பிரேமகீர்த்தி டி அல்விஸ் Premakeerthi de Alwis | |
---|---|
பிறப்பு | கொழும்பு, இலங்கை | 3 சூன் 1947
இறப்பு | 31 சூலை 1989 கொழும்பு, இலங்கை | (அகவை 42)
கல்லறை | கனத்தை, கொழும்பு |
கல்வி | ஆனந்தா கல்லூரி |
பணி | ஒலிபரப்பாளர், பாடலாசிரியர் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
வலைத்தளம் | |
www |
பிரேமகீர்த்தி டி அல்விஸ் என அழைக்கப்படும் சமரவீர முதலிகே டொன் பிரேமகீர்த்தி டி அல்விஸ் (Samaraweera Mudalige Don Premakeerthi de Alwis, 3 சூன் 1947 – 31 சூலை 1989) இலங்கை வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் 1987-89 ஜேவிபி புரட்சியின் போது படுகொலை செய்யப்பட்டார்.
டி அல்விஸ் கொழும்பில் 1947 சூன் 3 இல் பிறந்தவர்.[1][2] இவரது தந்தை மருதானையில் இரயில்வே பணியாளராக இருந்தவர்.[1][3] மருதானை மாளிகாகந்தை மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்றார். பாடசாலை செய்தி இதழான தம்ம ஜெயந்தி பத்திரிகையின் இணையாசிரியராக இருந்தார்.[1][3] இலங்கை வானொலியில் இவர் லமா பிட்டிய, லமா மந்தபாய போன்ற பல சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.[3][4]
பிரேமகீர்த்தி தவச குழுமத்தின் விசித்துர இதழில் 1966 இல் இணைந்து சிறப்புக் கட்டுரைகள் எழுதினார்.[5] H1967 திசம்பர் 17 இல் இலங்கை வானொலியில் பகுதிநேஎர அறிவிப்பாளராக இணைந்தார்.[1] 1971 சூன் மாதத்தில் நிரந்தர அறிவிப்பாளரானார். பின்னர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார்.[1] சொந்துரு செவன, செரிசர புவத் சங்காரவ, சானிதா சதய உட்படப் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார்.[4] பின்னர் அவர் ரூபவாகினியில் இணைந்து அந்துன, சனித்த ஆயுபோவன் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கினார்.[4]
1969 இல் இவர் தனது முதலாவது திரையிசைப் பாடலை லொக்கும ஹினவா என்ற சிங்களத் திரைப்படத்திற்காக எழுதினார்.[3] 150 இற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை எழுதியுள்ளார்.[1][3] மொகிதீன் பேக், மில்டன் மல்லவராச்சி, விக்டர் இரத்தினாயக்க போன்ற பிரபலமான பாடகர்களுக்கு இவர் பாடல்களை எழுதியுள்ளார்.[3]
1987-89 ஜேவிபி புரட்சி நடவடிக்கைகளின் போது, பிரேமகீர்த்திக்கு எதிராக பல கொலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இராணுவப் படையான தேசப்பிரேமி ஜனதா வியாபாரய என்ற அமைப்பு இவருக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சோசலிசவாதியான பிரேமகீர்த்தி இவ்வெச்சரிக்கைகளைக் கருத்தில் கொள்ளவில்லை.[6] 1989 சூலை 31 இரவு 8:30 மணியளவில் கொழும்பு ஓமகமையில் உள்ள இவரது வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள்,[6][7] அவரை வெளியே வருமாறு அறிவுறுத்தினர். பிரேமகீர்த்தி பின் கதவால் வெளியேற முற்படும்போது, பின் வளவில் காத்திருந்த மேலும் பல ஆயுததாரிகள்,[6] அவரைப் பிடித்துச் சென்றனர். அவரது மனைவி அவரை விட்டு விடுமாறு கேட்ட போது, விசாரணைக்காகக் கொன்டு செல்வதாக அவர்கள் கூறினர்.[6] பிரேமகீர்த்தியை இழுத்துச் சென்ற ஆயுததாரிகள் அவரை சுட்டுக் கொன்று,[7] அவரது உடலை வீட்டிலிருந்து 200 யார் தூரத்தில் விட்டுச் சென்றனர்.[7]
இக்கொலை குறித்த விசாரணையின் முடிவில், 1992 திசம்பர் 17 அன்று மக்கள் விடுதலை முன்ன்ணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.[8]
2014 சூலையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் செல்லும் சாலை ஒன்றுக்கு இவரது பெயரால் 'பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை' எனப் பெயர் சூட்டப்பட்டது.[9][10]