12°18′21.07″N 76°40′26.76″E / 12.3058528°N 76.6741000°Eபிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், மைசூர் (Regional Museum of Natural History, Mysore) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் தெற்கு பிராந்தியத்தில் காணப்படுகின்ற தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியியல் பற்றிய காட்சிப்பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய அளவிலான நிறுவனம் என்ற முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில், தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராந்திய மாநில அளவிலும், பிராந்திய அளவிலும் அலுவலகங்களை அமைக்கவேண்டும் என்று ஏழாம் திட்டத்தில் அரசு முடிவெடுத்ததன் அடிப்படையிலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வினைக் கொணரும் வகையிலும் அமைக்க முடிவெடுத்ததன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. [1]
மைசூரில் உள்ள பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 20 மே 1995 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை இந்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் கரஞ்சி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இதன் பின்னணியில் சாமுண்டி மலைகளைக் காண முடியும். இது இப்போது நகரத்தின் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தின் தாவரங்கள், விலங்குகள் மற்றும் புவியியல் தொடர்பான கூறுகளை காட்சிப்படுத்தி வைத்துள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கிடையேயான சுற்றுச்சூழல் தொடர்பை சித்தரிப்பதோடு இயற்கையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது தொடர்பான கூறுகளையும் காட்சிப்பொருள்களாகக் காட்சிப்படுத்தியுள்ளது. பார்வை குன்றிய மாணவர்கள் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலங்குகளை உணரும் வகையில் உள்ளன. இந்த அருங்காட்சியகம் பள்ளிகளுக்கு ஒரு வகையான செயல்பாட்டை வழங்குகிறது. மேலும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்கினை வகிக்கிறது.
தற்காலிகச் சூழலுக்கு ஏற்றவான கண்காட்சிகள் அவ்வப்போது இங்கு நடத்தப்படுகின்றன. மேலும் தினமும் இங்கு இயற்கை வரலாறு, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் தொடர்பான திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுகின்றன. இப்படங்கள் காலை 11.00 முதல் 12.00 வரையிலும், மதியம் 3.00 முதல் 4.00 வரையிலும் திரையிடப்படுகின்றன. [2] இங்குள்ள உயிரியல் பன்முகத்தன்மை காட்சியகம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவானது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. இது இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தின் பல்லுயிர் தன்மையைக் கொண்ட கூறுகளைக் காட்சிப்படுத்துகிறது. அடுத்த பிரிவானது வெப்பமண்டல மழைக்காடுகள், அவற்றைக் கொண்ட நாடுகள், அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் உலகளாவிய நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில் உள்ள காட்சிப்பொருள்களைக் கொண்டு அமைந்துள்ளது, அடுத்த பிரிவு பகுதி ஈரநிலங்கள் மற்றும் சதுப்புநில காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுகிறது. அடுத்த பிரிவு ஒரு கடல் வாழ்விடத்தின் டியோராமாவை சித்தரிக்கிறது. கடைசி பிரிவில் அழிவு இயற்கை பன்முகத்தன்மைக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான கண்காட்சிப்பொருள்களை கொண்டு அமைந்துள்ளது. யுகங்கள் வழியாக வாழ்க்கை என்பது நடைப்பயண சுரங்கப்பாதை வடிவில் அமைந்துள்ளது. இந்தப் பிரிவானது வாழ்க்கையின் பரிணாமத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்டுபிடிப்பு மையம் ஒரு கண்டுபிடிப்பு அறை, ஒரு கணினி அறை, ஒரு விவேரியம் மற்றும் ஒரு சிறிய வானிலை நிலையம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கண்டுபிடிப்பு அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாதிரிகளை குழந்தைகள் எளிதில் கையாள முடியும். அதுபோல ஆய்வு செய்யலாம் மற்றும் படிக்கவும்கூட செய்யலாம். ஒரு மினி தியேட்டர், ஒலி அரங்கம் ஆகியவை இங்கு உள்ளன. உயிரியல்பு கணினி அறை ஒரு உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி நிலையில் மல்டிமீடியா நுட்பங்கள் மூலமாக உயிரியலைப் படிக்க உதவுகிறது.
அருங்காட்சியகத்தின் தரை தளத்தில் ஒரு சிறிய தாவரவியல் பூங்கா உள்ளது. அந்த தாவரவியல் பூங்காவில் உள்ளூர் மரங்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற தாவரங்களின் தொகுப்புகள் காணப்படுகின்றன.
பூங்காவில் பார்வைக் குன்றியோர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விளக்கப் பிரிவு அமைந்துள்ளது. பிரெய்லி எழுத்து முறையில் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அங்கு ஒரு நீர் மூழ்கி பாலம் உள்ளது. நீர்வாழ் தாவரங்கள் மற்றும் மீன்களின் "நீரில் நடந்து" செல்வது போன்ற அனுபவத்தை அனைவரும் பெற முடியும் வகையில் அது அமைந்துள்ளது. அருங்காட்சியக காப்பாட்சியர்கள் இந்தப் பிரிவினை "இந்தியாவில் பார்வையற்றோருக்கான முதல் அருங்காட்சியக தோட்டம்" என்று விவரிக்கிறார்கள்.
இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர பிற நாள்களில் பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்படுகிறது. பார்வை நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆகும். இதனைச் சுற்றிப் பார்க்க 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம். [2] கற்றலில் வேடிக்கை உணர்வினைத் தந்து கற்றுவிக்கும் அருங்காட்சியகங்கள் சிலவே உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும். இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் குழந்தைகள் வேடிக்கை சார்ந்த பல நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அவற்றை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. [3]