பிரிதிவிவர்மன்

பிரிதிவிவர்மன்
பரம-பட்டாரக மகாராசாதிராசன் பரமேசுவரன்
புந்தேல்கண்ட் அரசன்
ஆட்சிக்காலம்சுமார் 1120–1128 பொ.ச.
முன்னையவர்செயவர்மன்
பின்னையவர்மதனவர்மன்
அரசமரபுசந்தேலர்கள்
தந்தைகீர்த்திவர்மன்

பிரிதிவிவர்மன் ( Prithvivarman ) (ஆட்சிக் காலம் பொ.ச. 1120-1128 ) சந்தேல வம்சத்தின் அரசனாவான். இவன் தனது மருமகன் செயவர்மனுக்குப் பிறகு செகசகபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளரானான்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மவூ கல்வெட்டில் கூறப்பட்டுள்ளபடி, பிரிதிவிவர்மனும் இவனது மூத்த சகோதரர் சல்லக்சணவர்மனும் சந்தேல ஆட்சியாளன் கீர்த்திவர்மனின் மகன்கள் எனத் தெரிகிறது.[1] கீர்த்திவர்மனின் மரணத்திற்குப் பிறகு, சந்தேல பிராந்தியத்தை சல்லக்சணனும் அவனது மகன் செயவர்மனும் ஆட்சி செய்தனர். செயவர்மன் அரியணையைத் துறந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரிதிவிவர்மன் புதிய மன்னரானான். [2]

தொழில்

[தொகு]

இவனது முன்னோடிகளைப் போலவே, இவனும் அனுமன் தெய்வத்தைக் கொண்ட செப்பு நாணயங்களை வெளியிட்டான்.[3] இவனைப் பற்றிய தகவல்கள் நான்கு பிற்கால சந்தேல கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[4]

  • மதனவர்மனின் ஔகாசி செப்புத்தகடு கல்வெட்டு
  • மதனவர்மனின் மவூ கல்வெட்டு
  • கல்யாணதேவியின் அஜய்கர் கல்வெட்டு (வீரவர்மனின் மனைவி)
  • கணபதியின் அஜய்கர் கல்வெட்டு

இந்தக் கல்வெட்டுகளில் இவனது புகழ்பெற்ற சாதனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இவன் ஒரு பலவீனமான ஆட்சியாளன் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இவன் தீவிரமான நாடு பிடிக்கும் கொள்கையை ஏற்கவில்லை.[5] இவன் நிர்வாகத்தை சிறப்பாக கையாண்டதாக மவூ கல்வெட்டு கூறுகிறது. ஒழுக்கக்கேடான நபர்களை வெறுப்பதன் மூலமும், தகுதியானவர்களை மகிழ்விப்பதன் மூலமும், சட்டப்படியான செல்வத்தை எடுத்துக்கொண்டு, புனித நூல்களின்படி செலவழித்து, எல்லா உயிர்களையும் பாதுகாப்பதன் மூலமும் "பொற்காலத்தின்" நடத்தையை கடைப்பிடித்தவன் என்று விவரிக்கும் ஒரு வழக்கமான புகழ்ச்சியும் இதில் உள்ளது.[4]

மவூ கல்வெட்டின்படி, இவன் கதாதரன் என்பவனை தனது தலைமை அமைச்சராக நியமித்தான். கதாதரன் முந்தைய மன்னன் செயவர்மனிடம் பணிபுரிந்தான். மேலும் அவரது தந்தை அனந்தன் சந்தேல மன்னர்களிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியுள்ளான். அஜய்கர் கல்வெட்டு கௌடா குடும்பத்தைச் சேர்ந்த கோகுலன் என்பவனை பிருத்விவர்மனின் மற்றொரு பரம்பரை அமைச்சர் என்று குறிப்பிடுகிறது.[6]

ஔகாசி கல்வெட்டில் பிரிதிவிவர்மனுக்கு வழக்கமான அரச பட்டங்களான "பரம-பட்டாரக மகாராசாதிராசன் பரமேசுவரன்" என்று கூறுகிறது. [6] கல்யாணதேவியின் அஜய்கர் கல்வெட்டு இவனை பழம்பெரும் மன்னன் பிருத்துவுடன் ஒப்பிடுகிறது.[4] இவனுக்குப் பின் இவனது மகன் மதனவர்மன் ஆட்சிக்கு வந்தான்.[7]

சான்றுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • P. C. Roy (1980). The Coinage of Northern India. Abhinav. ISBN 9788170171225.
  • R. K. Dikshit (1976). The Candellas of Jejākabhukti. Abhinav. ISBN 9788170170464.
  • Sisirkumar Mitra (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. ISBN 9788120819979.