பெங்களூர் நீல திராட்சை Bangalore Blue | |
---|---|
திராட்சை (விட்டிசு) | |
Color of berry skin | Noir |
இனம் | விட்டிசு லேப்ரூசுகா |
வேறு பெயர் | சபெல்லா (திராட்சை) |
குறிப்பிடத்தக்க பகுதிகள் | பெங்களூரு நகர மாவட்டம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், கோலார் மாவட்டம் |
பெங்களூர் நீல திராட்சை, எனப்படுவது பெங்களூர் நீலன் (Bangalore Blue) எனப்படும், கொத்தாக காய்க்கக்கூடிய புளிப்புச் சுவையுடைய (ஒரு வகையாகும் விட்டிசு லேப்ருசுகா) திராட்சை ஆகும். இது இந்தியாவின் பெங்களூருவைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது. கருநாடக மாநிலத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் மூன்று திராட்சை வகைகளுள் இதுவும் ஒன்றாகும் (மற்ற இரண்டு 1) தாம்சன் விதை இல்லாத திராட்சை 2) அனாப்-இ-ஷாஹி தில்குஷ்).[1] இது 2013ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து புவியியல் சார்ந்த குறியீடு பெற்றது.[2]
பெங்களூரு நகர மாவட்டம், சிக்கபள்ளாபூர் மாவட்டம் மற்றும் கோலார் மாவட்டங்களில் கடந்த 150 ஆண்டுகளாக இந்த வகை திராட்சை வளர்க்கப்படுகிறது.[2][3] இது சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பிரத்தியேகமாகப் பயிரிடப்படுகிறது. முக்கியமாக இது நந்தி பள்ளத்தாக்கில் பயிரிடப்படுகிறது.[4] ஆண்டுதோறும் சுமார் 450,000 டன் திராட்சைப் பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.[2]
பெங்களூர் நீலன் அமெரிக்க கான்கார்ட் வகையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இது பைலோக்செரா வண்டுகளுக்கு எதிராக வலுவான இயற்கை எதிர்ப்புச் சக்தியினைக் கொண்டுள்ளது. புளிப்பு கலந்த இனிப்புச் சுவையுடன் மென்மையான தோலினைக் இத் திராட்சை கொண்டுள்ளது. நவீன ஆராய்ச்சியின் படி இந்த திராட்சை புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் வயதாவதைத் தடுக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.[5]
பெங்களூர் நீலத்தை வளர்க்கச் செம்மண் கலந்த களிமண்ணுடன் பகல் வெப்பநிலை 35° C முதல் 37°C வரையும் இரவு வெப்பநிலை 12°C முதல் 15°C வரையும் இருக்கவேண்டும். இந்த காலநிலை பெங்களூர் பிராந்தியத்தைச் சுற்றிக் காணப்படுவதால், பல்வேறு வகையான திராட்சை இங்குப் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன.[2]
இத் திராட்சை பொதுவாக உணவாகப் உண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பழ ஊறல் (ஜாம்) மற்றும் பழப் பாகு (ஜெல்லி) தயாரிக்கப் பயன்படுகிறது. பழச்சாறு, பழச்சாறு கலவை, ஒயின் தயாரிக்கவும் பயன்படுகிறது.[2][3]
பெங்களூர் தோட்டக்கலைத் துறை, பெங்களூரு நீலத்தை 1999ஆம் ஆண்டின் புவியியல் குறியீட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முன் வந்தது. சென்னையில் உள்ள காப்புரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள், அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது.[3][6] மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2013இல் புவியியல் சார்ந்த குறியீடு[2] சிக்கபள்ளாப்பூரை தலைமையிடமாகக் கொண்ட பெங்களூர் நீல திராட்சை விவசாயிகள் சங்கத்திற்கு பல்வேறு வகையான திராட்சைகளை வளர்ப்பதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.[6]