பெனாம்பாங் Penampang Town | |
---|---|
ஆள்கூறுகள்: 5°55′00″N 116°07′00″E / 5.91667°N 116.11667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
மாவட்டம் | பெனாம்பாங் |
நகரம் | பெனாம்பாங் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,52,709 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 89500 |
தொலைபேசி | +6-088 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | SA |
பெனாம்பாங் (மலாய்: Penampang; ஆங்கிலம்: Penampang; சீனம்: 兵南邦 மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, பெனாம்பாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு மிக அருகில்; 11 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1]
இந்த நகரம் கோத்தா கினபாலுவின் புறநகர்ப் பகுதியாக மாறியுள்ளது. மற்றும் பெரும் கோத்தா கினபாலு (Greater Kota Kinabalu) பகுதியின் ஒரு பிரிவாகவும் கருதப் படுகிறது. அத்துடன் வடக்கு போர்னியோவின் வடக்கு முனையில் உள்ள கோத்தா கினபாலு மற்றும் கூடாட் நகரங்களை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் உள்ளது.[2]
இந்த நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடசான் பூர்வீகப் பழங்குடி மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் சீனர்களும்; மூருட்; மலாய் மக்களும் உள்ளார்கள்.
பெனாம்பாங் என்ற பெயர் பெனாம்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய கிராமத்தில் இருந்து வந்தது. கிராமத்தின் பெயர் ஒரு பெரிய பாறையைக் குறிக்கும் பாம்பாங் (Pampang) என்ற கடசான் மொழி (Kadazan) சொல்லில் இருந்து உருவானது. நீண்ட காலத்திற்கு முன்பு கிராமத்தின் சுற்றுப்புறங்களில் மிகப்பெரிய பாறைகள் இருந்தன. அந்தப் பாறைகளில் ஒன்றில் இருந்து பெனாம்பாங் எனும் பெயர் உருவானது.
இப்போதைய பயன்பாட்டில் உள்ள பெனாம்பாங் எனும் பெயர் பெனாம்பாங் மாவட்டத்தைக் குறிக்கிறது. பெனாம்பாங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரமாக டோங்கோங்கோன் (Donggongon) நகரம் உள்ளது. இந்த டோங்கோங்கோன் என்ற பெயர் கடசான் சொல்லான ’டுண்டோங்கோன்’ (Tundo'ongon) என்பதில் இருந்து உருவானது.[3]
இந்தச் சொல் ஒரு 'தங்குமிடம்' அல்லது 'ஓய்வெடுக்கும் பகுதி' என்று பொருள்படும். இதன் பின்னணியில் வரலாறு உள்ளது. முன்புகாலத்தில், உள்நாட்டில் இருந்து கடலோரப் பகுதிகளுக்கு வணிகம் செய்வற்காகச் சென்ற மக்கள் பெனாம்பாங் பகுதியில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது வழக்கம். அந்தச் செயல்பாட்டை இந்தச் சொல் குறிக்கின்றது. பின்னர் அந்தப் பகுதியின் பெயராக பெனாம்பாங் எனும் பெயர் புதிய தோற்றம் கண்டது.
1880-களில் வடக்கு போர்னியோவை ஆய்வு செய்த ஜான் வயிட்கெட் (John Whitehead) எனும் பிரித்தானிய ஆய்வாளர், பெனாம்பாங் மாவட்டத்தை ’பத்தாத்தான்’ (Patatan) என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல், 1910 முதல் 1914 வரை வடக்கு போர்னியோவில் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியரான ஓவன் ரட்டர் (Owen Rutter) என்பவரும் இந்தப் பகுதியைப் ’புத்தாத்தான்’ (Putatan) என்று குறிப்பிட்டு உள்ளார்.[4]
பெரும் கோத்தா கினபாலு பகுதியில் உள்ள முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையங்களில் பெனாம்பாங் நகர்ப் பகுதியும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெனாம்பாங்கின் டோங்கோங்கோன் (Donggongon) பகுதியில், பழைய பெனாம்பாங் சாலையிலும் (Penampang Lama Road); மற்றும் பெனாம்பாங் - கோத்தா கினபாலு மாற்றுவழிச் சாலையிலும் (Penampang - Kota Kinabalu Bypass Road); பல சில்லறை கடைகள் உள்ளன.
மெகா லாங் மால் (Mega Long Mall) எனும் பேரங்காடி, டோங்கோங்கன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பல்கடை அங்காடி ஆகும். ஜயண்ட் உயர் சிறப்பங்காடி (Giant Hypermarket), சினிமா திரையரங்கு, உணவகங்கள் மற்றும் பல சில்லறை கடைகளும் உள்ளன. இரண்டாவது வணிக மையமான ஐடிசிசி பேரங்காடி (ITCC Mall) பெனாம்பாங் - கோத்தா கினபாலு மாற்றுவழிச் சாலையில் உள்ளது. இது ஒரு பல்நோக்கு வணிக மையம் ஆகும்.
ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் டோங்கோங்கோன் (Donggongon) புறநகர்ப் பகுதியில் திறந்தவெளிச் சந்தை நடைபெறுகிறது. இந்தச் சந்தைக்குத் தாமு (Tamu) என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவிலும் தாமு நடைபெறுகிறது.