் நாள் ஒரு விவசாய குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் இளையவராக இவர் பிறந்தார். 13 வயதில் உடற்கல்வி ஆசிரியர் திரு. ஈரா லால் குமாவத் இவரை ஒரு மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு அழைத்துச் சென்றபோது, 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மட்டுமே பங்கேற்க இவருக்கு இடம் கிடைத்தது. போட்டியில் பாவனா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். [1] அடுத்தடுத்த ஆண்டுகளில் பழமைவாத கிராமவாசிகளின் பார்வையை தவிர்க்கும் பொருட்டு பாவனா அதிகாலையில் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டார். [2] குடும்பம் நிதி ரீதியாக பலவீனமாக இருந்ததால் பாவனா கல்லூரிப் படிப்பை விட்டு வெளியேற வேண்டியிருந்தது [3] ஆரம்ப ஆண்டுகளில் வெறுங்காலுடன் கூட போட்டியிட வேண்டியிருந்தது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பாவனா மண்டல அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான இளையோர் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கினார். 2016 ஆம் ஆண்டு இந்தியன் இரயில்வே துறையில் இவருக்கு மேற்கு வங்காள மாநிலத்தின் அவுரா நகரில் பயணச்சீட்டு பரிசோதகர் வேலை கிடைத்தது. [1]
பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு நடந்த தேசிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் பாவனா 1:29:54 நேரத்தில் பயணத் தொலைவைக் கடந்து தேசிய சாதனையை முறியடித்து 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். ஒலிம்பில் கலந்து கொள்ள 1:31:00 என்ற நேரம் தகுதி தரமாக இருந்தது. அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டில் இவரது முந்தைய தனிப்பட்ட சிறந்த சாதனையை விட இது எட்டு நிமிடங்கள் குறைவாகும். இதேபோல பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு தேசிய திறந்தநிலை வெற்றியாளர் போட்டியில் எடுத்துக் கொண்ட நேரத்தை விட 23 நிமிடங்கள் குறைவானதாகவும் இவரது சாதனை அமைந்துள்ளது.[4]