புளோரோ ஆல்ககால்கள் (Fluoroalcohols) என்பவை ஓர் ஆல்ககால் வேதி வினைக்குழுவும் குறைந்த பட்சம் ஒரு குளோரின் - புளோரின் பிணைப்பும் கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். கரிம புளோரின் சேர்மங்களாக வகைப்படுத்தப்படும் இவை தனித்துவமான கரைப்பான் பண்புகளைப் பெற்றிருக்கும்.[1]
பெரும்பாலான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பெர்புளோரோ ஆல்ககால்கள் நிலைப்புத்தன்மை அற்றவையாகும். உதாரணமாக முப்புளோரோமெத்தனால் ஐதரசன் புளோரைடை இழந்து கார்பனைல் புளோரைடை உருவாக்குகிறது.[2] இந்த வினை மீளக்கூடிய ஒரு மீள்வினையாகும்.[3]
நோனாபுளோரோ-டெர்ட்-பியூட்டைல் ஆல்ககால் ((CF3)3COH), பெண்டாபுளோரோபீனால் (C6F5OH) உள்ளிட்ட ஆல்ககால்கள் நிலைப்புத்தன்மை கொண்ட பெர்புளோரினேற்ற ஆல்ககால்களாகும்.
பல பகுதியளவு புளோரினேற்ற ஆல்ககால்கள் அறியப்படுகின்றன. இவை பயன்படுத்தக்கூடிய நிலைப்புத்தன்மையையும் கொண்டுள்ளன. முப்புளோரோயெத்தனால் மற்றும் அறுபுளோரோ ஐசோபுரோப்பனால் ஆகியவை ஆராய்ச்சியில் கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. [4]புளோரோடெலோமர் ஆல்ககால்கள் பெர்புளோரோகார்பாக்சிலிக் அமிலங்கள் தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மங்களாகும். அணுக்கரு காந்த உடனிசைவு நிறமாலையியலில் பிர்க்கலின் ஆல்ககால் ஒரு நாற்தொகுதி மைய நகர்த்தி வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.