பிஷ்ணு ஷ்ரேஸ்தா இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்க்கா வீரர் ஆவார். [1]ஒரு இரயில் கொள்ளையின் போது வீரத்துடன் செயல்பட்டதற்காக சேனா பதக்கமும் உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் என்கிற பதக்கமும் இவர் பெற்றுள்ளார். [2][3]
2010 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிஷ்ணு ஷ்ரேஸ்தா என்கிற முப்பத்தைந்து வயது (அப்போது) கூர்க்கா வீரர் இராஞ்சியில் இருந்து தன் சொந்த ஊருக்கு செல்ல கோரக்பூர் இரயில் மூலம் பயணித்து கொண்டிருந்தார்.
மௌர்யா விரைவு இரயில் அவர் பயணித்து கொண்டிருந்த போது, மாலை சுமார் மூன்று நாற்பது மணியளவில் வங்களாத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய வழிப்பறி கொள்ளையர்கள் முப்பது பேர் இரயிலில் ஏறி பயணிகளை மிரட்டி கொள்ளையடிக்கத் துவங்கினர். [4][5]
உறங்கிக் கொண்டிருந்த ஷ்ரேஸ்தா கொள்ளையர்களால் எழுப்பப்பட்ட போது, தன் உடைமைகளைத் தர விழைந்தார். ஆனால், அதற்குள்ளாக அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பதினெட்டு வயது பெண்ணைக் கொள்ளையர்கள் வன்புணர்வு செய்ய முயற்சித்தனர்.
அந்த பெண் உதவி கேட்டு அலறவே, எதாவது செய்ய நினைத்த ஷ்ரேஸ்தா தான் வைத்திருந்த குக்குரி கத்தியால் அவர்களைத் தாக்கத் துவங்கினார். இந்த நிகழ்வைப் பற்றி, அவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பின்னாட்களில் கொடுத்த நேர்காணலில் கீழ்வருமாறு கூறி இருந்தார்.[6]
நான் ஒரு வீரன். மக்களைக் காக்கவே எனக்கு ஊதியம் அளிக்கின்றனர். அவர்கள் கொள்ளையடிப்பதைப் பார்த்து கொண்டு என்னால் வெறுமே இருக்க முடியவில்லை. நான் என் குக்குரியை எடுத்து கொள்ளையர்களைத் தாக்கினேன். முதலில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் மூன்று நபர்களை அதற்குள் காயப்படுத்தி இருந்தேன். அவர்கள் என்னைத் தாக்கத் துவங்கி, என் கத்தியை பிடுங்கி விட்டனர். அவர்களின் துப்பாக்கி குண்டிடம் இருந்து நான் தப்பித்த வேளை, பிற பயணிகள் அவர்களைத் தாக்கத் துவங்கினர்.
காயப்பட்ட ஆறு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நான்கு இலட்சத்து பத்தாயிரத்து நானூற்றி எழுவது ரூவாய் உரொக்கமும் நாற்பத்து மூன்று அலைபேசிகளும் ஏழு மடிக் கணினிகளும் பதினொரு தங்கச் சங்கிலிகளும் பதினான்கு கைக் கடிகாரங்களும் பற்பல கடனட்டைகளும் இரண்டு குண்டுகள் உள்ள துப்பாக்கிகளும் ஏழு குறுங்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.[7]
ஷ்ரேஸ்தாவின் இடது கையில் முறிவு ஏற்பட்டிருந்தது. இரண்டு மாத மருத்துவமனை சேர்ப்புக்கு பிறகு அவர் நலம் பெற்றார். அவரால் காப்பாற்றப்பட்ட பெண், அவருக்கு பணமளித்த போது அதை வாங்க மறுத்த பிஷ்ணு, ஒரு வீரனாக எதிரியை எதிர்கொள்வதும் மனிதனாக கள்வரை வீழ்த்தியதும் தன் கடமை என்று கூறினார். [8]
நடுவணரசும் மராட்டிய அரசும் அவரின் வீரத்திற்காக பதக்கங்கள் அளித்து சிறப்பித்தன. இவருக்கு சேனா பதக்கமும் உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் என்கிற பதக்கமும் கிடைத்தது.