பைசாந்தியத் திரேசு மீதான மங்கோலியப் படையெடுப்பு என்பது 1263-64ஆம் ஆண்டுகளின் குளிர்காலத்தின்போது நடைபெற்றது. தனது சகோதரன் இரண்டாம் கய்கவுசை விடுவிப்பதற்காகப் பைசாந்தியப் பேரரசைத் தாக்குமாறு தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கேயிடம் உரூமின் செல்யூக் சுல்தானான இரண்டாம் கய்குபாத் கோரிக்கை வைத்தார்.[1]
உறைந்திருந்த தன்யூபு ஆற்றை மங்கோலியர்கள் 1263-64ஆம் ஆண்டுகளின் குளிர்காலத்தில் கடந்தனர்.[2] 1264ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் எட்டாம் மைக்கேலின் இராணுவங்களைத் தோற்கடித்தனர். தோற்கடிக்கப்பட்ட இராணுவத்தில் பெரும்பாலானவர்கள் தப்பித்து ஓடினர். பைசாந்தியப் பேரரசர் இத்தாலிய வணிகர்களின் உதவியுடன் தப்பித்தார். இதற்குப் பிறகு திரேசானது சூறையாடப்பட்டது.
கய்கவுசு விடுவிக்கப்பட்டார். எட்டாம் மைக்கேல் பெர்கேயுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதில் தன் மகள்களில் ஒருவரான யூப்ரோசைனி பலையோகினாவை நோகைக்கு மணம் முடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டார். கிரிமியா மூவலந்தீவை ஒட்டு நிலமாகக் கய்கவுசிடம் பெர்கே அளித்தார். கய்கவுசு ஒரு மங்கோலியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார். நாடோடிக் கூட்டத்திற்குத் திறையை மைக்கேல் செலுத்தினார்.
திரேசு மீதான பெர்கேயின் படையெடுப்பான இப்போரால் தான் 1260களில் நிக்கோலோ மற்றும் மாபியோ போலோவின் பயணமானது தாமதப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3]