பினாங்கு கொடி மலை Bukit Bendera Penang Penang Flagstaff Hill | |
---|---|
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°25′28″N 100°16′08.1″E / 5.42444°N 100.268917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு |
உருவாக்கம் | 1906 |
ஏற்றம் மலை உயரம் (மீட்டர்) | 823 m (2,750 ft) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 11300 |
மலேசிய தொலைபேசி எண் | 04 |
மலேசிய போக்குவரத்து பதிவெண் | P |
பினாங்கு கொடி மலை அல்லது புக்கிட் பெண்டேரா (மலாய் மொழி: Bukit Bendera Penang; ஆங்கிலம்: Penang Hill அல்லது Penang Flagstaff Hill) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும். பினாங்குத் தீவில், இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது. பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன், பினாங்கு தலைநகர் மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. பினாங்கு மலையை, மலேசியத் தமிழர்கள் கொடி மலை (Flagstaff Hill) என்று அழைக்கிறார்கள்.[1][2]
மலாய் மொழியில் புக்கிட் பெண்டேரா என்று அழைக்கப் படுகிறது. புக்கிட் என்றால் மேடு அல்லது மலை. பெண்டேரா என்றால் கொடி. மலேசியாவின் முதல் மலைவாழிடம் என்று அழைக்கப்படும் பினாங்கு மலையை, பிரான்சிஸ் லைட் கண்டுபிடித்தார். செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்ற போது, இந்த மலைவாழிடம் கண்டுபிடிக்கப்பட்டது.[3] [2]
18-ஆம் நூற்றாண்டில், பினாங்குத் தீவு, கெடா மாநிலத்துடன் இணைந்து இருந்தது. 1765-ஆம் ஆண்டு, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில், ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்த கேப்டன் பிரான்சிஸ் லைட் என்பவர், பினாங்கில் காலடி வைத்தார்.[4] அந்தக் கட்டத்தில் வாசனைத் திரவியங்களுக்கும், அபின் போதைப் பொருட்களுக்கும் பினாங்குத் தீவு பெயர் பெற்று இருந்தது.
காலப் போக்கில், பிரான்சிஸ் லைட், கெடா சுல்தானின் நன்மரியாதையைப் பெற்றார். அதனால் அவருக்கு 1786 ஆகஸ்ட் 11-இல் பினாங்குத் தீவு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பின்னர் பிரான்சிஸ் லைட், பிரித்தானிய இந்தியா அரசுக்கு பினாங்குத் தீவை வழங்கினார். பினாங்குத் தீவிற்கு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் நினைவாக வேல்ஸ் இளவரசர் தீவு எனப் பெயரிட்டப் பட்டது.[5]
அந்தக் கட்டத்தில், சியாம் அரசு, பினாங்கின் மீது படையெடுக்கத் தயாராக இருந்தது. சியாமிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து கெடாவைப் பாதுகாப்பதாக, பிரான்சிஸ் லைட் வாக்குறுதி அளித்தார். அந்த வகையில், பினாங்குத் தீவின் நிறுவனர் பிரான்சிஸ் லைட் என இன்றும் நினைவுகூறப் படுகிறது.[6] இருப்பினும், கெடாவின் மீது சியாமிய இராணுவம் படையெடுத்த போது, பிரான்சிஸ் லைட் பாதுகாப்பு வழங்கவில்லை.[7]
அதனால், கெடா சுல்தான், பிரான்சிஸ் லைட்டின் மீது படையெடுத்தார். அந்தப் படையெடுப்பில் கெடா சுல்தான் தோல்வி அடைந்தார். இருப்பினும், இரு தரப்புக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வருடா வருடம் கெடா சுல்தானுக்கு 6000 ஸ்பானிய டாலர்களைத் திறையாக வழங்குவதற்கு பிரான்சிஸ் லைட் ஒப்புக் கொண்டார். அந்த ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. பினாங்கு அரசாங்கம், கெடா அரசாங்கத்திற்கு, 18,000 ரிங்கிட்டை திறைவரியாகச் செலுத்தி வருகிறது.[8]
கெடா சுல்தானிடம் இருந்து பினாங்குத் தீவு கிடைக்கப் பெற்றதும், அந்தத் தீவின் தற்காப்பிற்காக ஒரு கோட்டையைக் கட்டினார்கள். அதன் பெயர் கோர்ன்வாலிஸ் கோட்டை. அந்தக் கோட்டை இன்றும் பினாங்கில் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது.[9]
அதன் பின்னர், பிரான்சிஸ் லைட்டின் நிர்வாகக் காலத்தில், செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்றார்கள். அப்போது, இந்த மலைவாழிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பினாங்கு மலையில் படிப்படியாக சில வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
பினாங்கு கொடி மலை கருங்கல் சார்ந்த ஓர் நிலப்பகுதியாகும். இந்த மலை வடக்குப் பகுதியில் உயரமாகச் செல்கிறது. வெஸ்டர்ன் ஹில் என்று அழைக்கப்படும் மேற்கு மலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 833 மீட்டர் (2,723 அடி) வரை உயரமாக இருக்கிறது. மேற்கு மலைப் பகுதியில் சில உச்சி மலைகளும் உள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள அட்மிரல் மலை (மலாய் மொழி: Bukit Laksamana; ஆங்கிலம்: Admiral Hill), புலி மலை, கொடிக் கம்ப மலை, அரசாங்க மலை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கொடிக் கம்ப மலை (Flagstaff Hill) 735 மீட்டர் உயரம் கொண்டது.[10] இந்த மலையில் இருந்து, சிறு ஆறுகளும் அருவிகளும் ஊற்றெடுக்கின்றன. அவற்றுள் சுங்கை பினாங் என்று அழைக்கப்படும் பினாங்கு ஆறுதான் பெரியது.
