பினாங்கு தேசியப் பூங்கா Penang National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
வானரக் கடற்கரை Monkey Beach | |
அமைவிடம் | பினாங்கு மலேசியா |
ஆள்கூறுகள் | 5°44′N 100°19′E / 5.733°N 100.317°E |
பரப்பளவு | 25.63 km2 (9.90 sq mi) |
நிறுவப்பட்டது | 2003 |
நிருவாக அமைப்பு | பினாங்கு அரசு |
www |
பினாங்கு தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Pulau Pinang; ஆங்கிலம்: Penang National Park சீனம்: 槟城国家公园; ஜாவி: تامن نݢارا ڤولاو ڤينڠ) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்காவாகும்.[1]
இந்தப் பூங்கா பினாங்குத் தீவின் வடமேற்கு முனையில் அமைந்து உள்ளது. 25.63 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. நிலம் கடல்சார் அறிவியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால், இந்தப் பூங்காவின் இயற்கைத் தன்மை ஆய்வுகள் செய்யப் படுகின்றன.[2]
முன்பு அச்சே கடற்கரை வனக் காப்பகம் (Pantai Acheh Forest Reserve) என்று அழைக்கப்பட்டது. இந்த அழகியக் காப்பகம், 417 தாவரங்கள் மற்றும் 143 விலங்கினங்களைக் கொண்டு உள்ளது. ஏப்ரல் 2003-இல் இந்த வனக் காப்பகம், பினாங்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1]
1980-ஆம் ஆண்டு மலேசியாவின் தேசிய பூங்கா சட்டத்தின் கீழ் (Malaysia's National Park Act of 1980) சட்டப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்ட முதல் பாதுகாக்கப்பட்ட பகுதி, இந்தப் பினாங்கு தேசியப் பூங்கா ஆகும்.
1955-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் காட்டு மரங்கள் வெட்டப் பட்டன. 1996-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்து மரம் வெட்டும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விட்டன.
மலேசியாவில் வேறு எங்கும் காணப்படாத ஐந்து இயற்கை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன என்பது இந்தப் பூங்காவின் தனிச் சிறப்பாகும். ஆமைகள், ஓடுடைய கணுக்காலி (crustaceans) மற்றும் அரிய தாவரக் குடுவை வகைத் தாவரங்கள் (pitcher plants); உட்பட 417 தாவரங்கள்; 143 விலங்கினங்களின் புகலிடமாக இந்தப் பூங்கா விளங்குகிறது.
இந்தப் பூங்காவின் கடற்கரை நீளமானது. பாறைகளில் பொன்சாய் ரக மரங்கள் உள்ளன. மற்றும் மூலிகைச் செடிகளும், ஏராளமான தாவரங்களும் உள்ளன.
செங்கால் மரம் (chengal); மெராந்தி செராயா (meranti seraya); ஜெலுத்தோங் (jelutong); ககாரு (Agarwood); தொங்காட் அலி (tongkat ali); மற்றும் பிந்தாங்கோர் (bintangor) போன்ற மரங்களும் செடிகளும் இங்கு காணப் படுகின்றன.[3]
துக்குன் (Tukun) கடற்கரையில் பல சதுப்புநிலக் காட்டு மரங்கள் காணப் படுகின்றன. செங்குத்தான பாறைச் சரிவுகளில், காட்டு ஆர்க்கிட் மலர்களைக் (Wild orchid) காணலாம். மற்றும் முந்திரி மரங்கள் இங்கு அதிகமாகவே உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நடவடிக்கைகள் இங்கு நடந்து இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றது.
பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படும் உயிரினங்களில் டால்பின்கள்; நீர்நாய்கள், கடல் ஆமைகள் (Hawksbill turtle); மற்றும் குரங்குகள் உள்ளன. டஸ்கி இலை குரங்குகள் (Dusky leaf monkey); மற்றும் நீண்ட வால் கொண்ட மக்கா குரங்குகளும் காணப்படுகின்றன.[3]
இந்தப் பூங்கா 46 வகையான பறவை இனங்களுக்கு அடைக்கலம். தடித்த அலகு மீன்கொத்தி (stork-billed kingfisher); வெள்ளை-மார்பக நீர்கோழிகள் (white-breasted waterhens) மற்றும் பெரிய கொக்குகள் (Great Egret) போன்றவற்றின் தாயகம்.[3]
வெள்ளை வயிறு கடற்கழுகுகள் (white-breasted sea eagle); செம்பருந்துகள் (Brahminy Kite); மற்றும் மீன் கொத்திகள் போன்ற குறிப்பிடத்தக்கப் பெரிய பறவைகளும் உள்ளன.
பினாங்கு தேசியப் பூங்காவின் ஒன்பது கடற்கரைகளும், பினாங்குத் தீவில் சிறந்த கடற்கரைகளாகக் கருதப் படுகின்றன.