போரோ (Poro), புர்ரா அல்லது புர்ரோ என்பது சியேரா லியோனி, லைபீரியா, கினியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளில் வழக்கில் உள்ள ஒரு ஆண்களின் இரகசிய சமுதாயம் ஆகும். இது மாண்டே மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சில சமயங்களில் இது வேட்டைச் சமுதாயம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆண்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக ஏற்கப்படுகின்றனர்.[1]
கிபி 1000 அளவில் இப்பகுதிகளுக்குப் புதிதாக வந்த மாண்டே மக்கள் அறிமுகப்படுத்திய பண்பாட்டின் ஒரு பகுதியே போரோ.[2] போரோவுடன் தொடர்புடைய இரண்டு சமுதாயங்கள் சியேரா லியோனியில் உள்ளன. இவை யஸ்சி, சாண்டே என்பன. முதலாவது பொதுவாகப் பெண்களுக்கு உரியது எனினும், சில சடங்குகளுக்குப் போரோக்களும் அநுமதிக்கப்படுவர். சாண்டே சமுதாயம் பெண்களுக்கு மட்டும் உரியது. லைபீரியாவில் போரோவுக்குச் சமமான பெண்கள் சமுதாயம் சாண்டே ஆகும். யஸ்சியில் உறுப்பினரான எல்லாப் பெண்களும் சாண்டேயிலும் இருப்பர்.
மேற்படி மூன்று சமுதாயங்களிலும், போரோவே முக்கியமானது. எல்லாத் தாயக மக்களும் இதன் விதிகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள். இது முதன்மையாக ஒரு தந்தைவழிச் சமூகத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இதில் குழந்தைகளும் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்கான சடங்கு அவர்களைப் போரோ பற்றைக்குள் எடுத்துச் சென்று திரும்பக் கொண்டுவருவதை உள்ளடக்குகிறது.[3]
போரோவில் மதம்சார் அம்சங்களும், குடிசார் அம்சங்களும் அடங்கியுள்ளன. சிறுவர்கள் வயது வந்ததும் ஒரு சடங்குடன் இச் சமுதாயத்துள் ஏற்கப்படுவது மதம் சார்பானது. போரோ சமுதாயம் ஒரு வகையான உள்ளூர் ஆட்சி அமைப்பாகத் தொழிற்படுகிறது. விதிகளை உருவாக்குவதும், போர், அமைதி முதலியன குறித்து முடிவெடுப்பதும் இந்த அமைப்பே.