பெந்தோங் மாவட்டம் | |
---|---|
Daerah Bentong | |
![]() பெந்தோங் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 3°25′N 101°55′E / 3.417°N 101.917°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தொகுதி | பெந்தோங் |
உள்ளூராட்சி | பெந்தோங் நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுல்கிப்லி அசீம்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,831.12 km2 (707.00 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,68,960 |
• அடர்த்தி | 92/km2 (240/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 28xxx, 69xxx (கெந்திங் மலை) |
தொலைபேசி | +6-09, +6-03-6 (கெந்திங் மலை) |
வாகனப் பதிவெண்கள் | C |
பெந்தோங் மாவட்டம் (ஆங்கிலம்: Bentong District; மலாய்: Daerah Bentong; சீனம்: 文冬县; ஜாவி: ﺑﻨﺘﻮڠ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது.
இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது.
தொடக்கத்தில் ரவுப் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் மாவட்டம் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1919-இல் மாவட்டத்தின் பெரிய அளவு காரணமாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது. பெந்தோங் மாவட்டம் 183,112.35 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது கோலாலம்பூரின் வடகிழக்கில், முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைகளுக்கு குறுக்கே அமைந்துள்ளது. பெந்தோங் நகரத்திற்குள் செல்லும் அசல் பிரதான சாலை, இரட்டைச் சாலையாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், இப்போது ரவுப் மற்றும் கோலா லிப்பிஸ் நகரங்களுக்குச் செல்லும் சாலையின் ஒரு பகுதி மேம்படுத்தப் பட்டுள்ளது.
பெந்தோங் மாவட்டம், பெந்தோங் நகராண்மைக் கழகத்தால் நிர்வகிக்கப் படுகிறது மற்றும் பகாங்கில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெந்தோங் நகரமும் ஒன்றாகும். இந்த நகரம் ரவுப் நகரத்தின் அளவைப் போன்றது.
பெந்தோங்கில் மரத் தொழிற்சாலைகள், உணவுத் தொழில்கள் மற்றும் மின்னியல் பொருட்களின் உற்பத்தித் தொழிற்சாலைகள் உட்பட பல இலகுரக மற்றும் நடுத்தரத் தொழில்கள் உள்ளன. இந்த மாவட்டம் நாட்டிலேயே மிகப் பெரிய செப்பு கம்பித் தொழிற்சாலை ஒன்றையும் கொண்டு உள்ளது.
பெந்தோங் மாவட்டம் 3 முக்கிம்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை:[3]
நவீனக் குடியிருப்புப் பகுதிகளைத் தவிர, 55 பாரம்பரிய கிராமங்கள், 8 பெல்டா கிராமங்கள், 15 புதிய கிராமங்கள் மற்றும் 14 ஓராங் அஸ்லி பூர்வீகக் கிராமங்கள் உள்ளன.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1991 | 83,965 | — |
2000 | 96,689 | +15.2% |
2010 | 1,14,397 | +18.3% |
2020 | 1,16,799 | +2.1% |
ஆதாரம்: [4] |
பின்வரும் புள்ளி விவரங்கள், 2019-ஆம் ஆண்டு மலேசியப் புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.[5]
பெந்தோங் மாவட்டத்தின் இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 71,000 | 57.2% |
சீனர்கள் | 44,000 | 33.4% |
இந்தியர்கள் | 19,000 | 9.0% |
இதர மக்கள் | 1,000 | 0.3% |
மொத்தம் | 135,000 | 100% |
பொதுவாக, பெந்தோங் மாவட்டத்தில் 837.26 கி.மீ. அளவிற்குச் சாலைகள் உள்ளன. இதில் 311.22 கி.மீ. கூட்டரசு சாலைகள்; 224.51 கி.மீ. மாநிலச் சாலைகள்; 124.05 கி.மீ. நகர்ப்புறச் சாலைகள்; மற்றும் 177.48 கி.மீ. பெல்டா சாலைகள் உள்ளன.
