புஷ்பா பிரியா | |
---|---|
![]() நாரி சக்தி விருது பெறும் புஷ்பா பிரியா | |
பிறப்பு | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | புஷ்பா நாகராஜ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
பணி | தன்னார்வலர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் |
அறியப்படுவது | பார்வையற்றோருக்காக தேர்வு எழுதுபவர் |
புஷ்பா பிரியா ( Pushpa Preeya ) புஷ்பா என்.எம் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், தகவல் தொழில்நுட்ப வல்லுநரும், சமூக ஆர்வலரும் மற்றும் தன்னார்வலரும் ஆவார். இவர், பார்வையற்றோருக்கான தேர்வு எழுதும் தன்னார்வ சேவைக்காக நன்கு அறியப்பட்டவராகக் கருதப்படுகிறார்.[1]
இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். தனது இளம் வயதிலேயே நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வருகிறார்.[2] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலின் போது, இவரும் இவரது சகோதரரும் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்க அனைத்து தடைகளையும் முரண்பாடுகளையும் முறியடிக்க வேண்டியிருந்தது என்பதை வெளிப்படுத்தினார்.
"பார்வை குறைபாடுள்ளவர்களும் மனிதர்கள்தான். சில சமயங்களில் மக்கள் அதை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் குறைபாடு உள்ளது. இதயத்தில் இல்லை."
—புஷ்பா பிரியா.[3]
புஷ்பா 2007 இல், தனது தோழிகளில் ஒருவரின் தூண்டுதலின் விளைவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வுகளை எழுதும், தேர்வு எழுதுபவராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.[4] 2007 ஆம் ஆண்டில், பார்வையற்றோருக்கான தேர்வுகளை எழுதுவதற்கான சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைக்கு இவர் பதிலளித்தார்.[5] இவர் கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு முடித்தவர். மேலும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் 2007 ஆம் ஆண்டு முதல் பார்வையற்றோருக்கான 1000க்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது.[6] இவர் இரத்த தானம் செய்பவர்களுக்காக முகநூல் வலைப்பதிவுப் பக்கத்தையும் பராமரிக்கிறார்.[7] இவர் 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் இருந்து மார்ச் 8, 2019 அன்று அனைத்துலக பெண்கள் நாளில் பெற்றார்.[8][9][10]