பெர்டெக்னிடேட்டு (pertechnetate) என்பது TcO4− என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒர் ஆக்சோ அயனியாகும். இது பெரும்பாலும் கதிரியக்கத் தனிமமான டெக்னீசியத்தின் தண்ணீரில் கரையக்கூடிய ஓரிடத்தான்களின் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக டெக்னீசியம்-99எம் (அரைவாழ்வுக் காலம் 6 மணி) ஓரிடத்தானை ஏந்திச் செல்லப் பயன்படுகிறது. பொதுவாக அணுக்கரு மருத்துவத்தில் அணுக்கரு அலகிடும் செயல்முறைகளில் பயன்படுகிறது.
டெக்னிடேட்டு என்பது பெர்டெக்னிடேட்டு அயனியைக் கொண்டுள்ள ஒரு சேர்மமாகும். பெர்டெக்னிடேட்டு சேர்மங்கள் என்பவை டெக்னிடிக்(VII) அமிலத்தின் உப்புகளாகும். பெர்டெக்னிடேட்டு பெர்மாங்கனேட்டை ஒத்த ஒரு வேதிப்பொருள் என்றாலும் ஆக்சிசனேற்றும் பண்பை மிகக்குறைவாகவே பெற்றுள்ளது.
டெக்னீசியம்-99எம் உருவாக்கியானது குறைந்த அரைவாழ்வுக் காலம் கொண்ட டெக்னீசியம்-99எம் ஓரிடத்தானை பெர்டெக்னிடேட்டுடன் சேர்த்தே மருத்துவப் பயனுக்காக வழங்குகிறது. அலுமினாவால் பிடிக்கப்பட்டுள்ள மாலிப்டேட்டில் இருந்து டெக்னீசியம்-99எம் உருவாக்கியினுள் இச்சேர்மம் நேரடியாக உருவாக்கப்படுகிறது.
நோயுணர் அணுக்கரு மருத்துவத்தில் பெர்டெக்னிடேட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அயோடினுக்கு மாற்றாக டெக்னிடேட்டை பயன்படுத்த முடியும் என்பதால் தைராய்டு சுரப்பிகளில் உள்ள நுண்ணறை செல்களின் வழித்தடங்களில் Na/I ஒருதிசைச் சுமப்பியாக இருந்து நுண்ணறை செல்களுக்குள் அயோடின் உள்ளீர்க்கப்படுவதைத் தடுக்கிறது. கரிமமாகல் இன்றி சிறப்பாக அயோடின் உள்ளீர்ப்பை அளவிடுகிறது என்றபோதிலும் Tc99எம் பெர்டெக்னிடேட்டு I123 ஓரிடத்தானுக்கு மாற்றாக தைராய்டு சுரப்பியை வரைவு படமாக்கலில் பயன்படுத்தப்படுகிறது[1]. பொதுவாக விரை முறுக்கத்தை அளவிட நடைமுறையில் மீயொலி பயன்படுத்தப்பட்டாலும் விரைக்குக் கதிரியக்கப் பாதிப்பை அளிக்காது என்ற காரணத்தினால் பெர்டெக்னிடேட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதயக்கீழறையின் இதயம் சார்ந்த செயல்பாடுகளை மதிப்பீடு செய்யப் பயன்படும் பலவாயில் ஏற்பு அலகிடல் சோதனைக்கான தன்கொடை இரத்தச் சிவப்பு அணுக்களுக்குப் பெயரிடல், சூல் உள்வளர்ச்சிக்கு முந்தைய உணவுப்பாதை மற்றும் குடல் இரத்தப்போக்கை ஒரிடமாக்குதல் அல்லது அறுவைச் சிகிச்சை மேலாண்மை மற்றும் பழுதடைந்த இரத்தச் சிவப்பு அணுக்களால் இடம் மாறித் தோன்றும் மண்ணீரல் திசுக்களைக் கண்டறிதல் ஆகியவற்றில் பெர்டெக்னிடேட்டு பயன்படுகிறது. இரைப்பை மென்சவ்வுகளில் உள்ள இரைப்பைச் செல்களில் சுரந்து திரள்கிறது என்பதால்[2] இடம் மாறித் தோன்றும் மண்ணீரல் திசுக்கள் மெக்கல்லின் குடல்நீட்சிகளில் காணப்படுகையில் டெக்னிடேட்டு(VII) உடன் கதிரியக்க முகப்பிடப்பட்ட Tc99எம் ஊசிமூலமாக உள்ளுக்குள் செலுத்தப்படுகிறது[3]
அனைத்து டெக்னீசியம் உப்புகளும் சிறிய அளவில் கதிரியக்கத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றுள் சில சேர்மங்களின் வேதிப்பண்புகள் சில பயன்களை வெளிப்படுத்துகின்றன. அந்நிகழ்வுகளில் குறைவான கதிரியக்கப் பண்பு கொண்ட டெக்னீசியம் சேர்மங்கள் பயன்படுத்தப்பட்டு கதிரியக்கப் பண்பு தற்காலிகமானதாகக் கருதப்படுகிறது. டெக்னீசியம் 97 இன் அரைவாழ்வுக் காலம் 2.6 மில்லியன் ஆண்டுகள் என்பதால் இத்தகைய பயன்களுக்கு இந்த ஒரிடத்தான் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.
டெக்னிடேட்(VII) கரைசல்கள் இரும்பு மேற்பரப்புகளுடன் வினைபுரிந்து டெக்னீசியம் ஈராக்சைடுகளைத் தருகின்றன. இதனால் எதிர் மின்முனை அரிப்புத் தடுப்பியாக இதனால் செயல்பட முடிகிறது.