பெர்சி பிரேபுரூக் மோல்சுவர்த் (Percy Braybrooke Molesworth; 2 ஏப்பிரல் 1867, கொழும்பு – 25 திசம்பர் 1908) பிரித்தானிய அரசு பொறியாளர் படையின் படைமேலரும், பயில்நிலை வானியலாளரும் ஆவார்.
இவர் கில்டுபோர்டு மோல்சுவர்த்தின் கடைசி மகன் ஆவார். இவர்வின்செசுட்டர் கல்லூரியில் படித்தார். இவர் 1886 இல் அரசு பொறியாளர் படையில் சேர்ந்து 1891 வரை காமிதேன் கோட்டையில் தங்கியிருந்தார். இவர் பிறகு ஆங்காங்குக்கு இடமாற்றம் பெற்றார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் உள்ள திருகோணமலைக்குச் சென்றார். இவர் 1906 இல் தன் திருகோணமலைத் தோட்டத்தில் முழுநேர வானியல் பணி மேற்கொள்ள ஓய்வு பெற்றார். ஆனால் இவர் தன் நோக்கம் நிறைவேறும் முன்பே இரத்தக்கழிசலால் இறந்துவிட்டார். இவர் திருகோணமலை, தாக்லாந்து சாலை, சுட்டீவன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது அடக்கம் அரசு நினைவு இருப்புக்கு இரண்டு இடம் தள்ளி அமைந்துள்ளது. 2013 செப்டம்பர் 19 வரை இவரது நினைவுக்கல்லில் பொறிப்புகள் காணப்பட்டன.
இவர் 1890 இல் பிரித்தானிய வானியல் கழகத்தை உருவாக்கிய நிறுவன உறுப்பினரில் ஒருவராவார். 1898 இல் இவர் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் திறமையான நோக்கீட்டாளர். எனவே, இவர் 1903 முதல் 1905 வரை செவ்வாய், வியாழன் சார்ந்த முதல்தரப் படங்களை தன் நோக்கீட்டுவழி வரைந்தார். இவர் 1901 பிப்ரவரி 28 இல் வியாழன் தெற்குப் பட்டைகளில் நிகழும் "பெருங்குலைவைக் " கண்டறிந்தார். "தென்வெப்ப மண்டலக் குலைவு" எனப்படும் இது பின்னர் நாற்பது ஆண்டுகள் வரை நீடித்திருந்தது.
செவ்வாயில் உள்ள மோல்சுவர்த் மொத்தல் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இவர் தான் பயன்படுத்திய ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியை கொழும்புப் பல்கலைக்கழகத்துக் கொடையாக வழங்கியுள்ளார். இவரது இறப்புக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு, இது 1988 வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இதன் பொன்மப் (உலோகப்) பகுதிகள் களவாடப்பட்டு கழிவுப்பொருளாக விற்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இது பயனில் இல்லை; இதை இன்றும் கொழும்புப் பல்கலைக்கழக வானியல் காணகத்தில் காணலாம்.[1][2]