பி ஆர் எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனம் (PRS Legislative Research, commonly referred to as PRS) இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றுவதற்கு முன்னர், அதன் சட்ட முன்வரைவுகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுதுள்ளாதா என்றும் பிற சட்டங்களுக்கு எதிரிடையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் லாப-நோக்கமற்ற தன்னாட்சி நிர்வாகம் கொண்ட ஆய்வு நிறுவனம் ஆகும். இது செப்டம்பர், 2005-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதன் அலுவலகம் புது தில்லியில் செயல்படுகிறது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றகளில் தாக்கல் செய்யப்படும் சட்ட முன்வரைவுகளை ஆய்ந்து அதன் சாதக பாதகங்களை, சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனது இணையதளம் வழியாக சுருக்கமாகத் தெரிவிக்கும்.
பி.ஆர்.எஸ் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, நாடாளுமன்றத்தில் அவர்களின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு தங்களின் ஆராய்ச்சி உள்ளீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குகிறது.[2] மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விளக்கங்களுக்கு பதில் கூறுவதுடன், குறிப்பிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிப் பணியும் மேற்கொள்கிறது.
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன்வரைவுகள் குறித்து சுருக்கமாக விவாதித்து அதன் ஆய்வு அறிக்கையை 4 முதல் 6 பக்ககங்ளில் வழங்குகிறது. இது சட்ட முன்வரைவு தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய சிக்கல்களை சுருக்கமாக உள்ளடக்கியது
நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய கொள்கை முன்னேற்றங்களின் மாதாந்திர விரிவான அறிக்கைகள் மற்றும் அரசாங்கக் குழுக்களின் அறிக்கைகள் உட்பட அனைத்து குறிப்பிடத்தக்க கொள்கை நிகழ்வுகளையும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் கண்காணிக்க உதவுவதே இதன் நோக்கம். அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயல்பாட்டை மேற்பார்வையிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வுகளைப் பின்பற்றவும் இந்த அறிக்கை உதவுகிறது.
கலந்துரையாடல் அறிக்கை: பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் மாநாட்டுக் குறிப்புகள் அடங்கும். இந்த ஆவணங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் மற்றும் பாராளுமன்றத்தின் பல்வேறு அம்சங்களை பகுப்பாய்வு செய்கின்றன.
மசோதா மற்றும் நிலைக்குழு அறிக்கை சுருக்கம்: ஒரு மசோதாவின் முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் ஒரு பக்க சுருக்க உரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் எளிதாக அணுக தனது இணையதளத்தில் வெளியிடுகிறது. பி.ஆர்.எஸ் சட்ட முன் வரைவு குறித்த அறிக்கைகளையும் சுருக்கமாகக் கூறுகிறது.