புவியரசு (பி. 1930) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 2009ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
புவியரசு உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்.[1] இவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும். இவரது பெற்றோர் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கோயம்புத்தூரில் வசித்தனர். இவர் இடைநிலை பட்டத்தைக் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன. இவர் அரசியல்ரீதியாக ஒரு மார்க்சிசவாதி. திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர். இவர் தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறை சென்றவர். சிறிதுகாலம் மட்டும் இயங்கிய வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், உருசிய, அங்கேரி மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதை புரட்சிக்காரன் 2007ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இவரது கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. தற்சமயம் இவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.[2][3][4]
(முழுமையானதல்ல)
இவர் எழுதிய "முக்கூடல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.