பூர்ணிமா தேவி (Purnima Devi) (1884-1972) சுதக்சிணா தேவி (Sudakshina Devi) என்றும் அழைக்கப்படும் இவர் புகழ்பெற்ற பிரம்மமான ஹேமேந்திரநாத் தாகூரின் இளைய மகளாவார். மேலும், தாகூர் குடும்பத்தின் ஒரு பகுதியான இரவீந்திரநாத் தாகூரின் மருமகளுமாவார்.[1]
ஷாஜகான்பூரின் ஜமீந்தாரும் மற்றும் பிரிட்டிசு இந்திய ஆட்சிப் பணியிலிருந்த சர் ஜுவாலா பிரசாத் என்பவரை மணந்தார். பின்னர் பூர்ணிமாவுக்கு கைசர்-இ-ஹிந்த் என்ற பதக்கம் பிரிட்டிசு இராச்சியத்தில் வழங்கப்பட்டது [2]
பூர்ணிமா 1884 மே 13 ஆம் தேதி, கொல்கத்தாவின் ஜோராசங்காவில் தாகூர் மாளிகையில் ஹேமேந்திரநாத் தாகூருக்கு மகளாகப் பிறந்தார்.
பூர்ணிமா தேவி கொல்கத்தாவின் பூங்கா வீதியில் உள்ள ஐரோப்பிய பெண்கள் பள்ளியான லோரெட்டோ பள்ளியில் படித்தார். ஆங்கிலத்துடன் கூடுதலாக வங்கம், சமசுகிருதம், உருது, இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றார். பியானோ மற்றும் வயலின் இசையையும் அறிந்திருந்தார். மேலும், இவர் கேம்பிரிட்சு திரினிட்டி கல்லூரி இசை தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இவர் ஐக்கிய மாகாணங்களில் திருமணம் செய்த முதல் வங்காள பெண்மணி ஆவார். இந்திய ஆட்சிப்பணியில் இருந்த இவரது கணவர் பண்டிட் ஜுவாலா பிரசாதா, கார்தோய் மாவட்டத்தின் துணை ஆணையராக இருந்தார்.
இவரது மகன், குன்வர் ஜோதி பிரசாதா, கபுர்தலா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி பமீலா தேவி என்பவரை மணந்தார்.[சான்று தேவை] இவரது மூத்த பேரன் ஜிதேந்திர பிரசாதா காங்கிரசு கட்சியின் சார்பில் 5, 7, 8, 13 வது மக்களவை உறுப்பினராக இருந்தார் . இவரது இளைய பேரன் ஜெயேந்திர பிரசாதா ஒரு விவசாயியாக இருந்தார். இவரது குடும்பம் ஷாஜகான்பூரில் உள்ள பிரதான மூதாதையர் இல்லலமான பிரசாதா பவனில் தொடர்ந்து வசித்து வருகிறது. இவரது மூத்த பேரன், ஜெயேந்திர பிரசாதாவின் மகன், ஜெயேசு பிரசாதா, பிலிபிட்-ஷாஜகான்பூர் தொகுதியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார். இவரது இளைய பேரன், ஜிதேந்திர பிரசாதாவின் மகன், ஜிதின் பிரசாதா இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக இருந்தார். மேலும் 15 வது மக்களவையில் உத்தரபிரதேச மாநிலமான லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் தௌரக்ரா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[3][4]
இவர் குதிரைச் சவாரி கற்றவராகவும் மற்றும் தனது கணவருடன் சேர்ந்து வேட்டையிலும் பங்கேற்றார். இவர் இந்தியாவில் பெண் கல்வி மற்றும் மேம்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது கணவரின் நினைவாக உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் 'தி பண்டிட் ஜுவாலா பிரசாத் கன்யா பாடசாலை' என்ற நிறுவனத்தை நிறுவினார். ஐக்கிய மாகாணங்களின் முசாபர்நகரில் ஹெவெட் மாதிரி பெண்கள் பள்ளியை நிறுவுவதில் இவர் உதவினார், மேலும் பர்தா பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஷாஜகான்பூர் மற்றும் முசாபர்நகரில் பர்தா சங்கங்களை நிறுவினார்.