பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering, GATE) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம்,கல்வித் துறையில் இயங்கும் கேட்-தேசிய ஒருங்கிணைந்த வாரியத்திற்காக ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து நடத்தும் நாடாளவிய ஆண்டுத் தேர்வாகும். இத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் மனிதவள அமைச்சகத்தின் பல்வேறு பட்டமேற்படிப்பு திட்டங்களில் சேரவும் நாட்டின் பொறியியல்/தொழில்நுட்ப கல்லூரிகள்/கழகங்களில் வேறு சில அரசு கல்விநிதி/உதவிகளை பெறவும் முடியும்.கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் அல்லது முதுநிலை அறிவியல்/கணிதம்/புள்ளியியல்/கணினி செயல்பாடுகள் பட்டம் பெற்றவர்கள் தங்கள் மேற்படிப்பை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் முதுநிலை/முனைவர் பட்டங்களுக்கும் அல்லது தொடர்புள்ள அறிவியல் முனைவர் திட்டங்களுக்கும் சேர தகுதி பேறுகின்றனர். கல்விநிதியுதவி பெற அக்கல்விச்சாலையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டமேற்படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துவியல் பாடதிட்டங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு கல்வியுதவி பெற கேட் தகுதி தேவையில்லை.
சில கல்விநிலையங்கள் பட்டமேற்படிப்பில் சேர்க்க கேட் தகுதியை கட்டாய விதியாக வைத்துள்ளனர். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு (CSIR) நிறுவனத்தின் இளநிலை ஆய்வாளர்கள் உதவிக்கும் அவர்கள் அரவணைக்கும் திட்டங்களின் ஆய்வாளர்களுக்கும் இத்தகுதி தேவைப்படுகிறது. சில அரசு நிறுவனங்கள் அறிஞர்/பொறியாளர் வேலையிடங்களுக்கு கேட் தகுதியை வேண்டுகின்றனர்.
அண்மைக் காலங்களில் பல கல்வி நிபுணர்கள் கேட் தேர்வினை, இவ்வகைப் போட்டித்தேர்வுகளில் மிகக் கடினமான ஒன்று என பகர்கின்றனர். மேலும் இந்திய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு போன்றே மிக கடினமான வகையில் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள பல பல்கலைக்கழகங்களும் யெர்மானியிலுள்ள சில தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் தத்தம் கல்லூரிகளில் மேற்படிப்புகளில் சேர கேட் தேர்வு மதிப்பெண்களையும் ஓர் அளவுகோலாக கொண்டுள்ளன.
2012ஆம் ஆண்டில் இருந்து கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை இணையம் மூலம் மட்டுமே நடைமுறைப் படுத்தப்படுகிறது. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் வண்ணம் விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டன. பெல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் ஓ.என்.ஜி.சி. போன்ற பல பொதுத் துறை நிறுவனங்கள் கேட் தேர்வையே தங்களது தகுதிச் சுற்றுத் தேர்வாக நடைமுறைப் படுத்தின.
இந்தியத் தொழில்நுட்பக்கழகம், பாம்பேவினால் இந்த நுழைவுத் தேர்வு நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கேட் நுழைவுத் தேர்வில் புதிய சில நடைமுறைகள் உட்புகுத்தப்பட்டன. மகளிர் விண்ணப்பதாரர்கள் மற்றும் சீர்மரபினர், மலைச்சாதியினர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.750 எனவும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆடவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை பெருவாரியான துறைகளுக்கு இணைய வழி நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐந்து துறைகள் மட்டும் பழைய முறையே பின்பற்றப்படுகிறது. விண்ணப்ப நடைமுறைகள் செப்டம்பர் முதலாம் தேதி முதல் துவங்குகின்றன. இணைய வழித் தேர்வு எழுதுவோருக்கு நான்கு வாரங்களின் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வுகள் நடைபெறும். முதல் தேர்வு சனவரி இருபதாம் தேதி துவங்குகிறது.2014 ம் ஆண்டு கேட் தேர்வு 4 கட்டமாக நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மார்ச் பதினைந்தாம் தேதி வெளியிடப்படும்.
இந்திய அறிவியல் கழகம் மற்றும் 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் ஆகிய 8 நிறுவனங்களில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் கேட் தேர்வை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்கும்.
நிறுவனம் | கேட் தேர்வை நடத்திய ஆண்டு |
---|---|
இந்திய அறிவியல் கழகம் | 1984, 1990, 1996, 2002, 2008, 2016. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை | 1985, 1991, 1997, 2003, 2011. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி | 1986, 1992, 1998, 2004, 2012. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை | 1987, 1993, 1999, 2005, 2013. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் | 1988, 1994, 2000, 2006, 2014. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் | 1989, 1995, 2001, 2007, 2015. |
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி | 2009, 2017 |
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி | 2010. |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)