பிரக்யாசுந்தரி தேவி (Pragyasundari Devi) (1884 - 1950 ), பிரக்யாசுந்தரி தெபி, பிரக்யாசுந்தரி தெபி பிரக்னசுந்தரி பாசுபரூவா என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய சமையல் புத்தக எழுத்தாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். இவரது அமிஷ் ஓ நிரமிஷ் அஹார் என்ற சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகம் வங்காள மொழியில் ஒரு குறிப்பிடத்தக்க ஆரம்ப சமையல் புத்தகமாக இருந்தது. [1]
பிரக்யாசுந்தரி தேவி விஞ்ஞானி ஹேமந்திரநாத் தாகூரின் மகளும் மற்றும் பூர்ணிமா தேவியின் சகோதரியுமாவார். தத்துவஞானியான தேபேந்திரநாத் தாகூர் மற்றும் தொழிலதிபர் துவாரகநாத் தாகூர் ஆகிய இருவரும் இவரது தாத்தா ஆவர். நோபல் பரிசு பெற்றவரும் கவிஞருமான இரவீந்திரநாத் தாகூர் இவரது மாமா ஆவார். நீட்டிக்கப்பட்ட தாகூர் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களில், புதின ஆசிரியர் சுவர்ணகுமாரி தேவி இவரது அத்தையாவார். இவரது மாமாக்களில் தத்துவஞானி திவிஜேந்திரநாத் தாகூர், இந்திய ஆட்சிப்பணியாளர் சத்யேந்திரநாத் தாகூர் மற்றும் கலைஞரான ஜோதிரிந்திரநாத் தாகூர் ஆகியோரும் அடங்குவர். இந்திய பெண்ணியலாளர் சரளா தேவி சௌதுராணி இவரது உறவினர் ஆவார். [2]
இவரது முதல் சமையல் புத்தகம் (அமிஷ் ஓ நிராமிஷ் அஹார் ) "வங்காள மொழியில் முதல் சமையல் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது, [3] இது 1902இல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தில் மலிவு விலைக் காய்கறிகளை திறம்பட பயன்படுத்தி சமையல் செய்ய ஊக்குவித்தார். மேலும் "நிறைய பணம் செலவழிப்பது நல்ல உணவுக்கு உத்தரவாதம் இல்லை" என்று இதன் முதல் தொகுதியில் வீட்டில் சமைப்பவர்களை எச்சரித்தார். [4] இவர் இதன் இரண்டாவது தொகுதியில் சைவ சமையல் பற்றியும், பின்னர் மேலும் இரண்டு சமையல் புத்தகங்களையும் வெளியிட்டார். அதில் சில இறைச்சி உணவுகள் சமையலும் இருந்தன. இவரது பிற்கால சமையல் புத்தகங்கள் அசாமின் சமையல் மற்றும் ஊறுகாய் மற்றும் பாதுகாப்புகளில் கவனம் செலுத்தின. [2]
1897 ஆம் ஆண்டு தொடங்கி, பிரக்யாசுந்தரி தேவி புன்யா என்ற மகளிர் பத்திரிகையைத் பதிப்பித்துள்ளார். அதில் சமையல் குறிப்புகளும் அடங்கும். [5]
பிரக்யாசுந்தரி தேவி அசாமிய மொழி எழுத்தாளரும் இலக்கிய முகவருமான லட்சுமிநாத் பாசுபரூவாவை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகள்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மிக இளம் வயதில் இறந்துபோனார். ஐந்து பேத்திகள் மற்றும் ஒரு பேரன், பதினொரு பேரப்பிள்ளைகள் எனப் பெரியக் குடும்பம் இருந்தது. [6] இவர் தனது சமையல் குறிப்புகளை புத்தக வடிவில் வெளியிட ஊக்குவித்தார். பிரக்யாசுந்தரி தேவி 1950 இல் இறந்தார். இவரது பேத்தியான இரா கோசு "அமிஷ் ஓ நிராமிஷ் அஹாரி"ன் சமீபத்திய பதிப்பில் இவரது வாழ்க்கை வரலாற்று அறிமுகத்தை எழுதினார். மேலும் தற்போதைய அளவீடுகள் மற்றும் செய்முறைகளுடன் அதை புதுப்பித்தார். [2] [7] மற்றொரு பேத்தியான, ரீத்தா தேவி, நன்கு அறியப்பட்ட ஒடிசி நடனக் கலைஞராவார். [8] [9]