பிக்காசோவின் ஆப்பிரிக்கக் காலம் (Picasso's African Period) என்பது, ஆப்பிரிக்க சிற்பங்களினாலும், மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகளினாலும் தூண்டப்பட்டு பாப்லோ பிக்காசோ ஒரு குறிப்பிட்ட பாணி ஓவியங்களை வரைந்த காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி 1906 முதல் 1909 வரையானது. பிக்காசோவின் நீலக்காலம், இளஞ்சிவப்புக்காலம் ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த இந்த முன்-கியூபிசக்காலத்தை நீக்ரோக் காலம்[1] அல்லது கருப்புக் காலம்[2] என்றும் அழைப்பதுண்டு.
பிரெஞ்சுப் பேரரசு துணை-சகாராப் பிரதேசத்துக்கு விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கக் கலைப்பொருட்கள் பாரிசு அருங்காட்சியகங்களுக்கு கொண்டுவரப்பட்டன. ஆப்பிரிக்க இராச்சியமான டகோமி பற்றிய தன்னின ஊனுண்ணல் முதலியவை தொடர்பான பல மிகைப்படுத்தப்பட கதைகள் பத்திரிகைகளில் வெளிவரலாயின. யோசெப் கான்ராடின் பிரபலமான புத்தகத்தில் பெல்சிய காங்கோவில் ஆப்பிரிக்கர்கள் முறைகேடாக நடத்தப்பட்டது குறித்து வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆப்பிரிக்கா குறித்த ஆர்வம் ஏற்பட்டிருந்த இச் சூழ்நிலையில் பிக்காசோ அவரது சில ஆக்கங்களுக்கான அகத்தூண்டலுக்காக ஆப்பிரிக்கக் கலைப்பொருட்களை நாடியது இயல்பானதே. அத்துடன், என்றி மட்டிசு (Henri Matisse) ஆப்பிரிக்காவின் டான் மக்களின் முகமூடியொன்றைக் காட்டியது பிக்காசோவுக்கு ஆர்வத்தைத் தூண்டியது.[3]
1907 மே அல்லது யூன் மாதத்தில், இனவரைவியல் அருங்காட்சியகத்தில் ஆப்பிரிக்கக் கலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிக்காசோவுக்கு ஒரு புலப்பாட்டு அனுபவம் ஏற்பட்டது. பிக்காசோவின் ஆப்பிரிக்கக் கலைபற்றிய கண்டுபிடிப்பு, அவரது அவிக்னனின் இளம் பெண்கள் என்னும் ஓவியத்தின் (1907 மே மாதத்தின் தொடங்கப்பட்டு அதே ஆண்டு யூலையில் மீண்டும் வேலை செய்யப்பட்டது), குறிப்பாக வலது பக்கத்திலிருக்கும் இரண்டு உருவங்களின் பாணி மீது செல்வாக்குக் கொண்டிருந்தது.
அவிக்னனின் இளம் பெண்கள் ஓவியம், ஒரு முன்-கியூபிச ஆக்கமாகப் பார்க்கப்பட்டாலும், 1910ல் பகுப்பாய்வுக் கியூபிசம் தொடங்குவதற்கு முன்னர் பிக்காசோ ஆப்பிரிக்கக் கலைகளிலிருந்து பெறப்பட்ட பாணியொன்றைத் தொடர்ந்து உருவாக்கினார். ஆப்பிரிக்கக்காலப் பாணியிலான பிக்காசோவின் பிற ஓவியங்கள், பெண்ணின் மார்பளவு ஓவியம் (1907, தேசிய கலையகம், பிராக்), தாயும் பிள்ளையும் (1907 வசந்தகாலம், பிக்காசோ அருங்காட்சியகம், பாரிசு), உயர்த்திய கைகளுடன் வெற்றுடம்புப்பெண் (டைசன்-போர்னெமிசா அருங்காட்சியகம், மாட்ர்ட், எசுப்பெயின்), மூன்று பெண்கள் (வசந்தகாலம் 1908, ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், சென் பீட்டர்சிபர்க்) ஆகிய ஓவியங்களும் அடங்கும்.