பிசித் தீவின் மொழிகள்

பிசித் தீவின் மொழிகள் ஆங்கிலம், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகள் மற்றும் இந்தியக் குடியேறிகளின் மொழிகள் என மூன்று விதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிசித் தீவில் இந்த மூன்றுவித மொழிகளும் பேசப்படுகின்றன. பிசித் தீவின் 1997 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிசித் தீவுகள் ஆங்கிலம், விசிய மொழி (பூர்வகுடியினர் மொழி), இந்துசுத்தானி(இந்தி-உருது) ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளன.

பிசிய மொழியைத் தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இத்தீவில் 37 விழுக்காடுகள் இந்தியக் குடியினர் ஆவர். இவர்கள் வடநாட்டு மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னாட்டு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசினாலும், பெரும்பான்மையினரான இந்தி பேசுவோரின் எண்ணிக்கையால் இந்தியே ஆட்சி மொழியானது. குடியேற்றவாத காலத்தில் இருந்து ஆங்கிலம் இத்தீவின் ஆட்சிமொழியாக உள்ளது. 1997 ஆம் ஆண்டுவரை தனி ஆட்சிமொழியாயிருந்தது. அரசு, கல்வி, வியாபாரம் ஆகியவை ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. குறிப்பிடத்தக்க அளவில் விசிய மொழியிலும் வியாபாரம் நடைபெறுகிறது. பிசித் தீவில் சிறுபான்மையினரால் சில பிசிய மொழிகளும் பேசப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

19ஆம் நூற்றாண்டு வரையிலும், பிசித் தீவுகளில் பூர்வகுடியினர் மட்டுமே வசித்தனர். இவர்கள் பிசித் தீவின் மொழிகளை மட்டுமே பேசிவாழ்ந்தனர், பிரித்தானிய ஆதிக்கத்தின்கீழ் இத்தீவு வந்தபோது, இந்தியாவில் இருந்து வேலையாட்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் இந்துசுத்தானி (இந்தி-உருது) மொழி பேசியவர்களே அதிகம். இன்றைய சூழலில், ஆங்கிலம், பிசி இந்தி, விசிய மொழி ஆகியவை சொல்லளவிலும், இலக்கண அளவிலும், ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கின்றன. இதேபோன்றே பிற சிறுபான்மையினர் மொழிகளிலும் பிற மொழிகள் கலந்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில் சீன மொழி பேசுவோரும் உள்ளனர்.

மொழிகள்

[தொகு]

ஆங்கிலம்

[தொகு]

பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டதில் இருந்து பிசித் தீவுகளில் ஆங்கிலம் பேசப்பட்டு வருகிறது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், பெரும்பாலான பிசியர்கள் எளிய ஆங்கிலம் பேசக் கற்றிருந்தனர். இன்றும் இங்கு பேசப்படும் ஆங்கிலம் இத்தீவிற்கென்று தனித்துவமானது. மொழியியலாளர்கள் இதை ஆங்கிலத்தின் தனிவட்டார வழக்கு என்று கூறுகின்றனர். இருப்பினும், அரசு பொது ஆங்கிலத்தினைப் பயன்படுத்துகிறது. பிசியம் மற்றும் இந்தி மொழிகளில் இருந்து பல சொற்களைப் பெற்றுக் கொண்டுள்ள கொச்சை ஆங்கிலத்தை, வழிபடும் இடங்களிலும் பொது இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

பிசியம்

[தொகு]

பிசித் தீவின் கிழக்குப் பகுதியினர் மொழியே ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவே பவுன் அல்லது பிசியம் அல்லது விசிய மொழி எனப்படுகிறது. இம்மொழியினை 300,000 மக்கள் தாய்மொழியாகவும் மேலும் 300,000 மக்கள் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். பிரித்தானியரால் இம்மொழி ஆட்சிமொழியாக்கப் பட்டதன் காரணம், இது ஆதிக்க மொழியாக மட்டுமின்றி, அரச வம்சத்தினர் மொழியாகவும் விளங்கியதுமாகும். இம்மொழி, பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு பொது மொழியாக ஆனது.

பிசி இந்தி

[தொகு]

இது பிசி உருது, பிசி இந்துசுத்தானி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குடியேறிய இந்தியரில் பெரும்பான்மையினர் இந்துசுத்தானி பேசுகின்றனர். இங்கு பேசப்படும் இந்துசுத்தானி (இந்தி-உருது மொழி) இந்தியாவின் அவாதி மற்றும் போச்சுப்புரி மாவட்டப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழி. தற்போது பல ஆங்கில, பிசிய மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பிசி இந்திக்கும் இந்திய இந்திக்கும் உள்ள தொடர்பு, ஆப்பிரிக்கான்சுக்கும் இடச்சு மொழிக்கும் உள்ள தொடர்பை ஒத்திருக்கிறது. தொடக்கத்தில், கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டாலும், பின்னாளில், ஏறத்தாழ 15000 மக்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் பின்னர் வந்த தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் ஏற்கனவே நிலை பெற்றிருந்த இந்தி மொழியைக் கற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பிற மொழிகள்

[தொகு]

பிசித் தீவில் பன்மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். இத்தீவுடன் இணைக்கப்பட்ட ரொடுமா என்னும் தீவில் வாழும் ரொடுமிய மக்கள் 12000 பேர் ரொடும மொழி எனப்படும் மொழியைப் பேசுகின்றனர்.

தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். குடும்பத்தினரிடம் தாய்மொழியில் பேசினாலும், பிறருடன் பிசி இந்தி மொழியில் பேசுகின்றனர்.

சீனக் கண்டோனிசு மொழியைப் பேசும் சீனர்களும் இங்கு குடியேறுவதால் இம்மொழியும் பரவலடைந்து வருகிறது. வேறு சில தீவு மொழிகள் பேசப்படுகின்றன. பனாபிய மொழியைப் பேசுவோர் 3000 பேர் இருக்கின்றனர். சிறுபான்மையினர் துவாலிய மொழியையும், தோங்க மொழியையும் பேசுகின்றனர்.

மேலும் பார்க்கவும்

[தொகு]