புடா மலை தேசியப் பூங்கா Gunung Buda National Park Taman Negara Gunung Buda | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | லிம்பாங் பிரிவு ![]() ![]() |
அருகாமை நகரம் | உலு மெலாடாம் |
ஆள்கூறுகள் | 4°14′N 114°57′E / 4.233°N 114.950°E |
பரப்பளவு | 66.2 km2 (25.6 sq mi) |
நிறுவப்பட்டது | 2001 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
புடா மலை தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Gunung Buda; ஆங்கிலம்: Gunung Buda National Park) என்பது மலேசியா, சரவாக், லிம்பாங் பிரிவில் உள்ள தேசியப் பூங்கா ஆகும். இது முலு மலை தேசியப் பூங்காவின் வடக்கே அமைந்துள்ளது.[1][2]
புடா மலை தேசியப் பூங்கா 2001-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் சுற்றுலா செயல்பாடுகளுக்காக பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது..[3]
புடா மலை தேசியப் பூங்காவையும் முலு மலை தேசியப் பூங்காவையும் இணைப்பதற்கு சாலைகள் போடப்பபட்டு உள்ளன. குனோங் புடா என்றால் லுன் பாவாங் மொழியில் வெள்ளை மலை என்று பொருள். பெனான் மொழியில் சுண்ணாம்பு மலை என்று பொருள்.[4]
1974-ஆம் ஆண்டில், முலு மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தேசிய பூங்காவாக சரவாக் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், முலு மலை தேசியப் பூங்காவில் ஓர் அறிவியல் சுற்றாய்வுப் பயணத்திற்கு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்தது. இதுவே ஐக்கிய இராச்சியத்திலிருந்து அனுப்பப்பட்ட மிகப்பெரிய சுற்றாய்வுக் குழுவாகும்.[5][6]
இந்தச் சுற்றாய்வுப் பயணம் 15 மாதங்கள் வரை நீடித்தது. அந்த ஆய்வுக் குழுவின் ஒரு சிறிய துணைக்குழு 50 கிமீ (31 மைல்) வரையில் குகைகளை ஆராய்ந்து ஆய்வுகள் செய்தது. அந்த ஆய்வுகளில் கிளியர்வாட்டர் குகை , கிரீன் குகை, ஓண்டர் குகை மற்றும் பிரிடிக்சன் குகை ஆகியவை அடங்கும்.[7]
1988-ஆம் ஆண்டு பிரித்தானிய ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட சுற்றாய்வுகளின் போது, கிளியர்வாட்டர் குகை (Clearwater Cave) மற்றும் காற்று குகை (Cave of the Winds) ஆகிய இரு குகைகளுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாதை நிறுவப்பட்டது. இந்த இணைப்புப் பாதை, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீளமான குகைப் பாதை என்று கூறப்படுகிறது. இந்தச் சுற்றாய்வுகளின் போதுதான் பிளாக்ராக் குகையும் (Blackrock Cave) கண்டுபிடிக்கப்பட்டது.[8]
1991-ஆம் ஆண்டில், பிளாக்ராக் குகைக்கும் கிளியர்வாட்டர் குகைக்கும் இடையே 102 கிமீ (63 மைல்) நீளமுள்ள ஓர் இணைப்புப் பாதை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, கிளியர்வாட்டர் குகைப் பாதையை, உலகின் 7-வது நீளமான குகைப் பாதையாக மாற்றியது.[6] 1993 - 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், பிரித்தானிய ஆய்வுக்குழுக்கள் முலு மலை பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியை ஆய்வு செய்தனர்.[6]
1995 - 2000-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அமெரிக்காவின் தேசிய குகை ஆய்வியல் கழகம் (National Speleological Society) புடா மலையை (Mount Buda) ஆய்வு செய்தது.[9] இந்த ஆய்வுப் பயணங்களின் போதுதான், டெலிவரன்ஸ் குகை (Deliverance Cave) கண்டுபிடிக்கப்பட்டது.[6]
புடா மலை தேசியப் பூங்காவில் 20,000 வகையான முதுகெலும்பிலிகள், 81 வகையான பாலூட்டிகள், 270 வகையான பறவைகள், 55 வகையான ஊர்வன, 76 வகையான நிலநீர் வாழிகள் மற்றும் 48 வகையான மீன்கள்; 25 வகையான பாம்புகள்; இந்தப் பூங்கா பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.[7] அத்துடன் எட்டு வகையான மரத்தலையன் பறவைகள் (Hornbills); 28 வகையான வெளவால்கள் காணப்பட்டுள்ளன. மூன்று மில்லியன் வெளவால்கள் (Cherephon plicatus) இங்கு வாழ்கின்றன.[7]
புடா மலை தேசியப் பூங்காவில் உள்ள 17 வகையான தாவர மண்டலங்களில் இலட்சக் கணக்கான தாவர இனங்கள் உள்ளன. இதில் 3,500 வகையான கலன்றாவரம் தாவரங்கள், மற்றும் 1,500 வகையான பூக்கும் தாவரங்கள்; 20 வகையான பனை இனங்களில், 109 வகையான துணை இனங்கள் உள்ளன.[10]