பீகார் பஞ்சம், 1873–1874 (Bihar famine of 1873–1874) அல்லது வங்காளப் பஞ்சம், 1873–1874 (Bengal famine of 1873–1874) என்பது பிரித்தானிய இந்தியாவின் பீகார், வங்காளம் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அவாத் ஆகிய பகுதிகளை 1873-74 காலகட்டத்தில் தாக்கிய ஒரு பஞ்சம். ஏறத்தாழ 1,40,000 ச.கிமீ பரப்பளவுள்ள நிலப்பகுதியும் 2.15 கோடி மக்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.[1] வங்காளத்தின் துணை ஆளுனர் சர் ரிச்சர்ட் டெம்பிள் தலைமையில் நடைபெற்ற காலனிய அரசின் நிவாரணப் பணிகள் இப்பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்தன. இப்பஞ்சத்தினால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் இறக்கவில்லை.[2]
பிரித்தானிய ஆட்சியில் பஞ்ச நிவாரணப் பணிகள் பெரிய அளாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பஞ்சம் இது தான். காலனிய அரசு உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது. வேலையிழந்த தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகைக்கு பதிலாக சாலைக் கட்டமைப்புப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தியது. இந்த நடவடிக்கைகளால் பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டன.[3][1][4] ஆனால் நிவாரணப் பணிகளுக்கு சர் ரிச்சர்ட் டெம்பிள் அதிக அளவில் பணம் செலவழித்தார் என பிற பிரித்தானிய நிருவாகிகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடுத்து நிகழ்ந்த சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அவர் தயங்கினார். இதனால் சென்னை மாகாணப் பஞ்சத்தில் உயிரழப்பு அதிக எண்ணிகையில் நேர்ந்தது.[5][2]