பி. கே. ஸ்ரீனிவாசன் (P. K. Srinivasan) (நவம்பர் 4, 1924 - ஜூன் 20, 2005) இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கணித ஆசிரியர் ஆவார். சென்னையில் உள்ள முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தான் ஓய்வு பெறும் வரை கணிதம் கற்றுக்கொடுத்தார். கணிதக் கல்விக்கான அவரது தனித்த அர்ப்பணிப்பு அவரை அமெரிக்காவில் ஓராண்டும், பின்னர் நைஜீரியாவில் ஆறு ஆண்டுகளும் பணிபுரிய வாய்ப்பளித்தது. இந்திய கணிதவியலாளரான ராமானுஜன் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, கணிதம் கற்பிப்பதற்கான தனது அர்ப்பணிப்புக்காக அவர் இந்தியாவில் அறியப்பட்டவர். ஆங்கில, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பல நூல்கள் எழுதியுள்ளார். இந்நூல்களில், புதுமையான மற்றும் சுவாரசியமான வழிகளில் குழந்தைகளுக்கு கணிதத்தை அறிமுகப்படுத்தினார். சென்னையில், இந்திய பத்திரிகையான தி ஹிந்து பத்திரிகையின் புத்தக விமர்சனக் கட்டுரைகளில், கணிதப் புத்தகங்களின் முக்கிய மதிப்பீட்டாளராகவும் இருந்தார்.[1] மேலும், இவர் இராமானுஜன் அருங்காட்சியகம் மற்றும் கணிதக் கல்வி மையத்தின் நிறுவனரும், அருங்காட்சியகக் காப்பாளர் மற்றும் இயக்குநராகவும் இருந்தார்.[2]