பினாங்கு கொடி மலையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், அது ஒரு விடுமுறை ஓய்வுத் தளமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கொடி மலைக்கு அருகிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றாண்டு கால வளமனைகள் இன்னும் உள்ளன. அந்த மலையின் வடக்கு பகுதியில் மட்டும் மேம்பாடுகள் தெரிகின்றன.
அரசாங்க மலை, புக்கிட் தீமா போன்ற மலைப்பகுதிகள் நீர்ப் பிடிப்பு வளாகங்களாகும். அதனால், இந்த இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப் படுவது இல்லை.
ஆயர் ஈத்தாம் மலையடிவாரத்தில் இருந்து, 2007 மீட்டர் உயரத்தில் உள்ள கொடிமலை உச்சிக்கு கயிற்றிழுவை இருப்புப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கொடி மலையின் உச்சிக்குச் செல்ல, இரயில் சேவையைப் பயன்படுத்துவதே வசதியாகும். கொடிமலைக்கு இரயில் சேவை தொடங்கப் பட்டதில் ஒரு வரலாற்றுப் பின்னணியே இருக்கிறது.
1788-ஆம் ஆண்டில் கொடிமலைக்குச் செல்ல, குதிரைகளைப் பயன்படுத்தும் திட்டம் உருவானது. பிரான்சிஸ் லைட் தான் அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.[11] 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், பிரித்தானிய குடியேற்றவாதிகள் தங்களின் தனிப்பட்ட வசதிகளுக்காக வளமனைகளைக் கட்டினார்கள். வசதி படைத்த சீனர்களும், பிரித்தானியர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என மாளிகைகளைக் கட்டிக் கொண்டனர்.[11]
இருப்புப் பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர், மலை உச்சிக்குச் செல்ல விரும்புபவர்கள் நாற்காலிகளில் அமர்த்தப் பட்டு தூக்கிச் செல்லப் பட்டனர். ஒரு நாற்காலிக்கு ஒரு பயணி என ஆறு பேர் தூக்கிச் சென்றனர். நாற்காலி தூக்கிகள் ஒவ்வொருவருக்கும் 46 காசுகள் ஊதியம் கொடுக்கப்பட்டது.[11]
இந்தக் கட்டத்தில், கயிற்றிழுவை இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் 1897-இல் உருவானது. ஆனால், 1906-ஆம் ஆண்டில்தான் செயல்முறைக்கு வந்தது. அந்த ஆண்டுதான், கொடிமலை இரயில் சேவை நிர்மாணிப்புப் பணிகளும் தொடங்கின. 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற அந்தப் பணிகள், 1923-ஆம் ஆண்டு முடிவுற்றது. 1923 அக்டோபர் 21-இல், கொடிமலை இரயில் சேவை பொதுமக்களுக்கு திறந்துவிடப் பட்டது.[11]
அந்தக் காலத்திலேயே, நிர்மாணிப்புப் பணிகளுக்கு 1,573,000 மலாயா ஸ்டிரேயிட்ஸ் டாலர்கள் செலவாயின. அந்த இரயில் பாதை ஒரு மைல் 435 கெஜம் நீளம் கொண்டது. அரை மணி நேர இரயில் பயணம். பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரயில் இடையிடையே நின்று பயணிக்கும் வசதியும் வழங்கப் படுகிறது.
2010-ஆம் ஆண்டு, கொடிமலை இரயில் சேவையின் புதிய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றதும், 2011-ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலும் புதிய முறையிலான இரயில் சேவை முறை அமல்படுத்தப்பட்டது.
முன்பு காலத்தில், பயணத்தின் முதல் பாதியை ஓர் இரயிலும், மறு பாதியை மற்றோர் இரயிலிலும் மாறி மாறிப் பயணிக்க வேண்டும். இப்போதைய புதிய முறையில், ஒரே இரயிலில் கொடிமலையின் உச்சியை அடையும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு, கொடிமலைக்கு 1.2 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களில் 281,487 பயணிகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளாவர். சிறந்த இரயில் சேவை, தூய்மை, பாதுகாப்பு, உடல் ஊனமுற்றோருக்கான வசதிகள், இரயில் சேவைக்கான கட்டணம், கொடிமலை நிறுவன ஊழியர்களின் நட்புறவு போன்றவை நிறைவளிப்பதாக அமைகின்றன.[12]
கொடிமலையின் மேற்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு மையம், மக்கள் நிகழ்ச்சி மேடை, பழமை வாய்ந்த சுப்பிரமணிய ஆலயம், புத்தர் ஆலயம், மூலிகைப் பூங்கா, தங்கும் விடுதிகள் போன்றவை, சுற்றுப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.