குறிக்கோளுரை | தாங்குமை, தரம், புதுமைநோக்கு, ஆக்கத்திறன் |
---|---|
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | திசம்பர் 2004[1] |
வேந்தர் | எபெலி நைலடிகாவ் |
துணை வேந்தர் | பேரா. மகேந்திர குமார் |
அமைவிடம் | , |
இணையதளம் | www.unifiji.ac.fj/ |
பிஜிப் பல்கலைக்கழகம் (University of Fiji) பிஜியின் இரண்டாவது பெரிய நகரமான லூடோக்காவின் சாவேனிப் பகுதியில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்து சமய சார்புள்ள அமைப்பான பிஜி ஆரிய பிரதிநிதி சபையின் நிதி உதவியுடனும் பிஜி பயன்பாட்டுக் கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதலிலும் திசம்பர் 2004இல் நிறுவப்பட்டது. பெப்ரவரி 14, 2006இல் உள்ளூர் நில அறக்கட்டளை வாரியத்துடன் கண்ட உடன்பாட்டின்படி F$100,000க்கு தனது வளாகத்திற்கான ஐந்து ஏக்டேர் பரப்பிலான நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளது; தவிரவும் நில உரிமையாளர்களின் மக்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு படிப்புதவி மானியம் வழங்கவும் உடன்பட்டுள்ளது.[2]
இப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகள் மார்ச்சு 2008இல் கௌரவிக்கப்பட்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பிஜி அரசுத்தலைவரும் ஆன ராட்டு ஜோசபா லோயில்வாட்டு இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விசியனிலும் இந்தியிலும் அடிப்படைக் கல்வி வழங்குவதை பாராட்டினார்: “நம்மிடையே நல்ல புரிந்துணர்வும் தொடர்பாடலும் ஒருவருக்கொருவர் உதவி புரிதலும் இருப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையானது. ஒவ்வொருவரும் மற்றவரின் மொழியில் உரையாடக் கூடுவது இதற்கு இன்றியமையாததாகும்.”[3] விசிய மொழி பெரும்பான்மையினராலும் இந்தி மொழி சிறுபான்மையினரில் பெரும்பாலோராலும் பேசப்படுகிறது.
பிஜிப் பல்கலையில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான கல்வித்திட்டங்கள் பின்வரும் துறைகளில் வழங்கப்படுகின்றன: கணக்கியல், பொருளியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், மொழிகளும் இலக்கியமும், விசிய மொழியும் பிஜிப் பண்பாடும், மருத்துவம், சட்டம், மற்றும் இந்தி மொழியும் பண்பாடும்.[3]
இதன் அங்கங்களாக ஆறு "மீசிறப்பு மையங்கள்" இயங்குகின்றன: உள்நாட்டுக்குரிய ஆய்வுகளுக்கான மையம் (CIS), பன்னாட்டு மற்றும் பிராந்திய கற்கைக்கான மையம் (CIRA), எழுத்து, நன்னெறி மற்றும் அமைதிக் கல்விக்கான காந்தி-தப்பூ மையம் (WEPS), புலம்பெயர்ந்தோர் குறித்த கல்விக்கான மையம் (CDS), பாலியல் ஆய்வுக்கான மையம் (CGR), ஆற்றல், சூழலியல் மற்றும் வளம்குன்றா வளர்ச்சிக்கான மையம்.[3]
பல்கலைக்கழக நிர்வாகத்தை பிஜிப் பல்கலைக்கழக அவை மேற்கொள்கிறது. ஆரிய பிரதிநிதி சபையினரைத் தவிர ஸ்ரீ சனாதன் தர்மம், பிஜி முசுலிம் லீக், குசராத் கல்விச் சமூகம், சீக்கியர் கல்விச் சமூகம், ஆந்திரா சங்கம், கபீர் பத் சபை, பிஜி ஆசிரியர்கள் சங்கம் போன்ற அமைப்பினர்களும் இதன் புரவலர்களாக உள்ளனர். பல்கலைக்கழக அவை உறுப்பினர்களாக தென் பசிபிக் பல்கலைக்கழகம், பிஜி தேவாலயங்களின் அவை, பிஜி மற்றும் ரோடுமா மெதாடிஸ்ட் திருச்சபை, பிஜி உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, பிஜி கிர்மிட் மையம், தலைவர்களின் பேரவை, பா மாகாண சட்டப் பேரவை, கிஜி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் சார்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தவிரவும் மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் சமூக அடிமட்ட மாணவர்களுக்காக இந்திய-பிஜி விழாக் குழுவினர் பெப்ரவரி 16, 2006இல் F$10,000 தொகையை நன்கொடையாக அளிதுள்ளனர்.
பிஜிப் பல்கலைக்கழகம் ஆத்திரேலியாவின் கான்பெர்ரா பல்கலைக்கழகத்துடன் ஆய்வு மற்றும் மாணவர்/ஆசிரியர் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திட்டுள்ளனர்.