மலேசிய காவல்துறை தலைமையகம் Royal Malaysia Police Headquarters Ibu Pejabat Polis Diraja Malaysia | |
---|---|
லெம்பா பந்தாய், கோலாலம்பூர் மலேசியா | |
ஆள்கூறுகள் | 3°08′53″N 101°41′17″E / 3.148107°N 101.688181°E |
இடத் தகவல் | |
உரிமையாளர் | மலேசிய உள்துறை அமைச்சு |
கட்டுப்படுத்துவது | படிமம்:Flag of the Royal Malaysian Police.svg மலேசிய காவல் துறை |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
1871 – தற்போது வரையில் |
சண்டைகள்/போர்கள் | சிலாங்கூர் உள்நாட்டுப் போர் |
காவற்படைத் தகவல் | |
காவற்படை |
|
தங்கியிருப்போர் | காவல்துறைத் தலைவர் காவல்துறைத் துணைத்தலைவர் |
புக்கிட் அமான் (மலாய்: Bukit Aman; ஆங்கிலம்: Bukit Aman; சீனம்: 武吉阿曼) என்பது கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் அமான் எனும் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள மலேசிய காவல் துறையின் தலைமையகம் (ஆங்கிலம்: Royal Malaysia Police Headquarters மலாய்: Ibu Pejabat Polis Diraja Malaysia); பல காவல் துறை வளாகங்களை (Police Complexes) கொண்டுள்ள ஒரு பெரிய பகுதி ஆகும்.[1]
இது புக்கிட் அயாங் (Bukit Ayang) எனப்படும் மலையில் அமைந்துள்ளது. பின்னர் அந்த மலைக்கு புக்கிட் அமான் என்று பெயர் மாற்றப்பட்டது. புக்கிட் அமான் என்பது 'அமைதி மலை' (Peace Hill) என்று பொருள்படுகிறது. தேசிய அளவிலான கட்டுப்பாட்டு மையமான மலேசியா கட்டுப்பாட்டு மையமும் (Malaysia Control Centre) இங்குதான் அமைந்துள்ளது.[2]
இந்தக் காவல் துறை வளாகம், மலேசிய உள்துறை அமைச்சின் (Ministry of Home Affairs Malaysia) கீழ் இயங்கி வருகிறது.
புக்கிட் அமான் முன்பு சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் படையின் (Selangor Military Police Force) (SMPF) காவல் நிலையமாக விளங்கியது. மேலும் அப்போது அது பிளாப் குன்று (Bluff Hill) என அறியப்பட்டது. 1871-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் படைக்கான காவல் நிலையமாகக் கட்டப்பட்ட அந்த நிலையம்; கோலாலம்பூர் மாவட்டத் தலைமையகமாகச் செயல்பட்டது.
பிளாப் குன்று காவல் நிலையம் சிலாங்கூர் உள்நாட்டுப் போரில் (Selangor Civil War) தன்னை ஈடுபடுத்திக் கொண்டது; 1872-ஆம் ஆண்டில் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப்பட்டது. சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் படை கிள்ளான் நகருக்கு மாற்றப் பட்டதும்; பிளாப் குன்று காவல் நிலையத்தின் பெயர், பிளாப் சாலை காவல் நிலையம் (Bluff Road Police Station) என பெயர் மாற்றம் கண்டது.
ஈயச் சுரங்க நடவடிக்கைகளின் காரணமாக கோலாலம்பூர் ஒரு பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றது. அதன் விளைவாக 1882-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரில் இருந்த சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் நிலையம் கோலாலம்பூருக்கு மாற்றப் பட்டது.
அந்த நேரத்தில், சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் படைக்கு (Selangor Military Police Force) கோலாலம்பூரில் இரண்டு காவல் நிலையங்கள் இருந்தன: பிளாப் சாலை காவல் நிலையம் (Bluff Road Police Station) மற்றும் புடு சாலையில் மத்திய காவல் நிலையம் (Central Police Station). பிளாப் சாலை காவல் நிலையம் தலைமையகமாக தேர்வு செய்யப்பட்டது.[3]
1896 ஜூலை 1-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் (Federated Malay States) இருந்த அனைத்து மாநிலக் காவல் துறைகளும்; மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் காவல் துறையுடன் (Federated Malay States Police) (FMSP) இணைக்கப்பட்டன. அப்போதைய சிலாங்கூர் மாநில இராணுவக் காவல் துறையின் தலைமையகம் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் காவல் துறையின் தலைமையகமாக மாற்றப்பட்டது.
1903-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு ஒரு காவல்துறை பயிற்சி மையம் நிறுவப்பட்டது. 1908-ஆம் ஆண்டு முதல் இரண்டு காவல் துறைகள் இங்கு நிறுவப்பட்டன: துப்பறியும் பிரிவு (Detective Branch) மற்றும் குற்றப் பதிவுப் பிரிவு (Criminal Record Registration Branch). காவல்துறை பயிற்சி மையம் 1940-இல், காவல்துறை பயிற்சி மையம், ரைபிள் ரேஞ்ச் சாலைக்கு (Riffle Range Road) மாற்றப்பட்டது. அது இப்போது புலாபோல் (PULAPOL) என அழைக்கப் படுகிறது.[4]
இரண்டாம் உலகப் போரின் போது, தீபகற்ப மலேசியாவை பாதுகாப்பதற்காக மலாயா இராணுவத்தின் கட்டளை மையமாக (Malaya Command) பிளாப் சாலை காவல் நிலையம் செயல்பட்டது. சப்பானிய இராணுவம் மலாயாவைக் கைப்பற்றிய பிறகு, மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் காவல் துறை, சிலாங்கூரில் இருந்து விலகி தற்காலிகமாக சிங்கப்பூர் தீவிற்கு இடம் பெயர்ந்தது.
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது (Japanese occupation of Malaya) மலாயாவில் இருந்த சப்பானிய இராணுவத்தின் தலைமையகமாக பிளாப் சாலை காவல் நிலையம் செயல்பட்டது.[5]
சப்பானிய இராணுவம் சரணடைந்த பிறகு பிளாப் சாலை காவல் நிலையம் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்திடம் (British Military Administration of Malaya) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்தக் காவல் நிலையம் மலாயா ஒன்றியக் காவல்துறையின் (Malayan Union Police) தலைமையகமாக மாறியது.
மலாயா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு, அது கூட்டமைப்பு காவல் படையின் (Federation Police Force) தலைமையகமாக மாறியது. 25 மார்ச் 1975 மார்ச் 25-ஆம் தேதி, அப்போதைய காவல்துறைத் தலைவர் துன் முகமது அனிப் ஒமார், பிளாப் சாலை காவல் நிலையத்தை புக்கிட் அமான் மலேசிய காவல்துறை தலைமையகம் (Ibu Pejabat Polis Diraja Malaysia, Bukit Aman) என்று பெயர் மாற்றினார்.[6]