பேகம் குர்ஷித் மிர்சா | |
---|---|
பிறப்பு | குர்ஷித் ஜஹான் 4 மார்ச்சு 1918 அலிகர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 8 பெப்ரவரி 1989 லாகூர், பாக்கித்தான் | (அகவை 70)
மற்ற பெயர்கள் | ரேணுகா தேவி |
கல்வி | அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1937 - 1985 |
பெற்றோர் | வாஹீத் ஜஹான் பேகம் (தாயார்) சேக் அப்துல்லா (தந்தை) |
வாழ்க்கைத் துணை | அக்பர் மிர்சா (தி. 1935; his death 1971) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | இரசீத் ஜகான் (சகோதரி) அமீதா சைதுசாபர்(மைத்துனி) சல்மான் ஐதர் (உறாவினர்) |
பேகம் குர்ஷித் மிர்சா ( Begum Khurshid Mirza ), தனது திரைப் பெயரான ரேணுகா தேவி (1918 – 1989) என்றும் அழைக்கப்படும் இவர் பாக்கித்தான் தொலைக்காட்சி நடிகையும் மற்றும் பிரிவினைக்கு முந்தைய கால திரைப்பட நடிகையும் ஆவார்.[1][2]
பேகம் குர்ஷித் மிர்சா, 1918 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அலிகரில் பெண்கள் கல்லூரியின் நிறுவனர்களான சேக் அப்துல்லா மற்றும் வாஹீத் ஜஹான் பேகம் ஆகியோருக்கு குர்ஷித் ஜெஹான் என்ற பெயரில் பிறந்தார்.[3] இவரது தந்தை ஒரு வழக்கறிஞரும் மற்றும் பரோபகாரரும் ஆவார். இவரது தந்தை இந்தியாவில் பெண்கள் ஆங்கில அடிப்படையிலான கல்வியின் முன்னணி முன்னோடியாக இருந்தார். மேலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அலிகர் மகளிர் கல்லூரியை நிறுவினார்.[4] இவரது மூத்த சகோதரி இரசீத் ஜகான் ஒரு முக்கிய உருது மொழி எழுத்தாளராகவும் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.[5] 1935 ஆம் ஆண்டு அக்பர் மிர்சா என்ற காவல்துறை அதிகாரியை மணந்து 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார் [1][6] 1963 இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[7][8]
குர்ஷித் , ரேணுகா தேவி என்ற திரைப் பெயரில் பாம்பே டாக்கீஸின் தேவிகா ராணியால் இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.[3]
இவர் ஜீவன் பிரபாத் (1937), பாபி (1938), பக்தி (1939), பரி திதி (1939) மற்றும் நயா சன்சார் (1941) ஆகிய படங்களில் நடித்தார். மேலும் வெற்றிப் படங்களான சஹாரா (1943), குலாமி (1945) , சாம்ராட் சந்திரகுப்தா (1945) ஆகியவற்றில் முன்னணிப் பெண் பாத்திரத்திலும் நடித்தார். இவர் தனது சில திரைப்படங்களுக்கு பாடல்களையும் பாடியுள்ளார்.[8]
பிப்ரவரி 1945 இல் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[8]
பேகம் குர்ஷித் மிர்சா, தி அப்ரூட்டட் சப்ளிங் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார்.[9] இது பாக்கித்தான் மாத இதழான ஹெரால்டில் ஆகஸ்ட் 1982 முதல் ஏப்ரல் 1983 வரை ஒன்பது பகுதி தொடராக வெளிவந்தது. பின்னர், இந்தத் தொகுப்பு 2005 இல் இவரது மகள் லுப்னா காசிம் என்பவரால் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டது.
1960 முதல், இவர் பல இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார், ஷாகித் அஹ்மத் தெல்வியால் வெளியிடப்பட்ட சாகி என்ற உருது பத்திரிகைக்கு சிறுகதைகள் எழுதினார்.[8] பின்னர், இவர் தனது சிறுகதைகள் அனைத்தையும் மெஹ்ரு கி பச்சி என்ற தலைப்புடன் தொகுத்தார்.[8]
குவெட்டாவில் இருந்த நாட்களில், மிர்சா பெண்கள் நிகழ்ச்சியை நடத்தினார். மேலும், ரேடியோ பாக்கித்தானுக்காக நாடகங்களையும் எழுதினார்.[7] இவர் ஷோலா என்ற புனைப்பெயரில் மத வசனங்களையும் மீலாதுன் நபி கூட்டங்களுக்கான பிரசங்கங்களையும் செய்தார்.
பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, குர்ஷித் மிர்சா அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் தன்னார்வலராக பணியாற்றினார்.[1] இவரது கணவர் குவெட்டாவுக்கு மாற்றப்பட்டபோது, இஸ்மாயில் கில்லி என்ற கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கத்தின் பொறுப்பை ஏற்றார்.[1] வானொலியில் பெண்களின் பிரச்சனைகள் பற்றிய நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்.[1]
இவரது கடைசி காலத்தில், இலாகூரில் தங்கியிருந்தார். அங்கு இவர் 8 பிப்ரவரி 1989 அன்று இறந்தார் [3] பின்னர் மியான் மிர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[3]