![]() புரோத்தம் அலோவின் அலுவலகக் கட்டடம் | |
வகை | நாளிதழ் |
---|---|
உரிமையாளர்(கள்) | திரான்ஸ்காம் குழுமம் |
வெளியீட்டாளர் | மதியூர் ரகுமான் |
தலைமை ஆசிரியர் | மதியூர் ரகுமான் |
நிறுவியது | 4 நவம்பர் 1998 |
அரசியல் சார்பு | தாராளமயம் |
மொழி | வங்காள மொழி மற்றும் ஆங்கிலம் |
விற்பனை | 525,001 (ஜனவரி 2013)[1] |
இணையத்தளம் | www |
புரோதோம் அலோ ( Prothom Alo) என்பது வங்காளதேசத்தில் தினசரி வெளியிடப்படும் நாளிதழ் ஆகும். இது டாக்காவிலிருந்து வங்காள மொழியில் வெளியிடப்படுகிறது. மேலும், இது வங்காளதேசத்தில் அதிகம் விற்பனையாகும் செய்தித்தாளும் ஆகும்.[2] இது இணையத்திலும் வெளியிடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டின் காந்தர் எம்ஆர்பி என்ற தேசிய ஊடக நிறுவனத்தால் நடத்தப்பட்டக் கருத்துக் கணிப்பின்படி புரோதோம் அலோ இணையத்தில் தினசரி 6.6 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ளது. வலை போக்குவரத்து தரவை வழங்கும் அலெக்சா இணையம் என்ற அமெரிக்க பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி புரோதோம் அலோ இணைய உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட வங்காள வலைத்தளம் ஆகும்.[3]
புரோதோம் அலோ, 4 நவம்பர் 1998 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் 42,000 பிரதிகள் விற்பனை என்ற அளவிலிருந்து அரை மில்லியன் பிரதிகள் விற்பனை அளவை எட்டியது.[1] அமிலத் தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அமிலம் விற்பனைக்கு எதிரான கடுமையான சட்டங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நாளிதழ் தன்னை வேறுபடுத்திக் கொண்டது.[1][4] டாக்கா, சிட்டகொங் மற்றும் போக்ராவில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகங்களிலிருந்து, ஒவ்வொரு நாளும் சுமார் 5,00,000 பிரதிகள் (மார்ச் 2014 வரை) விநியோகிக்கப்படுகின்றன. [2] தேசிய ஊடக ஆய்வு நிறுவனத்தின் 2018 தரவுகளின்படி, தினமும் 6.6 மில்லியன் மக்கள் இதன் அச்சு பதிப்பைப் படிக்கின்றனர். இந்த செய்தித்தாளின் இணையம மற்றும் அச்சு பதிப்பையும் சேர்த்து 7.6 மில்லியன் வாசகர்களைக் கொண்டுள்ளது.[5]
1998 இல் மதியூர் ரகுமான் புரோதோம் அலோவின் தலைமை ஆசிரியரானார்.[6] அவர் 2005 இல் பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு கலைகள் பிரிவில் ராமன் மக்சேசே விருதைப் பெற்றவர்.
வங்காளதேசத்தில் கணிதத்தை பிரபலப்படுத்த 2003 இல் வங்காளதேசத்தில் முதல் முறையாக கணித ஒலிம்பியாட் போட்டியை ஏற்பாடு செய்தது. இது வங்காளதேச கணித ஒலிம்பியாட்டின் முக்கிய ஆதரவாளாராகவும் மற்றும் முக்கிய அமைப்பாளர்களில் ஒன்றாகவும் இருந்தது. [7]
புரோதோம் அலோ, அமில வன்முறை, போதைப்பொருள், எயிட்சு மற்றும் மத பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பத்திரிக்கையின் ஆசிரியர் மதியூர் ரகுமானின் பங்களிப்பிற்காக, பிலிப்பைன்சை தளமாகக் கொண்ட ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை, 'சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிகாட்டும் சக்தி' என்று வர்ணித்துள்ளது, மேலும் 2005 இல் அவருக்கு மகசேசே விருது வழங்கி கௌரவித்தது. இந்த விருது 'ஆசியாவின் நோபல் பரிசு' எனக் கருதப்படுகிறது.[8] அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள், போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் துன்புறுத்தப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் புரோதோம் அலோ அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவி மூன்றுக்கும் சமமான விகிதத்தில் பரிசுத் தொகையை ரகுமான் வழகுகிறார்.
புரோதோம் அலோ' அதன் தாராளமய அணுகுமுறைக்காக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. அரிபுர் ரகுமானின் மதம் தொடர்பான கருத்தோவியம் வெளியிடப்பட்டவுடன் செய்தித்தாளுக்கு எதிராக எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதற்கு அரசு தடை விதித்தது.[9] பத்திரிக்கையின் ஆசிரியர் கருத்தோவியம் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். கருத்தொவியக் கலைஞர் ஆல்பின் ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார், அவர் 18 செப்டம்பர் 2007 கைது செய்யப்பட்டு[10] 20 மார்ச் 2008 அன்று விடுவிக்கப்பட்டார்.[11][12][13]