பூமாதா படையணி (Bhumata Brigade) என்பது புனேவை மையமாகக் கொண்ட சமூக ஆர்வல அமைப்பாகும், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் போராட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் இந்த அமைப்பின் நிறுவனராவார்.[1]
மகாராட்டிராவின் அகமத்நகரில் உள்ள ஷானி ஷிங்னாபூர் கோயில் மற்றும் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் உள்ளே சென்று வழிபட தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான சட்டரீதியான, அகிம்சைவழி போராட்டங்களுக்காக பூமாதா படையணி மிகவும் பிரபலமானது.[2][3] அதன் நிறுவனரின் கருத்துப்படி "பெண்களை தூய்மையற்றவர்களாகக் கருதும் மக்கள், பெண்களால்தான் அவை தோன்றியுள்ளன என்பதை உணர வேண்டும். கோயில்களுக்குள் உள்ள சன்னதிகளில் ஊற்றப்படும் பால் கூட பசுக்களிடமிருந்தும், எருமைகளிடமிருந்தும் வருகிறது, அவைகளும் பெண்களே. எனவே அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் அந்தந்த மதத்தைச் சேர்ந்த மத இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்." என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கும் இயங்கிவருகிறது.
2016 ஆம் ஆண்டில், இந்த பூமாதா படைப்பிரிவில் கிட்டத்தட்ட ஆண்கள் உட்பட 4,000 உறுப்பினர்கள் இருந்தனர். பூமாதா ரன்ரகானி படையணி என்ற அமைப்பின் ஒரு கிளை, சனி கோவிலுக்கு எதிர்ப்புகள் உட்பட பெண்களின் ஈவ் டீசிங், வரதட்சணை பிரச்சினைகள் மற்றும் உடல் அல்லது பாலியல் வன்கொடுமை ஆகிய காரணங்களில் கவனம் செலுத்திவருகிறது.[4] இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவின் பலபகுதிகளிலுருந்தும் இவ்வமைப்பின் உதவியை நாடி வருகிறார்கள்.
வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளின் அதிக விலை; விவசாயிகள் சுரண்டல் மற்றும் விவசாயிகள் தற்கொலை; மும்பையில் குழந்தை பலாத்காரம்; அன்னா ஹசாரேவுடன் லோக்பால் மசோதா போராட்டங்கள் போன்ற பிற போராட்டங்களிலும் இவ்வமைப்பு ஈடுபட்டுள்ளது
பூமாதா படை இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றவில்லை. என்றாலும் இதன் நிறுவனரான தேசாய் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.[5]
2017 ஆம் ஆண்டில் பூமதா படைப்பிரிவைச் சேர்ந்த 100 பெண்களுடன் கேரளாவுக்கு வர விரும்புவதாகவும், பெண்களை அனுமதிக்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் அறங்காவலர்களிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.[6]