பெலின்-பூராகா பட்டகம் (Pellin–Broca prism) என்பது மாறாத விலக்கத்தைக் கொண்ட நிறப்பிரிகைத் திறனையுடைய பட்டகமாகும். இது அபி பட்டகத்திற்கு இணையானது.
பிரான்சு நாட்டைச் சார்ந்த பெலின் மற்றும் ஆந்த்ரே பூராகா ஆகிய இயற்பியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது.[1]
இது நான்கு பக்கங்களைக் கொண்ட கண்ணாடி பட்டகமாகும். 90°, 75°, 135°, மற்றும் 60° ஆகிய பக்கக் கோணங்களைக் கொண்டது. AB என்ற பக்கம் வழியாக உள்ளே நுழையும் ஒளி, BC என்ற பக்கம் வழியாக முழு அக எதிரொளிப்பை அடைகிறது. AD என்ற பக்கம் வழியாக வெளியேறுகிறது. உள் நுழையும் ஒளியில் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளி மட்டும் 90° கோணம் ஒளி விலகலடைகிறது. O என்ற புள்ளி வழியாகச் செல்லும் அச்சின் வழியாகப் பட்டகத்தைச் சுழற்றும் போது BC ஒளி எதிரொளிப்புப் பக்கம் வழியாகச் செல்லும் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் 90° கேணம் விலகலடைகிறது.[2]
இந்த பட்டகம், சீரொளியிலிருந்து வரும் பல அலைநீளங்களிலிருந்து, ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைப் பிரிக்க உதவுகிறது. இந்தக் காரணங்களுக்காக ஒளி அணு அலைமாலையியலில், இவ்வகை பட்டகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[3]