பூம் லா மலைக்கணவாய் (Bum La Pass) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் மாவட்டத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள கோனா மாவட்டத்திற்கு இடையே உள்ளது. எல்லைப் பிணக்குகளை பேசுத் தீர்ப்பதற்கு, பூம் லா கணவாய் பகுதியில் இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் சந்திக்கும் இடம் உள்ளது.[1]மேலும் இமயமலையின் கிழக்கில் அமைந்த இக்கணவாய் பகுதியில் இந்திய-சீன வணிகர்களின் வணிக மையமாக உள்ளது.[2]
பூம் லா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தவாங் நகரத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும்; சீனாவின் கோனா மாவட்டத்தின் சோனா சோங் நகரத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கணவாய் கடல் மட்டதிலிருந்து 15,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
1962 இந்திய-சீனப் போருக்குப் பின்னர் 44 ஆண்டுகள் கழித்து 2006-ஆம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாட்டு வணிகர்கள் வணிகம் செய்ய மற்றும் அஞ்சல்கள் அனுப்ப பூம் லா கணவாய் பகுதியில் பாதை திறக்கப்பட்டது.[3][2]
பூம் லா கணவாய் பகுதியில் ஆண்டு முழுவதும் பனி படர்ந்திருக்கும். உலகின் துடிப்பு மிக்க மலைக்கண்வாய்களில் பூம் லா கணவாயும் ஒன்றாகும்.[4]
பூம் லா கணவாய் பகுதியில் 1962-ஆம் ஆண்டில் கடுமையான இந்திய சீனப் போர் நடைபெற்றது.[5]
பூம் லா கணவாய் பகுதியில் 9 டிசம்பர் 2022 அன்று இந்திய எல்லைப்பகுதியில் புகுந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட கைகலப்பு சண்டையில் இந்தியத் தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.[6]