பெக்மன் வெப்பநிலைமானி (Beckmann thermometer) என்பது மிகக் குறைந்த வெப்பநிலை வேறுபாடுகளை அளவிட பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும். ஆனால் இச்சாதனம் கரைசல் அல்லது கரைப்பானின் உறைநிலை வெப்பநிலையின் தனிமதிப்பை நிர்ணயிக்கப் பயன்படாது. 1853 முதல் 1923 ஆம் ஆண்டு காலத்தைச் சார்ந்த செருமன் வேதியியல் அறிஞர் எர்னச்டு ஓட்டோ பெக்மன் , தொகைசார் பண்புகளை அளவீடு செய்ய 1905[1] ஆம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தார். இன்று மின்னணு வெப்பநிலைமானிகள் இக்கருவியின் பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டன.
பெக்மன் வெப்பநிலைமானி பொதுவாக 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதில் 5 பாகை செல்சியசு வரை வெப்பநிலை நிலை அளவுகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாகையும் நூறு சம அளவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பெருக்கியின் உதவியோடு இக்கருவியில் 0.001 பாகை செல்சியசு அளவிளான வெப்பநிலை வேறுபாடுகளைக்கூட அளவிடமுடியும்.
பெக்மன் வெப்பநிலைமானியின் அடிப்பகுதியில் பெரிய வெப்பநிலைமானி குடுவை உள்ளது. அதன் மேல்பகுதியில் ஒரு பாதரச சேகரிப்பான் நுண்ணிய குழாயின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ( படத்தில் R ). நுண்ணிய குழாய் சிறிய துளையைக் கொண்டிருப்பதால் சிறிய வெப்பநிலை வேறுபாட்டைக்கூட இவ்வெப்ப நிலைமானியின் உதவியால் கண்டறியமுடியும். அதிக வெப்பநிலையில் இக்கருவியைப் பயன்படுத்தினால் குடுவையில் உள்ள பாதரசம் மேலேயுள்ள சேகரிப்பானுக்கு சென்றுவிடும். குறைவான வெப்பநிலையில் பயன்படுத்தும்போது சேகரிப்பானில் உள்ள பாதரசம் குடுவைக்கு வந்துவிடும். இதனால் வெப்பநிலை வேறுபாடு உயர்ந்த அளவாக இருந்தாலும் குறைந்த அளவாக இருந்தாலும் இக்கருவியைப் பயன்படுத்தி அளவிடமுடியும்.
இக்கருவியின் மூலம் நிலையான அளவுக்கு வெப்பநிலை வேறுபாடுகளை அளவுகோளில் குறியிட்டு அளக்க முடியும். வெப்ப நிலைமானியை அமைக்கும்போது தேவையான அளவுக்கு பாதரசம் குடுவையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேவையான வெப்பநிலை அளவுகள் குடுவையின் தண்டில் குறிக்கப்படுகின்றன. முதலில் கருவியை தலைகீழாக கவிழ்த்து இலேசாக தட்டுவதன் மூலம் சேகரிப்பானில் உள்ள பாதரசம் கருவியின் கீழேயுள்ள குடுவைக்கு வருமாறு செய்கிறார்கள். பின்னர் குடுவையிலுள்ள பாதரசம் சேகரிப்பானில் உள்ள பாதரசத்துடன் இனையும் வரை குடுவை சூடாக்கப்படுகிறது. பின்னர் அளவிடப்பட வேண்டிய வெப்பநிலை அளவுக்கு அதிகமாக ஒன்று அல்லது இரண்டு பாகை வெப்பநிலை அளவுக்கு உயர்வாக சென்றதும் கருவி குளிரூட்டப்படுகிறது.
கருவியின் மேல்பகுதியை விரலால் இலேசாகத் தட்டினால் வெப்பநிலை உயர்வால் மேலேறிய பாதரசம் கீழேயிறங்கி குடுவைக்கு வருகிறது. இப்பொழுது குடுவை தேவையான வெப்பநிலை வேறுபாடுகளை அளந்திட பயன்படுத்தத் தயாரான நிலையில் உள்ளதாகக் கருதலாம்.