பைலியம் பிலோபாட்டம் | |
---|---|
பெண் பூச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம்
|
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பாசமடோடே
|
குடும்பம்: | |
பேரினம்: | பைலியம்
|
இனம்: | பை. பிலோபாட்டம்
|
இருசொற் பெயரீடு | |
பைலியம் பிலோபாட்டம் கிரே, 1843 |
பைலியம் பிலோபாட்டம் (Phyllium bilobatum) என்பது இலைப் பூச்சிக் குடும்பமான பிலிடேவில் உள்ள ஓர் சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு மற்றும் மலேசியா பகுதிகளில் காணப்படுகிறது.[1] இந்த சிற்றினத்தினை முதல் முதலாக 1843ல் இங்கிலாந்து விலங்கியலாளர் ஜார்ஜ் ராபர்ட் கிரே விவரித்து பைலியம் பிலோபாட்டம் எனப்பெயரிட்டார். பைலியம் பேரினத்தின் கீழ் துணைப்பேரினமான பைலியம் வைக்கப்பட்டது. பைலியம் பேரினத்தில் கீழ் உள்ள மற்றொரு துணைப்பேரினம் புல்சிரிப்பைலியம் ஆகும். பிலிப்பைன்சில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் பூச்சி ஒன்றின் ஒற்றை மாதிரியானது இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு கிரே இதனைப் பூச்சிகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளார்.[2]
பைலியம் பிலோபேட்டம் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. ஆனால் மலேசியப் பதிவுகளில் பிற இனமாக அறியப்படுகிறது.[2]
பைலியம் பிலோபாட்டம் சுமார் 2.9 அங் (7.4 cm) நீளம் வரை வளரும் பூச்சியாகும். மற்ற இலைப் பூச்சிகளைப் போலவே இதுவும் உருமறைப்பில் இலைபோல் தோற்றமளிக்கின்றது. பொதுவாக நிறம் பச்சை நிறத்தில் உள்ளது. இறக்கைகள் அடர் நிற கோடுகள் போன்று இலையின் நரம்புகளை ஒத்ததாக அமைக்கப்பட்டிருக்கும். கை கால்கள் பெரிய விளிம்புகள் அல்லது மடல் போன்ற நீட்டிப்புகளைக் கொண்டுள்ளன. ஆணின் உடல் மெல்லியதாக இருக்கும். பெண்ணின் உடல் அகன்று காணப்படும். ஒற்றை இணை இறக்கைகள் பூச்சியின் முதுகில் தட்டையாக உள்ளன. மேலும் வயது முதிர்ந்த ஆண் பூச்சி மட்டுமே பறக்கவல்லது.[3] பெண்ணின் அடிவயிறானது மார்பு பகுதியில் இணையும் இடத்தில் குறுகலாகக் காணப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கண்டங்கள் முன்னால் இருப்பதை விட அகலமாகவும், நான்காவது மற்றும் ஐந்தாவது கண்டங்கள் குறுகலாகவும் இருக்கும். ஆறாவது மற்றும் ஏழாவது பகுதிகள் மடிப்புகளுடன் காணப்படும். மீதமுள்ள பகுதிகள் குறுகி அடிவயிற்றின் முனைவரைக் காணப்படும். முதல் இணைக் கால்களில் தொடை எலும்பு முன்புறமும் பின்புறமும் ஓர் விளிம்புப் பட்டையினைக் கொண்டுள்ளது. இப்பட்டையின் வெளிப்புறம் பல்வரிசையுடனும் உள் பக்கம் மென்மையாகவும் காணப்படும். கால் எலும்பின் முட்டியிலும் பட்டைக் காணப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இணைக் கால்களிலும் பட்டைகள் உள்ளன.
இலைப் பூச்சியானது தாவர உண்ணி வகையைச் சார்ந்தது. இது மரங்கள் மற்றும் புதர்களின் உள்ள இலைகளை உண்ணுகின்றது. இவை ஹெமிமெட்டாபொலஸ் எனப்படும் குறை உருமாற்ற முறையில் வளர்கின்றன. முட்டை பொரித்தவுடன் முட்டையிலிருந்து நிம்ஃப் எனப்படும் இளம் உயிரி தோன்றுகிறது. இது பலமுறை தோலுரித்து முதிர் உயிரியாக மாறுகிறது.[4] இளம் உயிரிகள் வாடிய மற்றும் காய்ந்த இலைகளின் அடியில் மறைந்து காணப்படும். இளம் உயிரியானது காய்ந்த இலைகளின் நிறத்தினை ஒத்தே காணப்படுகிறது. ஆண் பெண் பூச்சிகளின் முன் மார்பு கண்டத்தில் ஒருவித துர்நாற்றம் தரக்கூடிய சுரப்பினை சுரக்கின்ற சுரப்பிகள் உள்ளன. இந்த பூச்சிக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும்போது விரும்பத்தகாத வாசனையான தற்காப்பு சுரப்பிகள் சுரக்கும் சுரப்பின் மூலம் ஏற்படுத்துகின்றன.