மூன்று முக்கிய வழித்தடங்கள் - கூட்டரசு சாலை 8 (மலேசியா), கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை ; மற்றும் கூட்டரசு சாலை 68 (மலேசியா) பெந்தோங்கில் சங்கமிக்கின்றன.
பழைய கோம்பாக் - பெந்தோங் சாலை பாதையின் கிழக்கு முனையில் பெந்தோங் உள்ளது. நெடுஞ்சாலை
, பெந்தோங்கில் தொடங்கி, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள கோத்தா பாரு வரை செல்கிறது.
கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலை என்பது; கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை -இன் ஒரு பகுதி ஆகும். அதுவே கோலாலம்பூர் மற்றும் மாநிலத் தலைநகர் குவாந்தானுக்கான முக்கிய இணைப்பாகவும் திகழ்கின்றது.
டேவான் ராக்யாட் மக்களவையில் பெந்தோங் மாவட்டப் பிரதிநிதி:
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P89 | பெந்தோங் | ஓங் தெக் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
பகாங் சட்டமன்றத்தில் பெந்தோங் மாவட்டப் பிரதிநிதிகள்:
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P89 | N33 | பிலுட் | லீ சின் சென் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P89 | N34 | கெதாரி | யாங் சய்துரா ஒசுமான் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P89 | N35 | சபாய் | காமாட்சி துரை ராஜு | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P89 | N36 | பெலங்காய் | அட்னான் யாக்கோப் | பெரிக்காத்தான் நேசனல் (அம்னோ) |
பெந்தோங் மாவட்டத்தில் தேசியப் பள்ளிகள்; சீனப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் என 49 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12,272 மாணவர்கள் பயில்கிறார்கள். மற்றும் 869 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில், 14 தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் மொத்தம் 9,901 மாணவர்கள் மற்றும் 755 ஆசிரியர்கள் உள்ளனர். நான்கு அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழகமும் உள்ளது.
பகாங், பெந்தோங் மாவட்டத்தில் 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 519 மாணவர்கள் பயில்கிறார்கள். 71 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
CBD0038 | பெந்தோங் | SJK(T) Bentong | பெந்தோங் தமிழ்ப்பள்ளி[7] | 28700 | பெந்தோங் | 145 | 15 |
CBD0039 | கம்போங் ஸ்ரீ தெலிமோங் Kampung Sri Telemong |
SJK(T) Sri Telemong | ஸ்ரீ தெலிமோங் தமிழ்ப்பள்ளி (காராக்)[8] | 28620 | காராக் | 27 | 10 |
CBD0040 | தெலிமோங் Telemong |
SJK(T) Ladang Renjok | ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (காராக்)[9] | 28620 | காராக் | 45 | 11 |
CBD0041 | காராக் | SJK(T) Karak | காராக் தமிழ்ப்பள்ளி[10] | 28600 | காராக் | 264 | 25 |
CBD0042 | பெல்டா லூரா பீலூட் Felda Lurah Bilut |
SJK(T) Lurah Bilut | லூரா பீலூட் தமிழ்ப்பள்ளி[11] | 28800 | பெந்தோங் | 38 | 10 |
பெந்தோங் மாவட்ட மருத்துவமனை (Bentong District Hospital), இப்போது ஒரு சிறிய சிறப்பு மருத்துவமனையாக (Minor Specialist Hospital) மாற்றம் கண்டுள்ளது. 152 படுக்கைகள் உள்ளன.
பெந்தோங் மாவட்டத்தில் சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்புக்காக 19 கிராமப்புற மருத்துவகங்கள் உட்பட 22 சுகாதார மருத்துவகங்கள் உள்ளன. 6 அரசு பல் மருத்துவ மனைகள், 22 தனியார் மருத்துவ மனைகள் மற்றும் 3 தனியார் பல் மருத்துவமனைகள் உள்ளன.
மாவட்டத்தில் ஏழு காவல் நிலையங்கள் மற்றும் ஒன்பது காவல் மையங்கள் உள்ளன. இதில் 355 காவலர்கள், பணியாளர்கள் உள்ளனர். மேலும் 111 பணியாளர்களுடன் மூன்று தீயணைப்பு நிலையங்களும் உள்ளன.