பிரிசுட்டு பல்கலைக்கழகம் (Ponnaiyah Ramajayam Institute of Science and Technology) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1] பொன்னைய்யா இராமானுசம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சுருக்கமாக பிரிசுட்டு பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகிறது. பொறியியல், அறிவியல், கல்வி, மேலாண்மை, கலை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி வகுப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.[2] பொன்னைய்யா இராமநுசன் குழுமம் என்பது தமிழகத்தில் கல்விப் பணியாற்றும் குழுமங்களீல் ஒன்றாகும்..[2]
பொன்னைய்யா இராமானுசம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 1994 ஆம் ஆண்டு பேராசிரியர் பி.முருகேசனால் நிறுவப்பட்டது. முதலில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரால் அறியப்பட்டது. முருகேசன் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணினி கல்வியை அறிமுகப்படுத்த இந்த நிறுவனத்தை நிறுவினார். அதன்பிறகு, கணினி பயன்பாடுகளில் முதுநிலை பட்டய திட்டங்களை வழங்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இந்த நிறுவனம் இணைந்தது..[2]
அதன்பிறகு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரி என விரிவுபடுத்தப்பட்டது.
கல்லூரி அதன் பின்னர் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வேண்டி தனது முன்மொழிவை சமர்ப்பித்தது.[3]
2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று பல்கலைக்கழக மானியக்குழுவின் நிபுணர் குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நிறுவனம் பல்கலைக்கழகத் தகுதி பெற்றது. தொலைதூரக் கல்விக் குழுவும் இந்நிறுவனத்தின் கல்வியியல் பாடத்திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு 2015 ஆம் ஆண்டில், நிறுவனத்திற்கு "பி" நிலை தகுதியை வழங்கியது.[4] 150 மருத்துவ படிப்பு இடங்களை வழங்க நிபந்தனை அனுமதி பெற்றிருந்த இந்த நிறுவனம், 2017–18 மற்றும் 2018–19 கல்வியாண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் துணைச் செயலாளர் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், கல்வி, பார்மசி, மேலாண்மை, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் சென்னையில் நல்லூர் என்ற இடத்தில் ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் வழங்கப்படுகின்றது.
படிப்புகளுக்கான சேர்க்கை அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வில் மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகும். மற்ற படிப்புகளுக்கு, முந்தைய தொடர்புடைய கல்விப் படிப்புகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கைக்கு தகுதி பெற, மாணவர்கள் பட்டயப் படிப்புகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல், உயிரி தொழில்நுட்பம், உயிரியல் அல்லது தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றுடன் இயற்பியல் மற்றும் கணிதத்தை கட்டாய பாடங்களாகக் கொண்ட 10+2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களில் மாணவர்கள் குறைந்தபட்சம் 45% (அல்லது ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 40%) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.[5]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)